Friday, 24 April 2015

சென்னை விமான நிலையம்.

சென்னை விமான நிலையம்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 42–வது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. இம்முறை தற்காலிக மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது.
விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு முனையத்தில் மேற்கூரைக் கண்ணாடிகள் முதல் முறையாக 2013-ல் விழத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று வரை கண்ணாடிகள், கிரானைட் கற்கள், லிஃப்ட் கண்ணாடிகள், மேற்கூரை கண்ணாடிகள், ஃபால்ஸ் சீலிங் வகையிலான மேற்கூரை என அடிக்கடி உடைந்து விழுவது வழக்கமாகி வருகிறது.
இதனால் இதுவரை பலர் காயமடைந்தும் உள்ளனர். அடிக்கடி உடைந்த பகுதிகள் பழுது பார்க்கவும்படுகிறது. இருப்பினும் விபத்துகள் தொடர்கதையாகத் தான் இருக்கிறது.
சென்னை விமான நிலையம் என்றால், அங்கே ஏதேனும் உடைந்து விழாமல் இருந்தால்தான் செய்தி என்ற அளவுக்கு இந்த விபத்துகள் மிக சாதாரணமானதாக பார்க்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுவது தொடர்பாக ட்விட்டர்வாசிகள் அவ்வப்போது பதிவுகள் இட்டு வருகிறார்கள். அதன் தொகுப்பு இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...
Pragadeesh Mannai ‏@Pragadeesh_G - கூரையில்லா விமான நிலையம் என்ற பெருமையை சென்னை விமான நிலையத்துக்கே குடுக்கலாம்..., ஹய்யோ ஹய்யோ
Kuttybalaji ‏@balaji4165 - திடீர் திடீர்னு உடையுதாம் ஒழுகுதாம் ஆனா இன்னும் யார் தலையிலையும் விழலையாம் #சென்னை_ஏர்போர்ட்
சிநேகமுடன் சிவா ‏@shivafreedom - 41 ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் விபத்து, எல்லா ஊர்லேயும் பிளைட் தான் கீழே விழும் ஆனா இங்க ஏர்போர்ட்டே கீழே இடிஞ்சி விழுது.
ஊரோடி™ ‏@RaguC - ஆளுக்கு ஒரு இரும்புக் குடை கொடுத்தா நல்லாருக்கும், எப்ப பிஞ்சு விழும்னு கூரைய பாத்துட்டு நிக்க வேண்டியாதா இருக்கு. சென்னை ஏர்போர்ட் திகில்.
நாடோடி மாம்ஸ் ‏@kkarthic - இடிஞ்சி எதுவும் விழலை இதுவரை!! ஆமா சென்னை ஏர்போர்ட்ல தான் இருக்கேன். ;-))
ரோபோ ரோமியோ ‏@abdul_civil - சென்னை ஏர்போர்ட் 40 வது முறையாக கண்ணாடி விழுந்து சாதனை. 100 தடவை விழுந்து உலகப் புகழ் பெற வாழ்த்தும் அண்ணனின் அடி விழுதுகள்.
Dinesh Kumar ‏@DinuVj - இந்நேரம் நம்ம ஏர்போர்ட் நாராயணசாமி இருந்திருந்தா, அடிக்கடி உடைந்து விழுகும் சென்னை ஏர்போர்ட் மேற்கூரையை 15 நாளில் சரி செஞ்சிருப்பார்.
பட்டிகாட்டு வாயாடி ‏@pattikaduu - 39வது தடவையா சென்னை ஏர்போர்ட் கண்ணாடிவிழுந்து உடஞ்சிருச்சாம். ஒரு வேலை உடைஞ்ச கண்ணாடியவே திரும்பத் திரும்ப பசை போட்டு ஒட்ட வைக்குராங்களோ.
பிரகாஷ் ‏@PrakashMahadev - சென்னை விமான நிலையத்தில் 39வது விபத்து: கண்ணாடி கதவு உடைந்து ஊழியர் காயம் # விமானத்துல போனா காணாம போயிடுது .. ஏர்போர்ட் போனா விபத்து ஆகிடுது.
நாகராஜசோழன் ‏@kandaknd - உலகத்துலயே பணக்கார ஏர்போர்ட் சென்னை ஏர்போர்ட்டுதான் கூரை எத்தனை தடவ இடிஞ்சு விழுந்ததுனு எண்ணி சொல்ல ஒரு ஆளை வேலைக்கு வச்சிருக்காங்கனா பாருங்க.
வீம்பு ‏@kadivaalam - சென்னை ஏர்போர்ட் மீண்டும் ஒரு கண்ணாடிக்கதவு உடைந்தது#செய்தி#இனிமே 'இன்று கண்ணாடிக் கதவு உடையவில்லை' ன்னு செய்தி வந்தாதான் அதிசயம்.
வெங்கடேஷ் ஆறுமுகம் ‏@venkatapy - விடுப்பா... விடுப்பா... மனைவின்னா எரிஞ்சு விழறதும் ஏர்போர்ட் கூரைன்னா இடிஞ்சு விழுறதும் சகஜம் தானே.
பாரதி ‏@BharathiBigB - மீனம்பாக்கம் ஏர்போர்ட்ல மறுபடியும் ஏதோ விழுந்து தொலஞ்சிடுச்சாமே :(( பேசாம அந்த கான்ட்ராக்ட்ட நாம எடுத்தா நல்ல வருமானம் கிடைக்கும் போலயே :))
முனிஸ்காந்த் ‏@smartsuruli - நெசமா அது சென்னை விமான நிலையம்தானா இல்ல சங்கர் படத்துக்கு போட்ட செட்டா??? #திடிர் திடிர்னு சாயுதாம்
சிங்கார வேலன் ‏@AnishBon - சென்னை விமான நிலையம் இன்னும் இடியுமாம், பேய் இருக்காம்,, பிசாசு இருக்காம்,,கிளப்பி விட்டுருவோம்!!

போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்

போபாலில் விச வாயு நினைவுச் சின்னம் பற்றி விசாரித்தபோது பலரும் போபால் நினைவு மருத்துவமனையைப் பற்றியே சொன்னார்கள். போபால் நினைவுச்சின்னம் பார்க்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. கெடுபிடிகள்.. அசுரன் பிடித்த நகரம் போல் சோபை இழந்து இருக்கிறது பழைய போபால்… யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்கு அருகாமையில் சுலபமாய் 5 கி மீ பகுதியில் வசிப்பவர்கள் படும் சிரமங்களை நினைத்துப் பார்க்கவே வேதனை பெருகுகிறது

