Friday, 16 January 2015

உருகும் பனி

உலகில் மிக பெரிய பாரை அயர்ஸ் பாரை [Ayers Rock] என்று யார் சொன்னது அதை விட பெரியது இங்கு சிலர் மனம் அந்த பாறைக்கும் இந்த பாறைக்கும் ஒரு வித்யாசம் அயர்ஸ் பாறையில் வெப்பம் தாங்காமல் உருக பனி இருக்கிறது ஆனால் இங்கு பலர் மனம் உலகில் எத்தனை அநியாயம் நிகழ்தாலும் அது உருகுவதில்லை அந்த மனம் ஒன்று மட்டும் புரிந்து கொள்ளட்டும் உறுகி ஓடும் பனி நீராக மாரி இந்த புவிக்கு பயனளிக்கும் உருகாமல் நிற்கும் பாறை எதற்கும் பயன் படாது நாம் நமது உள்ளத்தில் கொஞ்சம் உருகும் பணியாக மாற்றி கொல்வோம் அது இந்த உலகில் நடக்கும் கொடுரத்தை கண்டு உறுகி பயனளிகட்டும்

Thursday, 15 January 2015

இந்தியா இதை யோசிக்கலாம்!


                           ‘‘நாங்கள் நிறைய சம்பாதிக்கிறோம். முன்னெப்போதையும்விட நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், அரசாங்கம் நெருக்கடியில் இருக்கிறது. ஏன் என்னைப் போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு எனப் பிரத்யேகமான வருமான வரியை அரசாங்கம் வசூலிக்கக் கூடாது?’’ - அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள வரிச் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபே சொன்ன யோசனை இது.

                          வாரன் பஃபேயின் யோசனையை ஒபாமா உடனடியாக ஏற்றிருக்கிறார். ஒரு மில்லியன் டாலர்களுக்கு அதிகமாகச் சம்பாதிக்கும் அமெரிக்கர்கள் இனி தங்கள் வருமானத்தின் கணிசமான பகுதியை வரியாகச் செலுத்தும் வகையில் பஃபேயின் பெயரிலேயே ‘பஃபே ரூல்’ என்ற திட்ட வரைவை அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஒபாமா. அமெரிக்கர்களிடம் கவரக் கூடிய ஓர் அம்சம் இது. அமெரிக்க முதலாளிகள் சம்பாதிக்கிறார்கள். ஆனால், தான் வாழும் சமூகத்தின் மேலான அக்கறையைத் தேவை ஏற்படும்போது எல்லாம் வெளிப்படுத்துகிறார்கள். பில் கேட்ஸ் உலகின் மிகப் பெரும் பணக்காரராக அறியப்பட்ட நாட்களில்தான் அவருடைய ‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை’ உலகின் மிகப் பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக மாறியது. ஏழை நாடுகளின் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்குத் தேடித் தேடி உதவத் தொடங்கியது.
அமெரிக்கர்கள் முதலாளித்துவத்தைப் பின்பற்றுகிறார்கள்.  முதலாளித்துவத்துக்கு என்று சில அறநெறிகளையும் பின்பற்றுகிறார்கள். முதலாளித்துவம் நமக்குப் பிடிக்கிறதா, இல்லையா; அது நல்லதா, கெட்டதா என்பது வேறு விஷயம். இந்தியாவும் முதலாளித்துவத்துக்கு மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால், முதலாளித்துவ அறநெறிகளை நாம்  கடைப்பிடிக்கிறோமா? 

                          இந்தியாவில் கடந்த 10 ஆண்டுக் காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து இருக்கிறது. ‘பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி’யின் ஆய்வின்படி, 2000-க்குப் பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்கிற அளவில் வளர்ந்துவருகிறது. கடந்த ஆண்டு ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை உலகெங்கும் ஒரு பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 4.8 ஆயிரம் கோடி) மேல் சொத்துகள் வைத்து இருப்போரின் பட்டியலை வெளியிட்டது. ஏறத்தாழ ஆயிரம் பேர் கொண்ட அந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 49. இந்த 49 பேருடைய மொத்த சொத்துகளின் மதிப்பு 222.1 பில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 66 ஆயிரத்து 80 கோடி). இந்திய அரசின் 2011-12-ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியில்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ. 10.57 லட்சம் கோடிதான். அதாவது, இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வரி வருமானமும் 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் கிட்டத்தட்ட சமம். ஆனால், நாட்டின் வரி வருவாயில் பணக்காரர்களின் இந்த வளர்ச்சி எந்த அளவுக்குப் பிரதிபலிக்கிறது?

                          இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடி. ஆனால், வருமான வரி செலுத்துபவர்கள் 4 சதவிகிதத்துக்கும் குறைவு. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால், மொத்த வரியின் பங்கு சுமார் 10 சதவிகிதம்தான்.
இந்தியாவில் ரூ. 8 லட்சத்துக்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ள எவருக்கும் விதிக்கப்படும் வருமான வரி 30 சதவிகிதம். நீங்கள் மாதம் ரூ. 70 ஆயிரம் சம்பளம் வாங்கும் மென்பொருள் நிறுவன அதிகாரியாக இருக்கலாம்; அல்லது ஆயிரம் பேருக்கு மாதம் ரூ. 70 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் தரும் பத்து மென்பொருள் நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபராகவும் இருக்கலாம். ஆனால், நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி... உங்கள் வருமானத்தில் 30 சதவிகிதம்தான். இந்தியா ஏன் பெரும் பணக்காரர்களுக்கு எனப் பிரத்யேக வரி விதிக்கக் கூடாது?

                          வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாடு, முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்குத் தேவையான சலுகைகளை வரையறுப்பதுபோலவே அவர்களுடைய கடமைகளையும் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப வரையறுப்பது முக்கியமானது. அமெரிக்கா ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாகச் சம்பாதிப்பவர்களைப் பெரும் பணக்காரர் என்று வரையறுத்து இந்த வரியை விதிக்கப்போகிறது. இந்தியச் சூழலில் இந்தத் தொகையை இன்றைய சூழலில் ரூ. 1 கோடி எனத் தீர்மானிக்கலாம். ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்குப் புதிய வரிவிதிப்பு முறையைக் கொண்டுவரலாம்.