night_mare1 போபால் நினைவுச்சின்னம் பார்க்க கெடுபிடிகள் சோர்வைத் தந்தன. முகப்பு காவலாளிகள் கும்பல் உள்ளே அனுமதிக்க முடியாது என்றார்கள். ஆங்கிலம் எதற்கும் பயன்படாது போலிருந்தது. வற்புறுத்தவே ஒரு காவலாளிகூடவே வந்து பொது நல அதிகாரியைப் பார்க்கச் சொன்னார்கள். அவர் இன்னொருவரை துணைக்கனுப்பினார். இருவரும் கூட இருக்க நினைவுச் சின்னத்தைப் பார்த்தோம். போபால் பேரழிவின் முப்பதாவது ஆண்டை நினைவு கூற ஒரே ஒரு மலர்வளையம் மட்டுமே நினைவுச்சின்னத்தின் கீழ் இருந்தது. ஒரே ஒரு மலர்வளையம் வைக்க மட்டும் அனுமதியா. அல்லது யாரும் கண்டு கொள்ளவில்லையா என்ற கேள்வி மனதில் வந்தது. ” ஹோப் அண்ட் ஹோமேஜ் ” என்ற ஆங்கில எழுத்து வரிகள் மின்னின.புகைப்படம் எடுத்த கணத்திலேயே உடனே கிளம்பச் சொன்னார்கள். அந்த இரு காவலாளிகளும் நாங்கள் வெளியேறுவரை முகப்பு கதவு வரை எங்கள் கூட இருந்து வெளியே அனுப்பி வைத்தார்கள்., அதன் பின்புறம் இருந்த 6 கி,மீ அப்பால் இருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்குள் நுழைந்து விட்டோம். சில புகைப்படங்கள் எடுத்தோம். துரத்திவந்தவர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பினர், உள்ளே கொட்டிக் கிடக்கும் கழிவுகள் பல ஆயிரம் டன்கள் நிலத்தையும் , நீரையும் தொடர்ந்து மாசுபடுத்தி மக்களை நோயாளிகளாகவும் பிணங்களாகவும் ஆக்கியிருக்கிறது. திருப்பூரில் சாயக்கழிவுகள் அங்கங்கே கொட்டிக்கிடப்பது ஞாபகத்திற்கு வந்தது.இன்னும் போபால் கார்பைடு தொழிற்சாலைக்குள் 18,000 டன் நச்சுக்கழிவு கொட்டிக்கிடக்கிறது. ( திருப்பூரின் இவ்வாண்டின் பின்னலாடை சார்ந்த அந்நிய செலவாணி வருமானம் 18,000 கோடி ரூபாய் என்ற ஞாபகம் வருகிறது.). முப்பதாண்டுகளுக்கு முன்னதாகவே 2000 லாரிகள் கொள்ளுமளவு கழிவு அங்கிருந்தது. கழிவைக் கொட்ட 32 ஏக்கர் பரப்பு குளம் அமைக்கப்பட்டு அதில் கழிவு தேங்கியிருக்கிறது. இது போபால் நகரைச்சுற்றியிருக்கும் மண்ணையும் நிலத்தடி நீரையும் நச்சாக்கி விட்ட்து.இந்த நச்சுக் கழிவை எரிக்கும் முயற்சியில் 10 பேர் பார்வையிழந்ததால் அதுவும் கைவிடப்பட்டது. குஜராத் மாநிலத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகள் அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட்து. ஜெர்மனிக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு ஜெர்மன் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இவற்றை அக்ற்றக்கோரி அமெரிக்க நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் அங்கு நிராகரிக்கப்பட்டன.புதிய டவ் நிர்வாகமும் மத்திய அரசும் இதில் கண்ணாமூச்சியும், பாராமுகமும் காட்டுகின்றன.
சுற்றிப்பார்த்த போது தொழிற்சாலையின் சுவர்களில் நிறைய வாசகங்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருந்தன.” டவ் கெமிகல்ஸ் நிர்வாகமே. இந்தியாவை விட்டு வெளியேறு. இனி உனக்கு இங்கு வேலை இல்லை” “ குற்றவாளிகளை தண்டிக்கவும் “. “ நஷ்ட ஈட்டுத் தொகையை சரியாக வழங்கு. தொடர்ந்த மருத்துவ வசதி செய்து கொடு” “அரசே.. கெட்டுப் போன சுற்றியுள்ள பகுதிகளை சீர் அமை . ” பாதிகப்பட்டவர்களுகு அவர்களின் உடல் நலம் பற்றிய புத்தக ஆவணங்களை வழங்கு “ என்றபடி அந்த வாசகங்கள் இருந்தன,
முப்பதாண்டுகளுக்கு முன்னால் டிசம்பரின் அந்த குளிர்நாளில் வழக்கமான பராமரிப்பு பணியின்போது துருப்பிடித்த குழாய்கள் கசிந்து ரசாயனம் தேக்கி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் பாய்ந்தது. புகை மண்டலம் மேலெழுந்து தொழிற்சாலையைத் சூழ்ந்து கொண்டது. மரணப்பிடிக்குள் போபால் நகரம் வந்து விட்டது.கண் எரிச்சல், மூச்சுத்திணறில் மக்கள் மூச்சடைத்தது. பலர் செத்து விழுந்தனர். பலர் கண்ணில் பட்ட ( எரியும் கண் காட்டிய ) கழிவுநீர்க் குட்டைகளில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டனர். வாந்தியும் , மலமுமாக விழுந்து தவித்தனர். உடனடியாக 10,000 பேர் செத்துமடிந்தனர். தொழிற்சாலையை சுற்றி இருந்த 6 லட்சம் மக்களின் நுரையீரல்களில் விச வாயு புகுந்து இன்னும் பாதிப்பைத் தந்து வருகிறது. செத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பது போல பாதிக்கப்பட்டவர்கள் குற்றுயிரும் குலையுமாக வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சம் பேர் 15 வயதிற்கும் குறைவானவர்கள். அவர்களில் பலரை விசவாயு பற்றிய 30 ஆண்டு நினைவு நாள் மேடையில் , கூட்டத்தில் போபால் விசவாயு பீடிட் மகிளா உத்யோக் சங்காதன் ஏற்பாடு செய்திருந்த சுல்தானியா ஜனன மருத்துவமனை பூங்காவில் நடந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது. மேதா பட்கரின் ஆவேசமான பேச்சில் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது ,நானும் என் பங்கிற்கு ஒரு கவிதையை எழுதினேன்.
எங்கள்து கண்கள் பறிக்கப்பட்டபின்
எங்கள் உயிர்கள் பிடுங்கப்பட்ட பின்
நாங்கள் நடைபிணங்களான பின்
நீங்ள் செய்ய ஒன்றிருக்கிறது.
வருடாந்திர திதிக் கூட்டம்
மலரஞ்சலி
கொஞ்சம் பூக்கள்
சிலவரிகளில் கொஞ்சம் கவிதைகள்.
பிறகு அடுத்த வருட்த்திற்கு காத்திருப்பது.
மேத்தா பட்கர் முழங்கிக் கொண்டிருந்தார்” “மோடியிடமும் , முதலமைச்ச்ர் சிவராஜ் சவுகானிடமும் இன்னும் அதிகம் எதுவும் எதிர்பார்க்க முடியாது “
பூங்காவின் முகப்பில் மூன்று பொம்மைகள். நீதித்துறை, சட்டம், பன்னாட்டு கம்பனிகள் கம்பீரமாய எங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்ற நோக்கில் நின்று கொண்டிருந்தார்கள். மேத்தா பட்கர் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்திய விவசாய புரட்சி உரங்களைக் கட்டாயமாக்கி விட்டபோது பூச்சி கொல்லி மருந்துகளுக்காக, செயற்கை உரங்களின் உறபத்திக்காகத் தொடங்கப்பட்டதுதான் போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலை. செத்து விழுந்தவர்கள், மாடுகள் என்று எல்லோருக்கும் ஒரே இடத்தில் எரியூட்டு நடந்திருக்கிறது. அவை எரியூட்டப்பட்ட போது எழுந்த புகை அதைச் செய்த ராணுவத்தினரை பாதித்து மூச்சு திணற வைத்திருக்கிறது.
இன்னுன் பாதிப்பாய் 300% குறைப்பிரசவம். 200% சிசு மரணம் நிகழ்கிறதாம். இன்னும் 2 லட்சம் பேர் பாதிக்கபட்டு சிரம்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.உயிர் பழைத்தவர்களை பெரும் பாலும் தாற்காலிக பாதிப்பிற்கு உள்ளானவர்ளே என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.பாதித்த ஆறுமாதற்குப்பின் மத்திய பிரதேச அரசு 87 கோடி ரூபாய் ஒதுக்கி ஆரம்பத்தில் ரூ200 பிறகு 750 ரூபாயும் நிவாரணம் தந்தது. குடும்பத்திற்கு 1500 ரூபாய் . 13 ஆண்டுகளுக்குப் பின் யூனியன் கார்பைடு நிறுவன பங்குகள் விற்க முற்பட்டபோது உச்சநீதிமன்றம் தலையிட்டு 500 கட்டில்கள் கொண்ட சிறப்பு மருத்துவமனையை நிறுவி எட்டாண்டுகள் இலவச சிகிச்சை தர ஆணையிட்டது. அந்த மருத்துவம்னை வளாகத்தில்தான் நினைவுச்சின்னம் உள்ளது. ” ஹோப் அண்ட் ஹோமேஜ் ” என்ற ஆங்கில எழுத்து வரிகள் மின்னிக் கொண்டிருக்கிறது.நம்பிக்கை பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மையோருக்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரைதான் இழப்பீடு தரப்பட்டிருக்கிறது.
விபத்து நடந்த அடுத்த ஆண்டு “ போபால் விச வாயு கசிவுச் சட்டம் “ ஒன்றை மத்திய அரசு நிறைவேற்றி யூனியன்கார்படிடுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் ரூ1750 கோடியை இழப்பீட்டு வைப்புத் தொகையாக அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றமும் வழக்கு இந்தியாவில்தான் நட்த்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.இந்திய அரசு இரு மடங்குத் தொகையைக் கேட்ட்து. ஆனால் அதில் 15% தந்து நிர்வாகம் விலகிக் கொண்டது. பல்வேறு தன்னார்வக் குழுக்கள் நீதிமன்றத்தை அணுக 2010ல் தொழிற்சாலையின் இயக்குனர், செயல் தலைவருக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை தந்தது. உடனே அவர்கள் பிணையில் வெளிவந்து விட்டனர். மேல்முறையீடு நடந்து கொண்டிருக்கிரது இன்னும். அந்த்த் தீர்ப்பில் அதன் நிறுவனத்தலைவர் வாரன் ஆண்டர்சன் பற்றி ஒரு குறிப்பு இல்லை. அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனம் தன்னைக்குற்றவாளியாக்க இந்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நிராகரித்தது. வாரன் ஆண்டர்சன் மீது உயிர்ப்படுகொலைக்காக வழக்குமன்றம் பின் 10 ஆண்டு சிறை வழங்கினாலும் அவர் ஆஜராகாததால் தப்பியோடியக் குற்றவாளி என்றும், இந்திய அரசு அவரை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்ட்து. ஆண்டர்சனை ஒருமுறை கைது செய்து பின் மத்திய அரசு அவர் தப்பிப் போக வழிசெய்தது. உச்சநீதிமன்ற வழக்கொன்றும் கிடப்பிலேயே உள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை சொற்பமாகவே இதுவரை கிடைத்துள்ளது.
போபால் பேரழிவு பற்றி 1991 ல் மகேஷ் மதாஷ் என்பவரின் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது. பல ஆவணப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.
போபால் பேரழிவின் முப்பதாவது ஆண்டை நினைவுபடுத்துகிற விதமாய் ரவிகுமாரின் இயக்கத்தில் ”போபால்: ஏ பிரேயர் பார் ரெயின் “ என்ற திரைப்படம் வெளிவந்திருக்கிறது. யூனியன் கார்படு தொழிற்சாலையின் முக்கியஸ்தரான ஆண்டர்சன் சென்றாண்டு இறந்து போனதால் இப்படம் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கியிருந்தன. திலீப் என்ற ரிக்‌ஷா தொழிலாளிக்கு யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் வேலை கிடைக்கிறது.அந்த ஆலைக்குள் நடக்கும் விபத்து காரணமாக பணியாளர் ஒருவர் இறந்து விட அந்த வேலைக்கான எந்தத் தகுதியும் இல்லாவிட்டாலும் அவனுக்கு அந்த வேலை கிடைக்கிறது. பல அப்பாவிகள் முன்னமே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அதேபோல் அவனுடனும் சிலர் சேர்கிறார்கள். அவனின் சகோதரியின் திருமண நாளில் கசியும் விச வாயு கசிவு காரணமாக திருமண விழாவுக்கு வந்த பலர் செத்து விழுகிறார்கள். கண் எரிச்சல், உடல் உபாதைகளால் பலர் கழிவு நீர் குட்டைகளுக்குள் விழுந்து செத்துப்போகிறார்கள். மருத்துவமனைகளில் பிணக்குவியல். சாலைகளில் பிணக்குவியல்.வாந்தியும், பேதியுமாய் செத்து விழுபவர்கள் பலர்.. தொழிற்சாலையில் ஏற்படும் சிறு அளவிலான பழுது கண்டு பிடிக்கப்படுகிற போது மேலாளர் வெளியே சொல்லாதே . வேலை போய் விடும் என்று மிரட்டி விடுகிறான்.சாதாரண ஏழையான திலீப் தன் வாழ்க்கையை கார்பைடு தொழிற்சாலை வேலை மேம்படுத்தும் என்ற கனவில் இருந்தவனுக்குப் பேரிடி.. vissவிசவாயு கசிவு எவ்வித பராமரிப்பும் இல்லாமல் ஆலை ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு உள்ளூர் பத்திரிக்கையாளனிடம் சொன்னாலும் அதை பத்திரிக்கை எச்சரிக்கையாக்குவதற்கு முன் விபத்தும் நிகழ்ந்து விடுகிறது. திலீப் இந்த செய்திகளை முன்னம் உள்ளூர் பத்திரிக்கையாளன் மோத்வானிக்குச் சொல்லியிருக்கிறான். மோத்வானி விசாரிக்கையில் கார்பைடு ஆலையில் நடக்கும் பல் முறைகேடுகள் தெரிய வருகின்றன. எழுதுகிறார். தொழிற்சாலையைப் பார்வையிட வரும் ஆண்டர்சன் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை மாற்ற முயல்கிறார். அரசியல்வாதிகளை கைக்குள் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார். ” பாதுகாப்பு கெடுபிடிகள் எங்கள் நாட்டில் அதிகம் என்பதாலேயே இந்தியாவில் இந்தத் தொழிற்சாலையை அமைத்தோம். இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகள் இங்கும் என்றால் இங்கு அமைக்க வேண்டியதில்லையே “ என்கிறார். இப்படத்திலும் வாரன் ஆண்டர்சன் சற்றே மனிதாபிமானம் உள்ளவராகவும், கடின உழைப்பாளியாகவும் காட்டப்பட்டிருக்கிறார். திலீப்பின் குடும்பத்தைச் சார்ந்தே படம் இயங்குகிறது. விபத்துக்கும் முன் தொழிற்சாலை நடவடிக்கைகளும் சிறுசிறு விபத்துகளும் அதிர்வுடன் காட்டப்பட்டுள்ளன. விபத்திற்குப் பின் சொல்லப்பட்ட விசயங்கள் குறைவாகவே இருக்கின்றன.வாரன் ஆண்டர்சன், அரசியல்வாதிகள் மீதான விமர்சமும் குறைவாகவே இருக்கிறது. பலியானவர்களுக்கோ, பாதிக்கப்பட்டவர்களுக்கோ கிடைக்காத அநீதி பற்றி அதிகம் இப்படம் பேசவில்லை. என்பது குறைதான். ஆனால் இன்றைய தலைமுறை இப்பேரழிவை அறிந்து கொள்ள இப்படம் ஆதாரமாக அமைந்துள்ளது.போபால் மக்களின் வாழ்க்கையோடு வெகு நெருக்கமாக அப்படம் இல்லை. ஆனால் போபால் பற்றிய உண்மைகளைக் கொண்டிருந்த படம்.
மத்திய பிரதேச முதல்மந்திரி 30 ம் ஆண்டு நினைவை ஒட்டி அரசு ஏற்பாடு செய்திருந்த கூட்ட்த்தில் பேசும் போது “பாதிக்கப்பட்டவர்களின் குரலை சரியாகப் புரிந்து கொண்டுள்ளோம் “ என்று பேசினார்.பாதிக்கப்பட்டவர்களின் ஈனக்குரலினைச் சொல்லும் படம் இது.
கூட்டம் நடந்த் இடத்திற்கு மேற்பகுதியில் ஒரு ஏரி தென்பட்டது. சென்ற போது ஏரியின் மீது ஒரு அம்மன் கோவில் தென்பட்டது.. அம்மன் கர்ப்பகிரகத்தைச் சுற்றிலும் இரும்பு கம்பி பார்டர் . அதில் வேண்டுதல் போன்று சிறு சிறு துணிகள் கட்டப்படிருந்தன. அதில் பிளாஸ்டிக் பைகளும் நிறைய கட்டப்பட்டிருந்தன. சிறு துண்டுத்துணிகளுக்கு மாற்றா அவை. நேர்த்திக்கடனுக்கு பிளாஸ்டிக்கும் வந்து விட்டது தெரிந்தது. நடந்த களைப்பு தீர கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தேன். கால்கள் அம்மன் இருக்கும் திசையில் இருந்தன. உடல் ஊனமுற்றவன் ஒருவன் என்னைப் பார்த்து முறைத்தான். அவனை கோவிலைச் சுற்றிப்பார்த்தபோது கவனித்திருந்தேன். இரு கைகளையும் சேர்த்து கடவுளை நோக்கி கூப்ப முடியவில்லை.. கைவிரல்கள் சேர சிரமப்பட்டன. நான் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்ததை அவன் ஆட்சேபிப்பது தெரிந்தது. கால்களைக் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன் அந்த ஏரியிலிருந்து சிறு செம்பில் நீர் மொண்டு கொண்டு வந்து பலர் அம்மன் மேல் விடுவது தெரிந்தது. உடம்பும் முகமும் கோண அவனும் தண்ணீர் கொண்டு வந்து விட்டான். கோபத்தில் என்தலையில் ஊற்றி விடுவானோ என்ற பயம் இருந்தது அவனுடன் மெல்ல பேச்சு கொடுத்தேன். முப்பாதாண்டுகளுக்கு முன் அவன் சிறு குழந்தையாக இருந்திருக்கிறான. ” விச வாயுவால் பாதிக்கப்பட்ட்வன் நான். என் வீட்டில் இருவர் இப்படி. எல்லா வீடுகளிலும் யாராவது இருக்கிறார்கள் என்னைப் போல் ஊனத்துடன் “
போபாலில் பலரைக்கவர்ந்த இடம் ஹனுமன் கஞ்ச். அங்கு ஹனுமன் கோவில் கட்டப்பட்டது குறித்த ஒரு கதை உள்ளது. பேகம் ஹாஜகான் ஆட்சி காலத்தில் நடந்ததாம் . கமால்மகராஜ் என்ற சாமியார் ஒரு ஆலமரத்தடியில் இருந்து கடவுள் வழிபாடு செய்து வந்தாராம். வழிபாட்டின் போது சங்கு ஊதுவாராம்.அது பேகம் அவர்களுக்கு தொந்தரவு தந்திருக்கிறது. அவரைக் கொல்ல ஆணையிட்டிருக்கிறார். படை வீரர்கள் அவரைத் தேடிப் போன போது அவர் இறந்து கிடந்திருக்கிறார். ஆனால் வழிபாட்டு நேரத்தில் சங்கொலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. படைவீரர்கள் அவர் உடலை வெட்டி பிய்த்துப் போட்டு விடுகிறார்கள்.அதன் பின்னும் சங்கொலி கேட்கிறது.
யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நடந்த அந்த விபத்தின் போது உடனடியாக எச்சரிக்கை ஒலிப்பான் ஒலித்திருக்க வேண்டும். ஒலிக்கவில்லை. அது அணைத்து வைக்கப்பட்டிருந்த்தாம்.
இப்போது சொல்லப்படுவதெல்லாம் செவிடன் காதில் ஊதப்படும் சங்கின் ஒலியாகத்தான் இன்றைக்கு இருக்கிறது..தங்கள் முதுகிலும் மனதிலும் பிணங்களைச் சுமந்து கொண்டு ஊர் முழுக்க பலர் சபித்தபடி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.செத்துப் போன சவங்களின் விலை சொற்பமாகத்தான் இருக்கிறது.