                          இந்த நாடு டாடா, அம்பானிகள் வீட்டுச் சமையல் அறைகளுக்கும்கூட மானிய விலையிலேயே எரிவாயுவை அனுப்பும் நாடு. பணவீக்கமும் விலைவாசி உயர்வும் பொருளாதார மந்தநிலையை நோக்கி நாட்டை விரட்டிக்கொண்டு இருக்கும் சூழலில், இந்த நாட்டின் டாடா, அம்பானிகள் ஏன் இதுபற்றி சிந்திக்கக் கூடாது? 
2011 நாணய விகடன்

இந்தியாவில் உருவாக்கி விற்கப்போகிறோமா, இந்தியாவை அறுத்து விற்கப்போகிறோமா?

கோஷங்களை உருவாக்குதலில் உள்ள பெரிய அனுகூலம், கோஷங்கள் அவற்றுக்குப் பின்னுள்ள உண்மைகளை முழுக்க மறைத்து, ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிவிடும் என்பதுதான்.

‘இந்தியாவில் உருவாக்குவோம்!’
- நல்ல கோஷம். எதை உருவாக்கப்போகிறோம்? யாருக்காக உருவாக்கப்போகிறோம்?

உடல் முழுவதும் இயந்திரப் பாகங்கள் சுழலும் சிங்கம் படத்தை ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ (மேக் இன் இந்தியா) கொள்கையின் சின்னமாக அறிமுகப்படுத்திய மோடி, “இது சிங்கம் எடுத்துவைக்கும் முதல் அடி” என்றார். அதாவது, இந்தியா எனும் சிங்கம் இப்போது தான் தன்னைச் சிங்கமாக உணர்ந்து, முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது என்பது அவர் சொல்ல விரும்பியது. உண்மையில், எதற்காக மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று இந்தியப் பெருநிறுவனங்களின் உலகம் அவரை முன்நிறுத்தியதோ, அந்த நோக்கத்தை நோக்கி மோடி எடுத்துவைத்திருக்கும் முதல் அடி இது!

சிவப்பு நாடாவும் சிவப்புக் கம்பளமும்

முன்னதாக, ஜப்பான் பயணத்தின்போதே இந்தியாவின் புதிய தொழில் கொள்கை எப்படி இருக்கும் என்பதை மோடியின் பேச்சு உணர்த்தியது. “உங்கள் அதிர்ஷ்டத்தை இந்தியாவில் வந்து சோதித்துப் பாருங்கள். இந்தியாவில் குறைந்த செலவில், உற்பத்தியில் பல அதிசயங்கள் நிகழும். எந்தத் தொழிலதிபருமே குறைந்த செலவிலான உற்பத்தியைத்தானே விரும்புவார்? இந்தியாவில் ஏராளமான உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளனர்; வாருங்கள்!” என்று ஜப்பான் தொழிலதிபர்கள் இடையே அவர் தொடங்கிய உரையே சுரண்டலுக்கான அப்பட்டமான அழைப்பு.

சட்டை 50 ரூபாய் என்றால், கூலி எவ்வளவு?
நம்முடைய மக்கள்தொகையையும் வறுமைச் சூழலையும் பயன்படுத்திக்கொண்டு 50 ரூபாய் விலையில் ஒரு சட்டையை நாம் உலகத்துக்கு உருவாக்கிக்கொடுத்துவிடலாம். அப்படி 50 ரூபாய் அடக்கத்தில் ஒரு சட்டையை உருவாக்கு பவருக்கு அந்தச் சட்டையிலிருந்து என்ன வருமானம் கிடைக்கும்? அவருக்கு மூலப்பொருட்களை இத்தனை மலிவாகக் கொடுப்பவருக்கு என்ன கிடைக்கும்? ஒரு நாள் கண்ணியமான வருமானத்தைப் பெற இவர்களெல்லாம் எத்தனை நேரம் உழைக்க வேண்டும்? ஒரு நுகர்வோரோ வியாபாரியோ இதை யோசிக்காமல் போகலாம். அறவுணர்வும் தொலைநோக்கும் கொண்ட ஒரு பிரதமர் நிச்சயம் யோசிக்க வேண்டும்.

மைய நோக்கம் என்ன?
வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து இந்தியாவின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதே ‘இந்தியாவில் உருவாக்கு வோம்’ கொள்கையின் அடிப்படை நோக்கம் என்று அரசு கூறுகிறது. ஆனால், இக்கொள்கையின் மைய நோக்கம் எது என்பதைத் தொடக்க விழாவே காட்டிக்கொடுத்தது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்டிரி, ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார்மங்கலம் பிர்லா உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி 500 பெருநிறுவன முதலாளிகளே விழாவின் பங்கேற்பாளர்கள்.

இந்தியத் தொழில் துறையின் எதிர்காலம் இந்த 500+ பெருநிறுவன முதலாளிகளிடம்தான் இருக்கிறது என்கிற அரசின் பார்வையே மோசமானது. அவர்கள் நடுவே மோடி ஆற்றிய உரை இன்னும் ஆபத்தானது. “அரசுக் கொள்கைகள் அவ்வப்போது மாற்றப்படுவது, மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) விசாரணை எனப் பல்வேறு காரணங்களால் தொழிலதிபர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. நான் உங்கள் அச்சத்தை அகற்ற வும் நம்பிக்கையை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன். இந்த நாடு உங்களுடையது. நமது நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக வேண்டும்” என்றார் மோடி.

என்ன மாதிரியான சமிக்ஞை இது?
இந்தியாவின் பெருமுதலாளிகளை எந்த அரசாங்கத்தின் மாறுபட்ட கொள்கைகளும் எந்தக் காலத்திலும் மிரட்டியதில்லை. மாறாக, கொஞ்ச காலத்துக்கு முன் நம்முடைய பெருமுதலாளிகள் - அனில் அம்பானி, சுனில் மிட்டல், நவீன் ஜிண்டால், சஜ்ஜன் ஜிண்டால், குமார்மங்கலம் பிர்லா என்று - பலரும் சிக்கியது தொழில் விதிமீறல்களில். இன்னும் சொல்லப்போனால், நாட்டைச் சுரண்டும் ஊழல் - முறைகேடு குற்றங்களில். அதுவும் உச்ச நீதிமன்றம், தலைமைத் தணிக்கையாளர், மத்தியப் புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் உபயத்தில் சிக்கினார்கள்.

இந்நாட்டின் உயரிய நீதிசார் அமைப்புகளால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மத்தியில், “இனி உங்கள் அச்சத்தை அகற்றவும் நம்பிக்கையை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன்” என்று ஒரு பிரதமர் பேசுவது சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தவர்களுக்கும் என்ன மாதிரியான சமிக்ஞைகளை அனுப்பும்?

அரசாங்கம் பெருநிறுவன முதலாளிகளுக்கானதா?
அமெரிக்கப் பயணத்தில் இன்னும் வெளிப்படையாகப் பேசினார் மோடி. “அரசாங்கம் தொழில்களில் ஈடுபடக் கூடாது. அதன் வேலை தொழில்களுக்குத் துணையாக இருப்பது மட்டுமே... சில சமயங்களில் அரசாங்கங்கள் புதிய சட்டங்களை இயற்ற விரும்புகின்றன. நான் அதைச் செய்ய மாட்டேன். விரைவில் புதிய குழு ஒன்றை அமைக்க விருக்கிறேன். அதன் பணி, தேவையற்ற சட்டங்களை நீக்குவது மட்டுமே. தொழில் தொடங்க இந்தியாவுக்கு வாருங்கள்” என்றார்.

இந்தியாவில் தேவையற்ற சட்டங்கள் ஏராளமானவை இருக்கின்றன. ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் உட்பட. மோடி நீக்க விரும்பும் சட்டங்கள் இந்த ரகம் அல்ல. நோக்கியாவும் வோடஃபோனும் இங்கு மாட்டிக்கொள்ளக் காரணமாக இருக்கும் ரகச் சட்டங்கள். இந்தியாவில் சட்டப் புத்தகங்களிலாவது இன்னும் உயிரோடு இருக்கும் சுரண்டலுக்கு எதிரான சட்டங்கள். நீர், நிலம், வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்தும் தொழிலாளர்கள் நலன் சார்ந்தும் பெருமுதலாளிகளுக்குத் தடையாக இருக்கும் சட்டங்கள்/விதிகள்.

மோடி அரசின் தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறைச் செயலர் அமிதாப் காந்த் குழுவின் கையில் மட்டும் இப்படித் தூக்கிவீச வேண்டியவை என்ற பட்டியலில் 20 தொழிலாளர்கள் சட்டங்கள்/விதிகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று, ‘100 பேருக்கு மேல் பணியாற்றும் ஓர் ஆலையை மூடத் தீர்மானிக்கும் முன் அரசின் அனுமதியைப் பெற வேண்டும்’ என்பது. இந்த விதியை தூக்கிவிட்டு, ‘1000 பேர் வரை பணியாற்றுவோர் ஆலையை மூட அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை’ என்ற விதியைக் கொண்டுவர விரும்புகிறார்கள்.

அதாவது, ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் நிலத்தைக் கையகப்படுத்தி, பத்திரப் பதிவுக் கட்டணம்கூட இல்லாமல் பதிவுசெய்து கொடுத்து, தடையில்லா மின்சாரம், வரி விலக்குகள் என்று வாரி வழங்கிக் கொண்டுவரப்படும் நோக்கியா போன்ற ஒரு ஆலையில்- 999 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்போது -அவர்கள் எந்த நிலையிலும் யாருக்கும் பதில் சொல்லாமல் மூடிவிட்டு போகலாம். இது ஒரு உதாரணம். அவ்வளவே. இன்னும் நிலம் கையகப்படுத்தல் சட்டம், வன உரிமைச் சட்டம் என்று பூர்வகுடிகளின் உரிமைகளைப் பறிக்க வெறியோடு நிற்கிறது பெருநிறுவனங்கள் லாபி.

இயற்கை வளங்களைத் தாரைவார்க்கும் அரசின் நடவடிக்கைகள் அநேகமாக, நிலக்கரித் துறையைத் தேசியமயமாக்கல் பட்டியலிலிருந்து நீக்குவதிலிருந்து தொடங்கலாம். மத்திய மின்சார நெறிமுறை ஆணையம் இதற்கான பரிந்துரையை அரசுக்கு ஏற்கெனவே அனுப்பி யாகிவிட்டது.

யாருக்கான வேஷம் இது? 
அமெரிக்கப் பயணத்தின்போது, மோடி அங்கு ‘அங்கிள் சாம்’ வேஷம் போட ஏதுவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று, அரசு மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை கடாசப்பட்டது. காசநோய், இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்குப் பயன் படுத்தப்படும் 108 மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தும் கொள்கையை அரசு கைவிட்டிருக்கிறது. அமெரிக்க மருந்து நிறுவன அதிபர்களை ஈர்க்க இந்த நடவடிக்கை உதவும் என்று மோடி நினைத்திருக்கலாம்.

மேடையில் மோடி டிரம்ஸ் வாசித்ததைப் பற்றியும், ஒபாமாவுடன் இணைந்து கட்டுரை எழுதியதைப் பற்றியும், அவர் உருவாக்கும் கோஷங்களைப் பற்றியும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லோர் பார்வைகளுக்கும் அப்பாற்பட்டு, மேடைக்குப் பின்புறத்தில், அரங்கேறிக் கொண்டிருக்கின்றன விபரீத ஒப்பந்த ஒத்திகைகள்.