தாலியின் சரித்திரம்

கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி
என்ற பேச்சே கிடையாது
தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.
மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.
ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.
தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.
நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே.
கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.
தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.
நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது.
எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர்.
புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு)
இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்)
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும்.
ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது.
இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார்.
அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.
கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.

மனதில் உறுதி வேண்டும்.


03 -- SNSN (July 2014)

மனதில் உறுதி வேண்டும் / வாக்கினிலே இனிமை வேண்டும் / நினைவு நல்லது வேண்டும் / நெருங்கின பொருள் கைப்படவேண்டும்
என்று பாரதி மிகச்சரியாகப் பாடினார். முதலில் நமக்கு இருக்க வேண்டியது மனதில் உறுதி. வெற்றி பெறுபவர் விட்டுவிடுவதில்லை. விட்டுவிடுபவர் வெற்றி பெறுவதில்லை என்று ஒரு ஆங்கில முதுமொழி உள்ளது. ஆமாம். நமக்கு வெற்றி வேண்டுமானால் விட்டுவிடவே கூடாது. விட்டு விடாமல் இருக்கவேண்டுமானால் நம் மனதில் உறுதி வேண்டும்.
மன உறுதி என்றால் என்ன?
இது ஒரு கேள்வியா? இதுகூடவா தெரியாது என்று கேட்பீர்கள். நான் கேள்வி கேட்கவில்லை. மன உறுதி உங்களிடம் இருக்கிறதா என்று நீங்களே பரீட்சித்துப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.
  1. அவருடைய இமெயிலுக்கு பதிலனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்தீர்களே அனுப்பிவிட்டீர்களா?
  2. அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து தியானம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தீர்களே செய்தீர்களா?
  3. மெடாஸின் வாங்குவதற்காக மெடிகல் ஷாப்-புக்குப் போய் எல்லாம் ஒரே பாராஸெட்டிமால் குடும்பம்தான் என்று கடைக்காரர் சொன்னதை வைத்து க்ரோஸின் வாங்கிவந்தீர்களா இல்லையா? அப்போ மெட்டாஸின் வாங்கவேண்டுமென்ற உங்கள் முடிவு என்னானது?
  4. அடிக்கடி மறந்து போகும் ஒன்றைப்பற்றி, இனி மறக்கவே கூடாது என்று முடிவெடுத்தீர்களே, அதை நிறைவேற்றினீர்களா?
இப்படி நான் கேட்டுக்கொண்டே போகலாம். நீங்கள் மனசாட்சிப்படி பதில் சொன்னால், எந்தக் கேள்விக்கும் முடிவெடுத்தபடி செய்துவிட்டேன் என்று சொல்லமுடியாது. ஏன்? உங்களுக்கு மன உறுதி இல்லை. ஆனால் வாழ்க்கையில் சாதனை செய்தவர்கள், பெருவெற்றி அடைந்தவர்கள் – கவனிக்கவும், சாதாரண வெற்றியல்ல, பெருவெற்றி — யாரும் உங்களைப் போல இல்லை. அதனால்தான் அவர்கள் பெருவெற்றி அடைந்தார்கள்.
ஃபோர்டு கார்
ஹென்றி ஃபோர்டு தெரியுமில்லையா? அவர் முதன் முதலாக கார் ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்தார். அமெரிக்காவில் சைக்கிளில் போகிறவர்களெல்லாம் காரில் போக வேண்டும் என்பதுதான் அவரது பெரிய ஆசையாக இருந்தது. பேராசை அல்ல.
கவனிக்கவும். பெரிய ஆசை. மஹா ஆசை. மெகா ஆசை. இதற்கும் பேராசைக்கும் பெரிய வித்தியாசமுள்ளது.  தேவைக்கு அதிகமாக ஆசைப்படுவது பேராசை. ஆனால் வைக்கின்ற ஆசையை, லட்சியத்தை சின்னதாக வைக்காமல் பிரம்மாண்டமாக வைப்பது பெரிய ஆசை.  புரிகிறதா?
பேராசை பெருநஷ்டம் என்று சொல்வார்கள். அது சரிதான் ஆனால் பெரிய ஆசை அப்படிப்பட்டதல்ல. அது பற்றி எரியும் ஆசை. எப்படி ராக்கட்டின் பின்னால் நெருப்பு பற்றி எரிய எரிய அது மேலே மேலே போய்க்கொண்டிருக்குமோ அதே போல வாழ்க்கையில் உங்களை மேலே மேலே கொண்டுபோகக்கூடிய ஆசை.  பேராசை அழிவுப்பூர்வமானது. பெரிய ஆசை ஆக்கப்பூர்வமானது. பேராசை உங்களை அழிக்கும். பெரிய ஆசை உங்களை வாழவைக்கும். மற்றவர்களும்  வாழ வழிவகுக்கும். பேராசை ஒரு பள்ளத்தாக்கு. பெரிய ஆசை மலையின் உச்சி.
சரி, ஹென்ரி ஃபோர்டுக்கு வருவோம். ஒரு கார் செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார் அல்லவா? அதுபற்றி கருத்து கேட்க அவர் ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்தார். அவர் தேர்ந்தெடுத்த ஆள் ரொம்பப் பெரிய மனிதர்.  அவரும் ஒரு சாதனையாளர். அதுவும் உலகமே வியக்கும் சாதனை மனிதர் அவர். இனம் இனத்தோடு சேரும் என்பது இதுதான். ஒத்த அதிர்வலைகளை உருவாக்கிக்கொண்டிருப்பவர்கள் இடையில்தான் நட்பும், உறவும் ஏற்படும். காதலர்களுக்கு இடையில் இருப்பது  மாதிரி. நல்ல கணவன் மனைவிக்கு இடையில் இருப்பது மாதிரி. நல்ல நண்பர்களுக்கு மத்தியில் இருப்பது மாதிரி. சரி, யார் அந்த சாதனை மனிதர்? அவர் வேறு யாருமல்ல, இறைவனுக்கு அடுத்த படியாக இந்த உலகத்துக்கே ஒளி கொடுத்த ’விஞ்ஞான மகான்’ தாமஸ் ஆல்வா எடிசன்தான்!
எடிசனும் ஃபோர்டும் நண்பர்கள். பின்னே, அப்படித்தானே இருக்க முடியும்? காந்தத்தோடு இரும்புதானே போய் ஒட்டும்?  வெறும் மண் ஒட்டுமா?
ஆனால் அந்த விஞ்ஞான மேதை என்ன சொன்னார்? அதுதான் ஆச்சரியமான உண்மை. ஃபோர்டின் கருத்தைக் கேட்டுவிட்டு, அது சாத்தியமில்லை, வேண்டாம், நீங்கள் பேசாமல் என் கம்பனியிலேயே வேலைக்கு வந்துவிடுங்கள் என்றார் எடிசன்!
நம்ப முடியவில்லை. ஃபோர்டின் புதிய சிந்தனை அவருக்குப் புலப்படவில்லையா? அல்லது பிடிக்கவில்லையா? ஆஹா, இந்த கருத்தை இவன் அமுல் படுத்திவிட்டால் பெரிய ஆளாகிவிடுவான் என்ற பொறாமை பல்பு அவருக்குள்ளும் எரிந்ததா? தெரியவில்லை.
ஆனால் சாத்தியமில்லை என்று அவர் சொன்னது மட்டும் சத்தியம். வரலாற்றில் இது இருக்கிறது. அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல் போனதுதான் ஹென்ரி ஃபோர்டு செய்த மிகப்பெரிய சாதனை என்று நான் சொல்வேன்! ஆமாம். அவ்வளவு பெரிய மனிதர்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட  முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்தவர்; அவர் எப்படி தவறாகச் சொல்லமுடியும் என்று ஃபோர்டு நினைக்கவில்லை. அவர் ஏற்கனவே தன் மனதுக்குள் அழுத்தமான கோடு, இல்லை இல்லை, ஃபோர்டு கார் செல்லத் தேவையான ரோடு போட்டு வைத்திருந்திருக்கிறார். ஆமாம். எடிசனே சொல்லிவிட்டார், இது நிச்சயம் நடக்காது என்று ஃபோர்டு நினைக்கவே இல்லை! அங்கேதான் அவரது மகத்துவம் இருக்கிறது. ”தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சி  தன்மெய் வருத்தக் கூலி தரும்” என்ற திருக்குறள் கருத்தை ஹென்ரி ஃபோர்டு பின்பற்றி இருக்கிறார்! அங்கேதான் அவர் நிற்கிறார்!
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப்போல ஃபோர்டு காரியமாற்ற ஆரம்பித்தார். முதல் அவர் உருவாக்கிய காரில் ரிவர்ஸ் கியர் இல்லை. அதைப் பின்புதான் அவர் வடிவமைத்தார். அதனால் என்ன? முன்னேறிச் செல்லும் கார்களை மட்டும் அவர் முதலில் உருவாக்கினார் என்று வைத்துக்கொள்ளலாம்! என் நண்பர் ஒருவர் சொன்ன அனுபவ நகைச்சுவை நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. முதன் முதலாகக் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள விரும்பிய அவர் தன் நண்பரின் காரை எடுத்துக்கொண்டு போனார். ஒரு சின்ன தெருவில் கார் சென்றபோது எதிரில் ஒரு கார் வந்துவிட்டது. இவர் ரிவர்ஸில் போனால்தான் அந்தக் காருக்கு வழி கிடைக்கும் என்ற சூழ்நிலை. இவர் யோசிக்கவே இல்லை. உடனே காரைவிட்டுக் கீழிறங்கி எதிரில் இருந்த கார் ஓட்டுனரிடம் சென்று, “நான் இப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு ரிவர்ஸ் எடுக்கத் தெரியாது. எனக்காக தயவு செய்து நீங்களே ரிவர்ஸ் எடுத்துவிடுங்கள்” என்று சொல்லித் தன் காரின் சாவியை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்! அவரைப் போன்றவர்களுக்காக ஹென்ரி ஃபோர்டு முதலில் கார்களை உருவாக்கியதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்!
’ரைட்’ எப்படி ராங்காகும்?
ரைட் சகோதர்கள் விமானம் செய்ய எண்ணி, அதைப் பற்றிய தங்களுடைய கற்பனைகளை மற்றவர்களிடம் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள்.  மற்றவர்கள் என்ன, அவர்களுடைய அப்பாவே சிரித்தார். ”பணத்தை விரயம் செய்ய இவ்வளவு முட்டாள்தனமான ’ஐடியா’வா? வேண்டாம் மக்களே, காற்றில் பறக்கின்ற வேலையை தயவுசெய்து பறவைகளிடம் விட்டுவிடுங்கள்” என்று கிண்டலாகச் சொன்னார்! ஆனால் அவர்கள் விட்டார்களா?
”சாரி டாடி, எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. அதை நனவாக்காமல் நாங்கள் விடமாட்டோம்” என்று உறுதிபடக் கூறிவிட்டார்கள்.
முதல் விமானத்தைப் பறக்கவிட  வட கரோலினாவில் இருந்த கிட்டி ஹாக் (Kitty Hawk) என்ற இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அப்போதும் நம்பிக்கையில்லாமல், என்னதான் நடக்கிறது பார்க்கலாமே என்ற ஆர்வத்தில் சிலர் சென்றார்கள். ஆனால் இன்று நிலமை என்ன? பறவைகளைவிட அதிகமாக விமானங்கள் வானில் பறந்துகொண்டுள்ளன என்றே சொல்லலாம். ரைட் சகோதர்களின் “அபத்தமான கற்பனை” கொடுத்த விளைவு அது!
ரேடியம்
ரேடியமெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக கிடைக்காது என்றுதான் மேரி க்யூரியிடம் மற்ற விஞ்ஞானிகள் சொன்னார்கள். ஆனால் தூங்காமல் கொள்ளாமல் நடு இரவிலும் விழித்திருந்து விடாமல் பரிசோதனைகள் செய்துகொண்டே இருந்தார் மேரிக்யூரி என்ற சாதனைப்பெண். ரேடியம் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றபிறகு, போய் அதை வாங்கி வருவதற்குக்கூட அவரிடம் காசில்லாமல் இருந்தது என்பது ஒரு வரலாற்று சோகம்!
அற்புதப் பாலம்
ப்ரூக்லின் பாலம் என்று ஒன்று நியூயார்க் நகரத்தில் உள்ளது. உலகின் மிக அற்புதமான தொங்குபாலங்களில் ஒன்று அது. கிட்டத்தட்ட 1600 அடி நீளம் கொண்டது! வேறு வார்த்தைகளில் சொன்னால் 490 கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது! அதைக் கட்டியவர்கள் இரண்டு பேர். ஒரு அப்பா, ஒரு மகன். இருவரின் பெயரும் ரூப்லிங் (Roebling) என்று வரும். தந்தை ஜான் அகஸ்டஸ் ரூப்லிங். மகன் வாஷிங்டன் ரூப்லிங். இரண்டு பேருமே பொறியாளர்கள்தான். ஏற்கனவே சின்னச் சின்ன தொங்கு பாலங்களை இவர்கள் வடிவமைத்திருக்கின்றனர். ஆனால் கிட்டத்தட்ட 500 மைல் நீளப் பாலம் என்பது அசாத்தியமான கற்பனையாகவே இருந்தது.
திட்டமிட்டு, வடிவமைத்து வேலைகள் செய்த சில காலத்திலேயே ஒரு விபத்தில் சிக்கி தந்தை ரூப்லிங்-கின் பாதங்களின் இரு பெருவிரல்களும் நசுங்கி, பின் வெட்டியெடுக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட வேறு விளைவுகளால் அவர் இறந்தே போனார். பின்னர் எல்லாம் மகனின் தலையில் வந்துவிழுந்தது. ஆனால் மகனும் ஒரு விபத்தில் சிக்கி அப்பாவைவிட கடுமையாக பாதிக்கப்பட்டார். அவரால் அசையவோ பேசவோ முடியாது! மருத்துவமனையிலேயே பல ஆண்டுகள் கிடந்தார். அதோடு தொங்குபாலம் பற்றிய திட்டம் அந்தரத்தில் தொங்கிப் போய்விடும் என்றுதான் அனைவரும் நினைத்தனர்.
ஆனால் அதுதான் நடக்கவில்லை. உடல் கிடந்தாலும் மனம் படு சுறுசுறுப்பாகவே இருந்தது ரூப்லிங்கிற்கு. ஒரு விரலை மட்டுமே அவரால் அசைக்க முடிந்தது. அதை வைத்துக்கொண்டு அவர் தன் மனைவியில் கையில் ஒரு தட்டு தட்டினார். ப்ரூக்லின் பாலம் அங்கே உருவாகத் தொடங்கியது என்று சொல்லலாம்.
ஆமாம். ஒவ்வொரு தட்டும் பொறியாளர்களுக்கு ஒரு உத்தரவு. அதை எப்படி அவர் மனைவி புரிந்துகொண்டார், அவர் புரிந்து கொள்வதற்கு எவ்வளவு காலம் ஆகியது, அவளுக்குப் புரிய வைப்பதற்கு ரூப்லிங் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டார் என்றெல்லாம் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகள் இவ்விதம் தட்டித்தட்டி, ஒரு சிற்பி சிலையை உருவாக்குவதுபோல, ரூப்லிங் தன் மனைவியின் கையில் தட்டி உத்தரவுகள் கொடுத்துக்கொண்டிருந்தார். ப்ரூக்லின் பாலம் மெல்ல மெல்ல உருவானது!
ஆஹா, இதுவல்லவா சாதனை! நான் ப்ரூக்லின் பாலத்தைச் சொல்லவில்லை. ரூப்லிங் செய்த காரியத்தைச் சொல்கிறேன். ஒரு மனிதனின் மனதில் எவ்வளவு உறுதி இருந்தால் இப்படி விடாமல் முயன்றிருக்க முடியும்!
அற்புத மனிதன்
மாரிஸ் குட்மேனின் (Morris E Goodman) கதையும் இப்படிப்பட்டதுதான். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு குட்டி விமானம் வாங்கினார். அதை ஓட்டிக்கொண்டு போனபோது ஒரு விபத்து ஏற்பட்டது. விமானத்தில் ஏதோ கோளாறு. இவர் ஏதேதோ செய்து ஓடுதளம்வரை வந்துவிட்டார். ஆனால் விமான எலக்ட்ரிக் கம்பிகளில் மோதி தலைகுப்புற விழுந்தது. குட்மேனுக்கு எலும்புகள், தலைப்பக்கம், முதுகுத்தண்டுப்பக்கமெல்லாம் சேதமாயின. ஸி-1, ஸி-2 ரக காயங்கள் என்று அவை மருத்துவ உலகில் சொல்லப்பட்டன. அவரசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எட்டு மாதங்கள் இருக்க நேரிட்டது.
இந்த காலகட்டத்தில் அவரது உதரவிதானமும் நிரந்தரமாகச் சேதமடைந்திருந்தது. அவரால் பேசவோ, தானாக மூச்சுவிடவோ, உடலை அசைக்கவோ முடியாது. கண்கள் மட்டும் இங்குமங்கும் அசையும். அவ்வளவுதான். இனி காலம்பூராவும் அவர் இப்படியே ஒரு சப்பிப்போடப்பட்ட மாங்கொட்டை மாதிரிதான் கிடக்கவேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
ஆனால் அடுத்த கிறிஸ்துமஸுக்குள் தான் எழுந்து நடந்து மருத்துவமனையை விட்டு வெளியே செல்லவேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். கவனிக்கவும், குட்மேன் முடிவெடுத்தார். அவர் கண்கள் அசைவதைப் பார்த்த அவரது சகோதரி அவருக்கு உதவினார். கண் அசைவுக்குத் தகுந்தமாதிரி  ஏ, பி, சி, டி எழுத்துக்களைப் புரிந்துகொண்டார். உதாரணமாக ஒருமுறை அசைத்தால் ஏ, இரண்டு முறை என்றால் பி – இப்படி. இப்படியே தான் சொல்ல நினைப்பதையெல்லாம் ’பேசி’ வந்தார் குட்மேன்.
செயற்கை உபகரணம் இல்லாமல் சொந்தமாக முயன்று அவர் மூச்சு விட்டபோது மருத்துவர்களுக்கு பெரிய ஆச்சரியம். அதேபோல பல ஆச்சரியங்கள் அவர்களுக்குக் காத்திருந்தது. அவர் நினைத்தபடி எழுந்து நின்றார். யாருடைய உதவியும் இன்றி நடந்தார்! எட்டு மாதங்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து ’டிஸ்சார்ஜ்’ ஆனார்! அந்த மன உறுதிக்காகத்தான் உலகம் அவரை அற்புத மனிதர் என்று அழைக்கிறது.
மன உறுதி என்ற அந்த அற்புத ஆற்றல் நம்மிடமும்தான் உள்ளது.
பயன்படுத்தினால் என்ன நண்பர்களே?