நமக்கான தொழில் கொள்கை எது? 
இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. ஆனால், அது கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்வதாக இருக்க வேண்டும். இந்தியாவின் தொழில் கொள்கையில் நிச்சயம் மாற்றம் தேவை; ஆனால், அது இயற்கையையும் சூழலையும் அறநெறிகளையும் சிதைக்காமல், நம் சமூகத்தில் தொழில்முறைக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் மாற்றமாக இருக்க வேண்டும். சுதேசி உற்பத்தியைச் சுதந்திரப் போராட்ட ஆயுதமாக முன்னெடுத்த நாடு இது. தொழில் கருவிகளைக்கூட ஓர் உயிராக, கடவுளாக வழிபடும் மரபு நம்முடையது. உயிருள்ள சிங்கத்தின் இயக்கத்தை இயந்திரப் பாகங்களின் இயக்கமாகப் பார்க்கும் நவீன இயந்திரச் சிந்தனையிலிருந்து அல்ல; நம்முடைய அறம்சார் தொழில் வரலாற்றிலிருந்தே நாம் நமக்கான பாடத்தைப் பெற முடியும்!

நன்றி சமஸ்.

கைப்பிள்ளை இந்தியா!



ண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கேட்டார், “இந்தியாவில் உள்ள ஆங்கில ஊடகங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

நான் சொன்னேன், “இந்திய ஊடகங்களை ஆங்கில ஊடகங்கள்பிராந்திய ஊடகங்கள் என்று தனித்தனியே பிரித்துப் பார்க்க ஏதும் இல்லை. அரிதான சில விதிவிலக்குகளைத் தவிரபொதுவாக நம்முடைய ஊடகங்கள் காப்பி ஊடகங்கள். நம்முடைய ஆங்கில ஊடகங்கள் மேற்கத்திய ஊடகங்களை காப்பியடிக்கின்றனபிராந்திய ஊடகங்கள் ஆங்கில ஊடகங்களை காப்பியடிக்கின்றன.

மேலோட்டமாக இது சாதாரணமான விஷய மாகத் தெரியலாம். அப்படி அல்ல. ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற - மேற்கத்திய மன்னராட்சிக் கால - ராபர்ட் கார்லைல் சிந்தனையேகூட மேலோட்டமானதுதான். என்னைக் கேட்டால்,ஊடகங்கள்தான் நவீன சமூகத்தின் எதிர்காலத்தைக் கல்வித் துறையோடு சேர்ந்து கட்டியமைக்கும் கொத்தனார்கள் என்று சொல்வேன்.

எங்கிருந்து வருகிறது பார்வை?

இன்றைக்கு நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு பார்வை இருக்கிறது. உதாரணமாகஉங்களுக்கு மன்மோகன் சிங்கைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். மோடியைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். மம்தாவைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். சன்னி லியோனைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். ஆனால்இந்தக் கருத்துகளைத் தாண்டி பொதுவில் - நம் அனைவர் மத்தியிலும் - ஒரு கருத்து இருக்கிறது. மன்மோகன் சிங் எதையும் வேகமாகச் செய்ய மாட்டார் என்று நம்புகிறோம்மோடி ஒரு காரியக்காரர் என்று நினைக்கிறோம்மம்தாவைக் கோபக்காரராகவும் சன்னி லியோனை எதற்கும் துணிந்தவராகவும் பார்க்கிறோம். நம்மிடம் இந்தப் பொதுவான பார்வையை உருவாக்கியது யார்யோசித்துப்பாருங்கள். மன்மோகன் சிங்கையோ சன்னி லியோனையோ நம்மில் எத்தனை பேருக்கு நேரடியாகத் தெரியும்எந்த அடிப்படையில் நாம் அவர்களைத் தீர்மானிக்கிறோம்இந்தத் தீர்மானங்கள் மன்மோகன் சிங்கின் எதிர்காலத்தையோமோடியின் எதிர்காலத்தையோ தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றால்இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது யார்?

சந்தேகமே வேண்டாம். ஜனநாயகத்தில் ஊடகங்கள் அவ்வளவு சக்தி பெற்றிருக்கின்றன. கருத்துகளைசிந்தனைகளை உருவாக்குவதன் மூலம் சமூகத்தின் போக்கையே தீர்மானிக்கின்றன. ஆனால்ஒரு சமூகத்தின் பார்வையை உருவாக்கும் ஊடகங்கள் ஒரு நாட்டில்காலனிய இரவல் சிந்தனையோடும் பார்வையோடும்தான் காலம் தள்ளுகின்றன என்றால்அந்தச் சமூகத்தின் - நாட்டின் பார்வையும் சிந்தனையும் எப்படி இருக்கும்?

நீங்கள் யோசித்துப்பாருங்கள். ஏன் நம்முடைய ஊடகங்களில் அமெரிக்க - பிரித்தானிய செய்திகள் அன்றாடம் (அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள்) இடம்பிடிக்கின்றனஏன் நமக்கு ஐரோப்பியச் சூழல் தெரியும் அளவுக்குஅருகில் இருக்கும் சீனாவின் சூழலோ மியான்மரின் சூழலோ தெரியவில்லைகடற்கரையிலோ சுற்றுலாத்தலங்களிலோ ஒரு வெள்ளைக்கார அமெரிக்கர் வழிகேட்டால்,பம்மி பவ்யமாகப் பதில் சொல்லும் நாம்ஏன் ஒரு கருப்பின ஆப்பிரிக்கரைப் பார்த்தால் மலினமாக நினைக்கிறோம்நம்முடைய அரசும் ஆங்கில ஊடகங்களும் நாமும் இன்னமும் ஏன் - ஆங்கிலேயர்கள் தவறாக அழைத்ததுபோலவே - தூத்துக்குடியை டூட்டுகொரின் என்றும் சேலத்தை சலேம் என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறோம்ஆங்கிலம் தெரியாதவர்களை - அவர்கள் தத்தமது துறைகளில் எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும் - ஒருபடி கீழே இறக்கியே பார்க்கிறோமே ஏன்முக்கியமாக,ஆங்கிலத்தில் எழுதும்போதோ பேசும்போதோ ஒரு வார்த்தை தவறாகிவிட்டாலும் கூனிக்குறுகும் நமக்கு நம்முடைய தாய்மொழியில் சேர்ந்தாற்போல்பத்து வரிகள் பிழையின்றி எழுதத் தெரியாதது கூச்சம் தராதது ஏன்?

இவை எல்லாவற்றுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உண்டு. வரலாற்றுத் தொடர்பு. திட்டமிட்ட வரலாற்றுத் தொடர்பு. 

எது இந்தியர்களுக்குச் சிறந்தது?