நாகூர் ரூமி.

Monday, 6 April 2015

புற்றீசல்கள் போல் செய்தி சேனல்கள்; போர்க்களம் போன்ற விவாதங்கள்: மூத்த பத்திரிகையாளர் விமர்சனம்

புற்றீசல்கள் போல் படையெடுக்கும் செய்தி சேனல்களில் அன்றாடம் நடத்தப்படும் விவாத நிகழ்ச்சிகளால் செய்தியின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் ரமா பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.
ரமா பாண்டே, தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். தொகுப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 250-வது அத்தியாயத்தின் வெற்றி விழாவில், தற்போதைய செய்தி தொலைக்காட்சிகளின் தரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
விழாவில் அவர் கூறியதாவது, "நாட்டில் செய்தி சேனல்கள் புற்றீசல் போல் அதிகரித்த பின்னர் செய்தியின் தரம் தாழ்ந்துவிட்டது. சில செய்தி சேனல்கள் எல்லா செய்திகளையும் பரபரப்பு செய்தியாக மாற்றிவிடுகின்றன. செய்தியை எப்படி படைக்க வேண்டும் என்பது ஒரு கலை. அந்தக் கலையை சேனல்கள் சிதைத்துவிட்டன.பரபரப்புக்காக வதந்திகள், கவர்ச்சிகரமான செய்திகள்கூட ஒளிபரப்பாகின்றன.
இது தவிர விவாதம் என்ற பெயரில் எல்லா செய்திகளையும் விவாதப் பொருளாக்குகின்றனர். ஒரு செய்தியை அலசுகிறோம் என்ற போர்வையில் அந்த செய்தியின் சாராம்சத்தையே சிதைத்துவிடுகின்றனர்.
செய்தி விவாத நிகழ்ச்சியின் நெறியாளர் அமைதியாக, ஆரவாரமற்றவராக இருக்க வேண்டும். ஆனால் நெறியாளர்கள் அச்சுறுத்தும் வகையில் கூச்சலிடுகின்றனர். இப்போதெல்லாம் விவாத நிகழ்ச்சிகளை தொலைக்காட்சித் திரையில் பார்ப்பது ஏதோ போர்க்களத்தைப் பார்ப்பது போல் இருக்கிறது. கூச்சலும், குழப்பமும் விவாதங்களை ஆக்கிரமித்துள்ளன.
இத்தகைய சூழலில், மக்கள் இந்த கூச்சலில் இருந்து விடுபட விரும்புகின்றனர். மெல்ல, மெல்ல காலையில் ஒரு கோப்பை தேநீருடன் அமைதியாக செய்தித்தாளை வாசிக்க வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