இந்தியச் சிந்தனையியல் அமைப்பையே மாற்றி அமைத்த மெக்காலேஇந்தியாவில் ஆங்கிலக் கல்விமுறை ஏன் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நியாயங்களை வில்லியம் பெண்டிங் பிரபுவுக்குப் பட்டியலிடும், 2.2.1835 தேதிய கல்வி அறிக்கையில் கூறுகிறார், “நாம் ஆங்கில அடிப்படையிலான கல்விமுறைக்கு இந்தியர்களை மாற்றும்போதுஆங்கிலம் படித்தவர்கள் வர்க்கரீதியாகப் படிநிலையில் மேலே வருவார்கள். அவர்கள் ரத்தத்திலும் பழுப்பு நிறத் தோலிலும் இந்தியர்களாக இருப்பார்கள். ஆனால்உள்ளே அவர்களுடைய ரசனைகருத்துசிந்தனைகொள்கைஅறவியல் எல்லாமே ஆங்கிலேயர்களை ஒட்டியதாக இருக்கும்.

இதன் அர்த்தம் இந்தியர்களை ஆங்கிலேயர்களாக மாற்றுவது அல்ல. ஆங்கிலேய அடிமை மனமாக நம்முடைய மனங்களை மாற்றி அமைப்பது. ஆங்கிலேயர்கள் எதை விரும்புகிறார்களோஅதுவே உலகத்துக்கும் நல்லதுஆங்கிலேயர்கள் எதைச் சிந்திக்கிறார்களோஅதுவே உலகத்துக்கும் நல்லதுஆங்கிலேயர்கள் எதைச் செய்கிறார்களோஅதுவே உலகத்துக்கும் நல்லது என்று இந்திய ஆன்மாவை நம்ப வைப்பது. மெக்காலே எதை நினைத்தாரோ அதைச் சாதித்தார். இன்றுவரை இந்தியா அப்படித்தான் சிந்திக்கிறது. தன்னுடைய பல நூற்றாண்டு சிந்தனை வளங்களை மறந்து இந்தியா யோசிக்கிறது. ஆங்கிலேய ஆட்சி இங்கு ஏற்படுத்திய மோசமான விளைவு இதுதான். அவர்கள் மகத்தான வெற்றிபெற்ற இடமும் இதுதான். ஆங்கிலேயர்களுக்கு எது சிறந்ததோஅதுவே உலகத்துக்குச் சிறந்தது.

அறிவுசார் இந்தியாவின் மிகப் பெரிய சாபக்கேடு என்று இதை நினைக்கிறேன் - காப்பியடிப்பது. மேற்கத்திய பார்வையை அடியொற்றிச் சிந்திப்பது. அதாவதுசிந்தனை ஊழல்.


பார்ப்பனர்கள் பார்ப்பன எதிரிகள்

இந்தியாவில் ஆங்கிலம் பல்கிப் பரவியதற்குப் பார்ப்பனர்கள் ஆங்கிலத்தையும் ஆங்கிலேயர்களின் சிந்தனையையும் வேகமாகச் சுவீகரித்துக்கொண்டது ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லப்படுவது உண்டு. உண்மை என்னவென்றால்பார்ப்பனர்கள் மட்டும் அல்லபார்ப்பன எதிர்ப்பாளர்களும் ஆங்கிலேயச் சிந்தனையை ஆக்ரோஷமாக ஆரத் தழுவினார்கள் என்பதுதான்.அடிமைத் தனமாதீண்டாமையா எது கொடுமை என்றால்தீண்டாமைதான். அடிமைத்தனத்தில் கல்விநன்னடத்தைகலாச்சாரம்,செல்வம் ஆகியவை யாவது கிடைக்கும் வாய்ப்புண்டு. ஆனால்தீண்டாமையோ இவற்றில் ஒன்றைக்கூடத் தராது. ஆகையால்,சர்ச்சைக்கே இடம் இல்லாமல்அடிமைத்தனமானது தீண்டாமையைக் காட்டிலும் நூறு மடங்கு மேலானது என்று சொல்வேன்என்றார் அம்பேத்கர். ஆங்கிலம்தான் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழி. உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும்கூட ஆங்கிலத்தி லேயே பேசுங்கள்பேசப் பழகுங்கள்பேச முயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழி யுங்கள்” என்றார் பெரியார். ஓர் அடிமைத்தனத்துக்கு மாற்று இன்னோர் அடிமைத்தனமா என்ற கேள்வி இன்று வரை எழுப்பப்படவில்லை.

பார்த்தொழுகும் மனோபாவம்

இந்தியச் சூழலில்பார்த்தொழுகும் மனோபாவத்தைப் பற்றி மிக ஆழமாகச் சிந்தித்தவர் அம்பேத்கர். பிரெஞ்சு சமூக உளவியலாளரான கேப்ரியல் டார்டேவின் பார்த்தொழுகும் மனோபாவம் தொடர்பான மூன்று விதிகளைக் குறிப்பிடும் அம்பேத்கர்மேலிருப்பவர்களைப் பார்த்துக் கீழிருப்பவர்கள் அப்படியே தங்கள் போக்கை அமைத்துக்கொள்ளும் இந்த மனோபாவத்தை பார்த்தொழுகும் தொற்றுநோய்’ (infection of imitation) என்று கடுமையாகக் குறிப்பிடுகிறார். ‘‘இந்தியாவில் சாதிகள் உருவாக்கத்துக்குஇந்தியர்களின் மனதில் ஆழமாக வேரூன்றி இருந்தபார்த்தொழுகும் மனோபாவமே முக்கியமான காரணமாக இருந்தது” என்று சொல்கிறார் அம்பேத்கர்.