விவசாயப் போராளி நம்மாழ்வார்

சுயசார்பான வாழ்க்கை என்ற கனவை நோக்கித் தமிழக விவசாயிகளை அழைத்துச் சென்றவர்.
நம்மாழ்வாருடன் பழகிய பலரும் கூறியது, “எங்களால் நம்மாழ்வாரின் ஆழ, அகலங்களை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை” என்பதே. அது உண்மைதான். தனது ஆளுமைத் திறன்களை, அறிவாற்றலை, நுண் திறமைகளைத் தொடர்ந்து வெளிக்காட்ட அவர் மறுத்துவந்தார். தேவைப்பட்ட சூழலிலும் ஏதோ மிகச் சாதாரண ஒன்று போலவே காட்டினார். அடித்தட்டுக் கிராமத்து மனிதர்களின் வாழ்வை ஒரு படியாவது உயர்த்து வதையே முக்கியமான பணி என்றாக்கிக்கொண்ட அவருடைய வாழ்வில் அந்த அடித்தட்டு மக்களுடனான அனுபவங்களே அவரை ஆமை போலத் தன்னை உள்ளடக்கிக்கொள்ளச் செய்துவிட்டது.
தர்மபுரி அஞ்சட்டி மலைப் பகுதியில், விவசாயிகள் மத்தியில் தொண்டுநிறுவன ஊழியராகப் பணியாற்றிய காலத்தில் ஒரு அனுபவம் அவருக்கு. அந்த மலைப் பகுதியில் தடுப்பணைகள் கட்டி, நீர் தேக்கி விவசாயம் செய்ய உதவுதல் என்ற அடிப்படையில் பல தடுப்பணைகளை இவரும் நண்பர்களும் உள்ளூர் மக்களுமாகச் சேர்ந்து கட்டினார்கள். கட்டி முடித்த பின் விவசாயிகளிடம், “இனி இந்தத் தண்ணீர் கொண்டு விவசாயம் செய்யலாம் இல்லையா?” என்று கேட்டபோது அவர்களில் பலரும் இதனால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கூறினார்கள். “எங்கள் நிலம் மலையின் மேற்பகுதியில் இருக்கிறது. தடுப்பணையோ கீழே இருக்கிறது. கீழிருந்து மேலே எப்படித் தண்ணீர் எடுத்துச் செல்வது என்றார்கள். “நாம் எல்லோரும் சேர்ந்துதானே திட்டமிட்டுச் செயல்படுத்தினோம். இதை ஏன் அப்போது சொல்லவில்லை” என்று நம்மாழ்வார் கேட்டபோது, “நீங்கள் எல்லோரும் படித்தவர்கள். நீங்கள் செய்தால் சரியாகத்தானே இருக்கும் என்று இருந்தோம்” என்றார்கள். அப்போது அவர் எடுத்த முடிவுதான், தான் படித்தவன் என்று இனிமேல் கூறுவதில்லை என்பது. தன்னுடன் இணைந்து இயங்கும் அடித்தட்டு மனிதர்கள் எவ்வித மனத்தடையும் இல்லாமல், தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் இணைந்து இயங்கவும், தங்களின் கருத்துக்களைத் தயக்கமின்றி வெளிப்படுத்தவும் உதவும் வகையில், தன் ஆளுமைகளை மறைத்தும் சுருக்கியும் கொண்டார் நம்மாழ்வார்.
மக்களின் இயற்கை அறிவு
தன் ஆளுமைகளை மறைத்துக்கொண்டது போலவே அந்த மக்களுடன் சேர்ந்து இயங்குவதற்குத் தேவைப்படும் புதிய திறன்களை வளர்த்துக்கொண்டும் தன்னை மேம்படுத்திக்கொண்டார். “மக்களிடம் அறிவு ஆழமாகப் புதைந்துள்ளது. அதை வெளிக்கொணர உதவிசெய்து, அதை இன்றைய அறிவியல் கொண்டு புரிய வைத்தால் போதும், அதன் மூலம் அவர்கள் தங்களைத் தாங்களாகவே மேம்படுத்திக்கொள்வார்கள்” என்று அவர் கருதினார். அவர்களுக்குப் புதிதாக ஏதேனும் கொடுக்க வேண்டுமாயின் அது அவர்களின் அறிவு அறிவியல்பூர்வமானது என்பதை விளங்க வைப்பதுதான் என்று நம்பினார்.
மேலும், கிராமத்துப் பெண்களின் அறிவு மேன்மையை அவர்களுக்கே காட்டியதுடன் அவர்களின் அறிவு தாழ்ந்ததில்லை என்ற நம்பிக்கையை அவர்கள் அறியாமலேயே அவர்களிடம் ஊட்டினார். அது போலவே தன்னுடன் இணைந்து இயங்கியவர்களின் திறனை, அறிவை அவர்களே அறியாத வண்ணம் ஒரு படியாவது மேலே உயர்த்துவதைத் தொடர்ந்து அவர் செய்துகொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தன்னுடன் இணைந்து இயங்கியவர்கள் அனைவரும், எந்த வயதினராக இருப்பினும், தன்னை நம்மாழ்வார் என்று பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, எந்தவொரு காலத்திலும் தான் ஒரு படி உயர்ந்தவர் என்ற உணர்வு எழுவதைத் தடுத்துவந்தார்.
விவசாயிகளின், கிராம மக்களின் அழகான சுயசார்பான வாழ்வுதான் அவருடைய கனவு. மக்களின் நல்வாழ்வு என்ற அவருடைய கனவு இயற்கை விவசாயத்தை மட்டுமின்றி திறன் அழிக்காத கல்வி, ஆரோக்கியம், கலைகள், அனைவரும் இயைந்து இயங்குதல், பெண்களின் மேம்பாடு, சாதிகளுக்கு அப்பால் அனைவரும் இயங்குதல் போன்ற வற்றையும் உள்ளடக்கியதாகவே இருந்தது. தன்னுடன் இருந்தவர்களையெல்லாம் அந்தக் கனவை நோக்கியே இழுத்துக்கொண்டு சென்றார்.
உடல்நலன் என்பது நாம் உட்கொள்ளும் உணவின் வெளிப்பாடு. அது நல்ல உணவாக இருப்பின் அது ஆரோக்கியத்தைத் தானே தரும் என்பது அவரின் அழுத்தமான நம்பிக்கை. இந்த நம்பிக்கை அவருக்கு இயற்கை உணவு- இயற்கை வைத்தியம் ஆகியவற்றிலிருந்து வந்தது. தன் கருத்து சரியானதுதானா என்பதைத் தன் வாழ்வில் சோதித்தறிந்த பின்னரே வெளியே கூறினார். அவரைப் பொறுத்தவரை, கூறுவது என்பது அதைத் தன் வாழ்வில் கடைப்பிடித்துக் காட்டுவதே ஆகும். “நோயுற்றால் அதற்கான வைத்தியம் நம் சித்த வைத்தியமே. பல ஆயிரம் ஆண்டுகள் மக்களைக் காத்துவந்த சித்த வைத்தியம் எப்படி மட்ட மானதாகவோ, பிற்போக்குத்தனமானதாகவோ இருக்க முடியும்” என்றவர், முறையாக சித்த மருத்துவத்தை அறிந்துகொண்டு, மருந்துகளைச் செய்வதைக் கற்றுகொண்ட பின்னரே அப்படிக் கூறினார். பிற பாரம்பரிய மருத்துவ முறைகளையும் அவர் ஏற்றார். அவர் மேற்கொண்ட இயற்கை விவசாயத்திலும், இயற்கை வளக் காப்பு நடைப்பயணங்களிலும் அவருடன் பங்கேற்றவர்களுக்கு மட்டுமே தெரியும் மூலிகைச் செடிகளைப் பற்றி அவருக்கு இருந்த அறிவைப் பற்றி.
செயல்தான் சிறந்த குரு
சொல்லை விடச் செயலே அதிகம் கற்றுக்கொடுக்கும் என்பதில் ஆழமான நம்பிக்கை அவருக்கு. எல்லோரையும் செய்ய வைப்பார். முறைசாரா முறையில் கற்பிப்பதே அவரின் பிரதான முறை. கேள்வி களுக்கு ஏன் கதையும் சம்பவங்களுமான பதில் அளிக்கும் முறையைக் கைக்கொள்கிறீர்கள் என்ற போது, “ஆமாம் ஐயா, நம் மக்களுக்கு ஏற்ற ஒன்று இதுதான். ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கதை களாகக் கூறித்தான் ஆன்மிகத்தைப் புரியும்படி செய்தார். நான் வாழ்வியலைப் புரியும்படி செய்கிறேன்” என்றார்.
விவசாயிகளையும் பிறரையும் குழுவாக, வட்டமாக அமரச் செய்து விவாதிப்பது அவரது பாணி. “வட்டமாக அமர்வதில் எவரும் உயந்தவர் தாழ்ந்தவர் கிடையாது. நாம் இன்னமும் ஜனநாயக முறையில் இயங்குவதற்குப் பழகவேயில்லை. அதைப் பழகிக்கொள்ளத்தான் வட்டமாக அமர்கிறோம்” என்பார். கடும் விவாதங்களின்போதும் அமைதியான பார்வை யாளர் போலவே இருப்பார். குழு எடுத்த முடிவு, தனக்கு உடன்பாடில்லாத முடிவாக இருப்பினும், அதனை ஏற்பார். குழுவின் முடிவு சரியானதல்ல எனில், விளக்கிச் சொல்லியிருக்கலாமே என்றால், “குழுவின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். அதுதான் ஜனநாயகம். மேலும், தன் முடிவு சரியல்ல என்று அனுபவத்தால் அந்தக் குழு உணரும்போதுதான் அறிவு பிறக்கும். இல்லாவிடில், அங்கு நம்மாழ்வாரின் கருத்தே திணிக்கப்பட்டதாக இருக்கும்” என்றும் “தவறு செய்வது ஒன்றும் கெட்ட காரியம் அல்லவே. தவறுகளிலிருந்து பாடம் கற்கும் மனப்பக்குவம்தான் நமக்குத் தேவை” என்பார்.
விவசாயிகளின் தந்தை
அவருடைய வாழ்க்கையின் கடைசி 25 ஆண்டுகளில் ஒவ்வோராண்டும் சராசரியாக 200-250 இரவுகள் பேருந்துகளிலும் பகல் பொழுதுகள் விவசாயிகளின் நிலத்திலும் வீட்டிலுமாகவே கழிந்தன. அவருடன் இணைந்து இயங்கி, விவசாயக் குடும்பங்கள் அவரைத் தங்களின் தந்தையாகச் சுவீகரித்துக்கொண்டன என்றால் அதற்குக் காரணம், மக்களிடம் அவர் தன்னைக் காட்டிக்கொண்ட விதம்தான். ஈரோடு மாவட்டத்தில் 2002-ல் 28 நாட்கள் நடந்த பிரச்சார நடைப்பயணத்துக்கான மொத்த செலவும் ரூ. 2,800-க்குள் என்றால், விவசாயிகள் இவரையும் இவருடன் சேர்ந்து நடந்தவர்களையும் தங்களுடையவர்களாகச் சுவீகரித்துக்கொண்டதுதான் காரணம். மக்கள் தங்களுக்காக தியாகத்துடன் உழைப்பவர்களை என்றும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்கான அண்மைக் கால உதாரணம் இவர்.
மாற்று வாழ்வியல் முறைகளை மாற்று விவசாயத்தின் அங்கமாக சமூகத்தில் நடைமுறைப்படுத்துவதே சரியான போராட்ட வடிமாக இருக்கும். அதன் மூலமே பன்னாட்டு நிறுவனங்களின் தாக்குதலை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் அவர். விவசாயிகளின், கிராமத்து மக்களின் வாழ்க்கையை வணிகமய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறச் செய்தல் என்ற இலக்குக்கான பாதையாகவே இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் பார்த்தார். பெருநிறுவனமயமாதலுக்கு எதிராக எவ்வித முழக்கங்களும் இல்லாமல், ஆயுதங்கள் இல்லாமல், கோஷங்கள் இல்லாமல் புரட்சி செய்த புரட்சிக்காரர் நம்மாழ்வார் என்பதே உண்மை.