ஆனால்பார்த்தொழுகும் மனோபாவம் ஆழ வேரூன்றிய இந்தியர்களிடையேஆங்கிலேயக் கல்வி முறை எத்தகைய பின்விளைவுகளை உரு வாக்கும் என்கிற அபாயத்தை அம்பேத்கரைவிடவும் காந்தியே முழுமையாக உணர்ந்திருந்தார். காந்தி சொன்னார், “வெளிநாட்டுப் பயிற்றுமொழி நம் குழந்தைகளை அந்நியர்கள் ஆக்குகிறது. இன்றைய கல்விமுறையின் மிகப் பெரிய கொடுமை இது. எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால்நம் இளைஞர்களுக்குப் பிறநாட்டு மொழிவழியாகப் பயிற்சி அளிப்பதை உடனே தடுத்து நிறுத்துவேன்நமது ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் உடனடியாகத் தாய்மொழியில் பாடம் நடத்துமாறும் இல்லையெனில்வேலையிலிருந்து நீக்குமாறும் உத்தரவிடுவேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோஅவ்வளவு சீக்கிரம் இந்தக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்” என்றார் காந்தி.

இந்தியாவின் தலைசிறந்த இரு மானுட வியலாளர்கள் காந்தியும் அம்பேத்கரும். ஆனால்இன்று வரை இவர்கள் இருவரையும் சரியான விமர்சனங்களுடன் ஏற்பவர்கள் அரிது. காந்தியை ஏற்பவர்கள் அம்பேத்கரை நிராகரிப்பார்கள். அம்பேத்கரை ஏற்பவர்கள் காந்தியை நிராகரிப்பார்கள். ஒரு மத்திய நிலையில் இருந்து சிந்திக்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. இதுவும் காலனிய அடிமை மனோபாவம்தான். பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பழக்கப்பட்ட மனோபாவம்.

உளவியல்ரீதியாகப் பார்க்கும்போதுஇந்திய மனம் காலனிய அடிமை மனோபாவமாக மாறியதில் ஆங்கிலக் கல்விக்கு முக்கியமான ஓர் இடம் உண்டு. பிரித்தானிய அரசுக்கு - கிழக்கிந்திய கம்பெனிக்கு - அவர்களுடைய வேலைக்கு - ஏற்ற திறன் மிக்க ஆட்களைத் தயார்செய்வதே கல்விமுறையின் முக்கிய நோக்கமாகக் கருதினார்கள் ஆங்கிலேயர்கள். இன்றைக்கு இந்திய மனதில் அதுதான் ஆழ வேரூன்றியிருக்கிறது. நம்முடைய சமூகத்தில்எதை உயர்ந்த வேலை என்று நாம் குறிப்பிடுகிறோம்எது அதிக சம்பளம் தருமோஅதுவே நமக்கு உயர்ந்த வேலை. எதை உயர்ந்த படிப்பாக நாம் கருதுகிறோம்எது உயர்ந்த சம்பளத்தைத் தரும் வேலையை வாங்கித்தருமோ அதுவே உயர்ந்த படிப்பு. உடைத்துச் சொல்ல வேண்டும் என்றால்கல்வி என்பது பிழைப்புக்கான கருவி. மொழியைப் பற்றியும் இப்படியான பார்வையே நம்மை வழிநடத்துகிறது. உதாரணமாகஒருவரைப் பார்த்து, “ஆங்கிலம் அவருக்கு சரளம்” என்று சொல்கிறோம் என்றால்எந்த அடிப்படையில் சொல்கிறோம்ஆங்கிலத்தில் எழுதபடிக்கபேச அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான். அதாவதுமொழி என்பது தொடர்புக்கான கருவி. அவ்வளவுதான். அது நம்முடைய கலைகலாச்சாரம்பண்பாடுவரலாறு ஆகியவற்றைத் தேடி அடைய உதவும் திறவுகோல் என்ற பார்வை நம்மிடம் இல்லை. முக்கியமாகதாய்மொழியைப் புறக்கணிக்கும்போது நம்முடைய பல நூற்றாண்டு வரலாற்றுப் பொக்கிஷங்களை நாம் இழக்கிறோம் என்ற பார்வை நம்மிடம் இல்லை.

ஊடகங்கள் மேலேகல்வித் துறை கீழே

இந்தப் பார்வை உருவாக்கும் சிந்தனைக் கட்டுமானத்தின் உச்சத்தில் ஊடகங்கள் இருக்கின்றன என்றால்அஸ்திவாரத்தில் கல்வித் துறை இருக்கிறதுகீழிருந்து மேலாக கல்வித் துறையும் மேலிருந்து கீழாக ஊடகங்களும் நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுக்கிறன காப்பியடிக்கவும் மேற்குலகை அடியொற்றித் தொழவும்.

தமிழ்நாட்டில் தமிழ் செத்துக்கொண்டிருக்கிறதுஅரசாங்கமோ தமிழன்னைக்குச் சிலை அமைக்கத் திட்டமிடுகிறது அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போல. எனில்நம்முடைய சிந்தனைகள் எங்கிருந்து உற்பத்தியாகின்றனஎதை இலக்காக நோக்கிச் செல்கின்றன... புரிகிறதா?

Sunday, 11 January 2015

நம்ம ஊரு ஆர்க்கிமிடீஸ்!



ஆந்திரமாநிலம் அடிலாபாத்தைச் சேர்ந்தவர்கள் அந்த என்ஜினியரிங் மாணவர்கள். தங்கள் படிப்பின் ஒரு பகுதியான புராஜக்ட் தொடர்பாக அவரை அணுகியிருந்தார்கள். என்ஜினியரிங் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் ஏதாவது புராஜக்ட் செய்து சமர்ப்பிக்க வேண்டும். அவரோ தினம் தினம் அந்தப் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அவ்வப்போது ஏதாவது சர்க்யூட்களை கொடுத்து, ஏதாவது செய்யச் சொல்வார். பழைய கார் பேட்டரிகளை கொண்டுவந்து கொடுத்து பழுதுபார்க்கச் சொல்வார். மற்றபடி புராஜக்ட் நடைபெறும் அறிகுறியே சுத்தமாக இல்லை.

பையன்கள் பயந்துவிட்டார்கள். “சார் நாங்க ஏதாவது உருப்படியா பண்ணியாகனும் சார்!” என்று அவரிடம் சீரியஸாகவே கேட்டார்கள்.

“ம்.. புராஜக்ட் பண்ணனும்லே? ஒண்ணு பண்ணுவோம், அடுத்த ஊருலே ஒரு அறிவியல் கண்காட்சி நடக்குது. நாம பண்ண புராஜக்ட்டை அங்கே காட்சிப்படுத்துவோம்” என்றார்.
அப்போதைக்கு சமாதானமானர்கள். ஆனால் பிறகுதான் புரிந்தது. “நாமதான் இன்னும் எந்த புராஜக்ட்டும் பண்ணலையே?”

அறிவியல் கண்காட்சிக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பேட்டரிகள், சர்க்யூட்டுகள் மற்ற எந்திரக் குப்பைகளையெல்லாம் கண்காட்சிக்கு எடுத்துச் செல்ல தயாராகுமாறு மாணவர்களிடம் அவர் சொன்னார்.

“ஒரு வேன் புடிச்சிடலாமா சார்!”

“வேண்டாம். மாட்டு வண்டி ஒன்னு ஏற்பாடு பண்ணியிருக்கேன்”

“மாட்டு வண்டியா?” மாணவர்களுக்கு கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது.

அவர் சொன்னபடியே மாட்டு வண்டி வந்தது. பேட்டரிகளை மாட்டு வண்டியில் பொருத்தச் சொன்னார். சர்க்யூட்களை எடுத்து எங்கெங்கோ வயர்களில் இணைத்தார். சைக்கிள் டயனமோ போன்று இருந்த ஒன்றினை சக்கரங்களில் பொறுத்தினார். என்னதான் செய்கிறார் என்று மாணவர்கள் ஆச்சரியமாக வாய்பிளந்து நின்றார்கள். ‘ஓய் ஓய்யென்று’ வண்டியோட்டி சாட்டைகளைச் சொடுக்கி மாடுகளை அடிக்க, வண்டி கிளம்பியது.

அறிவியல் கண்காட்சியில் இவர்களுக்கு என்று ஒரு ஸ்டால் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு டிவி, ப்ரிட்ஜ், ஃபேன் என்று மின்சாதனப் பொருட்கள் நிரம்பியிருந்தது. நம் மாட்டுவண்டி நேராக ஸ்டாலுக்கு முன்பாக சென்று நிற்க, அவசர அவசரமாக வண்டியில் பொருத்தப்பட்டிருந்தவற்றை கழட்டி ஸ்டாலில் புது தினுசாக மாணவர்களை பொருத்தச் சொன்னார் அவர்.

அவர் சொன்னபடியே மின்சாதனப் பொருட்களின் பிளக்குகளை பேட்டரியில் இணைக்க, ‘ஆச்சரியம்!’. பேன் சுழலத் தொடங்கியது. டிவியில் என்.டி.ஆர். கர்ஜித்தார். எல்லாமே மின்சாரத்தில் இயங்குவதைப் போலவே இயங்க ஆரம்பித்தன. மாணவர்களின் புராஜக்ட் சக்சஸ்!

‘மாட்டு வண்டியின் மூலமாக மின்சாரம்!’ என்பதுதான் மாணவர்கள், அவர்களுக்கு தெரியாமலேயே செய்த புராஜக்ட். சைக்கிளில் சின்ன டயனமோ வைத்து ஒரு பல்புக்கு தேவையான மின்சாரத்தை உருவாக்குவதைப் போல மாட்டு வண்டியின், பெரிய சக்கரத்தைப் பயன்படுத்தி பேட்டரியை சார்ஜ் செய்து, ஜெனரேட்டருக்கு மாற்றாக மின்சாரம் உருவாக்கினால் என்ன என்ற ஐடியாவுக்கு சொந்தக்காரர் ‘அவர்’. டேவிட், வயது 63. ஹைதராபாத்தில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற ஐ.ஐ.ஐ.டி.யின் (International Institute of Information Technology) பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தில் கண்டுபிடிப்பாளராக பணிபுரிகிறார்.

வீண் என்று நினைத்து தூக்கிப் போடப்படும் எந்திரக் கழிவுகளில் இருந்து புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதே பொதுவாக இவரது பாணி. சர்வதேச புகழ்வாய்ந்த நிறுவனத்தில் கண்டுபிடிப்பாளராக பணிபுரிகிறாரே, நிறைய படித்திருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். நம்புங்கள். பள்ளிப்படிப்பை கூட டேவிட் முடித்ததில்லை. இன்றுவரை இவரின் கல்வித்தகுதி ஏழாம் வகுப்பு மட்டுமே. தேசத்தின் பெரிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் கல்வியின் அடிப்படையில் இல்லாமல், திறமையின் அடிப்படையில் இவருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

டேவிட்டின் சொந்தக்கதையும் கூட அவரது கண்டுபிடிப்புக் கதைகளைப் போலவே சுவாரஸ்யமானது. ஆனால் சற்று சோகமானதும் கூட. ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் டேவிட் பிறந்தார். அவரது தந்தை ஒரு மருத்துவர், தமிழர். அவரது தாய் ஆந்திராவைச் சேர்ந்தவர், படிப்பறிவில்லாதவர். டேவிட்டுக்கு நான்கு வயதிருந்தபோதே அவரது தந்தை இறந்துவிட்டார். படிப்பிறவில்லாத தாயை, தந்தைவழி உறவினர்கள் ஏமாற்றி, சொத்துக்களை பிடுங்கிக் கொண்டு குழந்தைகளோடு நடுதெருவில் விட்டனர்.

ஒருவேளை உணவுக்கே வழியில்லாத நிலையில் டேவிட் ஒரு அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டார். அங்கேதான் ஏழாம் வகுப்பு வரை படித்ததாக சொல்கிறார். ஒரு கட்டத்தில் விடுதி வாழ்க்கை கசந்துவிட மீண்டும் தாயிடமே சென்றிருக்கிறார். பிழைப்புக்காக டெல்லிக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. டேவிட்டின் தாய் பத்துப் பாத்திரம் தேய்த்து குடும்பத்தைக் காப்பாற்ற, இவரும் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்திருக்கிறார். ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு நாளில் டேவிட்டுக்குள் ஒளிந்திருந்த கண்டுபிடிப்பாளர் பிறந்திருக்கிறார்.