Saturday, 28 March 2015

சிறுபான்மையினரின் அடையாளங்களை அழித்தொழிப்பதுதான் இந்துத்துவமா?-

டீஸ்டா செடல்வாட். 2002 குஜராத் கலவர வழக்கைப் பற்றிப் பேசும்போது தவிர்க்க முடியாத பெயர்களில் முக்கியமானது. ஆளும் கட்சிக்கு எதிராகவும், இந்தியாவின் பெரிய மதவாத அமைப்புக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவருவது அத்தனை எளிதல்ல. அந்தப் போராட்டத்தின் விளைவாக இவர் மீதும் இவரது செயல்பாடுகள் மீதும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொலை மிரட்டல்கள் குவிந்தன. இவற்றுக்கெல்லாம் கொஞ்சமும் அசராமல், பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதி கேட்டுப் போராடுவதில் பின்வாங்காமல் இருப்பதொன்றே டீஸ்டாவின் மன உறுதிக்குச் சான்று. சென்னை வந்திருந்தவரிடம் பேசினோம்...
உங்கள் சமூகப் பார்வைக்கான அடித்தளம் எது?
என் வீடுதான் என் போராட்ட வாழ்வுக்கான முதல் படியை அமைத்துத் தந்தது. மும்பையில் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தேன். என் தாத்தா எம்.சி. செடல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரல். என் அப்பா அதுல் செடல்வாட், ஒரு வழக்கறிஞர். எனக்கும் என் தங்கைக்கும் அநாவசியக் கட்டுப்பாடு இல்லை. இருந்தாலும் நாங்கள் எங்கள் சுதந்திரத்தின் எல்லையை உணர்ந்தே இருந்தோம்.
சிறு வயதில் இருந்தே நான் நிறைய படிப்பேன். உணவு மேசையில் அப்பா நிறைய விஷயங்களைப் பேசுவார். நாங்கள் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து விவாதித்திருக்கிறோம். வாசிப்பும் விவாதமும் புதிய வாசல்களைத் திறந்தன.
பத்திரிகைப் பணி எந்த வகையில் உங்கள் சமூகப் பார்வைக்கு உதவியது?
பள்ளி நாட்களிலேயே பாப் வுட்வர்ட் போன்ற பத்திரிகையாளர்களின் புத்தகங்களைப் படித்தேன். உலகின் சிறந்த பத்திரிகையாளர்களின் கட்டுரைகளை வாசித்தேன். அதுதான் பத்திரிகைத் துறையின் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணம். ஏழு தலைமுறை வழக்கறிஞர்களைக் கொண்ட குடும்பத்தில், நானும் அதே துறையில் பணியாற்றுவேன் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயல்புதானே. ஆனால், நான் பத்திரிகைத் துறையைத் தேர்ந்தெடுதேன். என் முடிவை என் அப்பா வரவேற்றார். ‘டெய்லி,’ ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்களிலும், பிறகு ‘பிஸினஸ் இந்தியா’ பத்திரிகையிலும் பணியாற்றினேன்.
சமூகத்துக்கு நீதி சொல்கிற பத்திரிகைத் துறையிலும் ஆண், பெண் சமநிலையின்மையை உணர்ந்தேன். பெண் நிருபருக்கு அரசியல் செய்திகளைச் சேகரிக்க அனுமதியில்லை. பெண்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்ற பிற்போக்குத்தனமான எண்ணமே இதற்குக் காரணம். ஒருமுறை ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலைப் பார்வையிட்டுச் செய்தி சேகரிக்கப் போயிருந்தோம். கப்பலுக்குள் பெண் நிருபர்கள் வந்தால் கமாண்டர்களின் கவனம் சிதறும் என்று எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். ஒரு பெண், பிரதமராக இருக்கும் நாட்டில் பெண் நிருபர்களுக்கு இப்படியொரு அவமானமா என்று அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
பத்திரிகைப் பணியைத் துறந்தது ஏன்?
பத்திரிகைப் பணியில் நான் சமரசம் செய்துகொண்டதில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு தேக்க நிலை இருப்பதாகத் தோன்றியது. நானும் என் கணவர் ஜாவேத் ஆனந்தும் பத்திரிகைப் பணியைத் துறந்துவிட்டு, ‘கம்யூனலிசம் காம்பாட்’ இதழைத் தொடங்கினோம். மதவாதத்தை எதிர்ப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். மதத்தின் பெயரால் சூறையாடப்படப்படுகிற மக்களுக்கு வேறு எதையும்விட சட்டத்தின் துணை அவசியம். அதை எங்கள் பத்திரிகை வாயிலாகச் சொல்கிறோம்.
மதவாதத்துக்கு எதிராக நீங்கள் செயல்பட ஆரம்பித்தது எப்படி?
மதவாதத்தின் கோரத் தாண்டவத்தின் விளைவுகளை மிக அருகில் இருந்து பார்த்தேன். தங்கள் அடிப்படை உரிமைகளுக்குக்கூடக் குரல் எழுப்ப முடியாத சிறுபான்மை மக்களுக்கு நீதி மட்டும் தானாகக் கிடைத்துவிடுமா என்ன? அதனால் முழு நேர மனித உரிமை செயல்பாட்டில் என்னை இணைத்துக்கொண்டேன். சில பத்திரிகை நண்பர்களுடன் சேர்ந்து ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்’ (Citizens for Justice and Peace) என்ற அமைப்பைத் தொடங்கினோம். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.
உங்கள் கணவர் முஸ்லிமாக இருப்பதால்தான் நீங்கள் குஜராத் கலவரத்தில் ஆர்வம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறதே?
இந்த ஒரு வழக்கில் மட்டுமா ஈடுபாடு காட்டுகிறேன்? இந்த நாட்டில் நடக்கும் எத்தனையோ செயல்களை எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லை, நான் துணிந்து போராடுகிறேன். அவ்வளவே.
ஆளுங்கட்சியை எதிர்த்து நிற்பது எப்படி இருக்கிறது?
முன்னாள் குஜராத் முதல்வரும் இந்நாள் பிரதமருமான நரேந்திர மோடியையும் வேறு சில அரசியல் பிரமுகர்களின் பெயர்களையும் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கச் சொல்லி வலியுறுத்தி நாங்கள் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்தே எங்களுக்குப் பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. ஏகப்பட்ட கொலை மிரட்டல்கள். கொலை மிரட்டல்களைக்கூடச் சமாளித்துவிடுகிறேன். ஆனால், சிலரின் கொச்சையான வார்த்தைகளையும் அருவருக்கத் தக்க வசைகளையும் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. எங்களுக்கு வேண்டியதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி.
பள்ளிகளின் பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்துடன் நீங்கள் தொடங்கிய ‘கோஜ்’ அமைப்பின் நிலை என்ன?
மறைக்கப்பட்ட வரலாறுகளை மீட்டெடுத்து, அதை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதுதான் ‘கோஜ்’ அமைப்பின் நோக்கம். தென்னிந்தியாவில் இன்னும் எங்கள் பணிகளை ஆரம்பிக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் ஓரளவுக்கு நாங்கள் நினைத்ததைச் செயல்படுத்த முடிகிறது. பள்ளிகளில் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மாணவர்களை உரையாடச் செய்கிறோம். பல்வேறு கலாச்சாரங்களோடு ஒன்றிணைந்து வாழும் வேற்றுமையில் ஒற்றுமைதான் நாங்கள் விரும்புவது. இந்தியப் பாடப் புத்தங்களில் திட்டமிட்ட சதி அரங்கேறிவருகிறது.
முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் இவர்கள் யாருக்கும் இந்திய சுதந்திர வரலாற்றில் இடமே இல்லையா? அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, கான் அப்துல் கஃபார் கான், சந்தால் இன மக்கள் எல்லாம் இந்திய வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்படுவதற்கும் மறைக்கப்படுவதற்கும் என்ன காரணம்? இந்துத்துவம் என்பது சிறுபான்மையினரையும் அவர்களின் அடையாளங்களையும் அழித்தொழிப்பதா?
ஒரு செயல்பாட்டாளராக, இந்தியாவில் பெண்களின் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பெண்கள் இங்கே சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். ஆண், பெண் சமநிலையின்மை குறித்த கருத்தரங்கில் பேசுவதற்காக லக்னோ சென்றிருந்தேன். ஆண்கள் நிறைந்திருந்த அந்த மேடையில் என்னையும் சேர்த்து இரண்டே பெண்கள். எத்தனை முரண்! ‘எங்கே என் சகோதரிகள்?’ என்ற கேள்வியோடுதான் என் பேச்சைத் தொடங்கினேன். நம் சமூக அமைப்பிலேயே கோளாறு இருக்கிறது. ஆண் குழந்தையைக் கொண்டாடுவதும் பெண் குழந்தையை அடக்கிவைப்பதும் இங்கே ஆண்டாண்டு காலமாக நடந்துவருகிறது. அந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். மனித உரிமை என்பது பெண்ணுக்கான உரிமையும்தானே.
ஊடகப் பெண்களுக்கான கூட்டமைப்பிலும் நீங்கள் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறீர்களல்லவா?
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பற்றி ஊடகப் பெண்களுடன் தொடர்ந்து விவாதித்துவருகிறோம். பெண்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களின் பாதுகாப்புக்காக ஒரு குழு செயல்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அது எத்தனை இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எழுதிய காகிதத்தை வைத்துக்கொண்டு பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைச் சமாளித்துவிட முடியுமா? பெண்கள் எதையும் துணிச்சலுடன் எதிர்த்துப் போராட வேண்டும். அந்தப் போராட்ட குணம்தான் அவர்களைப் பாதுகாக்கும் கவசம்.
போராட்டத்தின் பலன் கைது செய்யப்படுவதா?
நரேந்திர மோடிக்கு எதிராக டீஸ்டா செயல்படத் தொடங்கியதுமே அதற்கான விளைவு எப்படியிருக்கும் என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஈஷான் ஜாஃப்ரியும் அவரது வீட்டில் தஞ்சம் புகுந்தவர்களும் குஜராத் கலவரத்தின்போது படுகொலை செய்யப்பட்டனர். தன் கணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்தார் ஈஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜக்கியா ஜாஃப்ரி. குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடியுடன் சேர்த்து 59 பேரைக் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்று அவர் 2006-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நரேந்திர மோடிக்கு எதிரான சாட்சிகள் இருந்தாலும் அவை வழக்கு தொடரக்கூடிய அளவுக்கு வலுவானவை இல்லை என்று அந்த வழக்கில் 2012-ல் தீர்ப்பு வெளியானது.
அதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டீஸ்டாவின் ஆதரவுடன் 2013-ல் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்தப் புள்ளிதான் டீஸ்டா மீதும் அவருடைய கணவர் ஜாவேத் மீதும் மோடி அரசாங்கம் தாக்குதல் நடத்தக் காரணமாக இருந்தது. இவர்கள் இருவர் மீதும் மோசடி வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ‘மோடி போன்றவர்களின் கையில் அதிகாரம் இருந்தால், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறவர்களின் நிலை என்ன ஆகும் என்பதற்கு டீஸ்டா மற்றும் ஜாவேத் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே சாட்சி’ என்று அரசியல் ஆர்வலர்களும் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர். இருவருக்கும் தொடர்ந்து முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. கபில் சிபல் தலையிட்டதன் பேரில் டீஸ்டா கைது செய்யப்படுவது நின்றது. ஆனால் இது தற்காலிகமானதுதான்.