அவருக்கு திடீர் திடீரென ஏதாவது ஐடியாக்கள் தோன்றும். கையில் கிடைத்த ஓட்டை, உடைசல் பொருட்களை வைத்து அவற்றை செயல்படுத்தத் தொடங்கிவிடுவார். எந்த ஒரு நவீன சாதனத்தைப் பார்த்தாலும், “இது ஏன் இப்படியிருக்கு? இப்படி பண்ணியிருக்கலாமே?” என்று எல்லாவற்றையுமே மாற்றி சிந்திக்க ஆரம்பித்தார் (Lateral Thinking). இம்மாதிரியான மாற்று சிந்தனைகள் அவருக்கு இருபது வயது வாக்கில் தோன்றியதாக சொல்கிறார்.

‘ஒரு சின்ன ஐடியா உலகத்தையே மாற்றக்கூடும்!’ என்பது பிரபல விளம்பர வாசகம். இருபத்து நான்கு மணி நேரமும் ஐடியா மணியாக வாழ்ந்துகொண்டிருந்த டேவிட்டுக்கும் உலகம் மாறியது. ஆரம்பத்தில் சிறிய சிறிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, ஏரியாவாசிகளை அசரடித்துக் கொண்டிருந்தவருக்கு, திடீரென பெரிய ஐடியாக்களும் உதிக்கத் தொடங்கியது.

தன்னுடைய கண்டுபிடிப்புகளை செயல்படுத்த பணம் தேவை. டெல்லியிலிருந்த தேசிய ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்துக்கு (NRDC) பணத்துக்காக படையெடுக்க ஆரம்பித்தார். “இதை கண்டுபிடித்திருக்கிறேன், அதை கண்டுபிடித்திருக்கிறேன். இவற்றை செயல்படுத்த பணம் தேவை” என்று கஜினி முகம்மது மாதிரி தினமும் நிறுவனத்துக்கு போய் நின்று கொண்டிருப்பார். இவரது கண்டுபிடிப்புகள் சரியானதுதானா என்று ஆராய அந்த அமைப்பு டெல்லி ஐஐடியில் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் சாமிநாதனிடம் அனுப்பி வைப்பார்கள்.

’டேவிட் ஒரு கண்டுபிடிப்பாளர்’ என்பதை முதலில் ஒத்துக்கொண்டவர் பேராசிரியர் சாமிநாதனே. இவரது கண்டுபிடிப்புகளை பல்வேறு நிறுவனங்களுக்கும் பேராசிரியரே சிபாரிசு செய்திருக்கிறார்.

ஆயினும் போதுமான கல்வியறிவு இல்லாத நிலையில் டேவிட் பலமுறை மற்றவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அப்போது டேவிட் புதியதாக ஒரு பல்பினை கண்டறிந்திருந்தார். மிக சிறிய ஐடியாதான் அது. ஆனால் நல்ல பலன் தரக்கூடியதாக இருந்தது. நாம் வழக்கமாக உபயோகப்படுத்தும் குண்டு பல்பின் உள்ளே ஒரு டங்ஸ்டன் இழை இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஸ்விட்ச் போட்டதுமே இந்த இழை ஒளிரும். வெளிச்சம் கிடைக்கும். இந்த இழை அறுந்துவிட்டால் ப்யூஸ் போய்விட்டது என்று கூறி பல்பினை தூக்கிப் போட்டுவிட்டு, வேறு பல்பு வாங்க வேண்டியதுதான்.

ஒரு இழை அறுந்துவிட்டால் ஒட்டுமொத்த பல்பையே தூக்கிப்போட்டுவிட வேண்டும் என்ற நிலையை டேவிட்டால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரே பல்பில் இரண்டு இழைகளை வைத்து தயாரித்தால் என்ன குறைந்துவிடப் போகிறது? ஒன்று அறுந்தாலும் இன்னொன்றின் மூலமாக பல்பு மேலும் சிலகாலம் இயங்குமல்லவா? என்று யோசித்தார். செயல்படுத்தினார். நீண்டகாலத்துக்கு உழைக்கக்கூடிய பல்பினை கண்டறிந்தார். இது மிகச்சிறிய ஐடியாதான். யாருக்கு வேண்டுமானாலும் தோன்றக்கூடும். ஆனால் யாருக்கும் தோன்றாமல் டேவிட்டுக்கு தோன்றியது. அதை அவர் செயல்வடிவத்திலும் கொண்டுவந்தார்.

ஒரு பல்பு கம்பெனிக்காரர்கள் டேவிட்டை அணுகினார்கள். இந்த இரண்டு இழைரக பல்புகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றினை டேவிட்டை பங்குதாரராக வைத்துத் தொடங்கினார்கள். நிறைய தயாரித்தார்கள். நிறைய லாபம் வந்தது. ஒருக்கட்டத்தில் லாபத்தோடு அவர்கள் கம்பியை நீட்டிவிட, தொழிலதிபராக மாறியிருந்த டேவிட் மீண்டும் தெருவுக்கு வரநேர்ந்தது. இதுபோல நான்கைந்து முறை டேவிட் மற்றவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட அனுபவங்களுக்குப் பிறகே கண்டுபிடிப்புகளை முறைப்படி பேடண்ட் (Patent) செய்யவேண்டும் என்பதை அறிந்தார் டேவிட். நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகள் இன்று இவரது வசம்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சூரியஒளியில் கதிரறுக்கும் இயந்திரம், மாட்டுச்சாணம் மூலமாக மின்சாரம் தயாரித்தல், மிகக்குறைவான மின்சாரத்தில் இயங்கக்கூடிய நெசவு இயந்திரம், இப்போது நாம் பயன்படுத்தும் மின்விசிறிகளின் மின் தேவையில் பாதியளவே பயன்படுத்தி இயங்கக்கூடிய மின்விசிறிகள் என்று மக்களின் பயன்பாடுகளின் அடிப்படையில் ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டறிந்திருக்கிறார்.

சமீபத்தில் சென்னை வந்திருந்தவரை சந்தித்தோம். கிரேக்க தத்துவவாதி, விஞ்ஞானி ஆர்க்கிமிடீஸ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நெம்புகோல் தத்துவத்தை (Lever Principle) கண்டுபிடித்தார். அதையும் விடச் சிறந்ததாக, முற்றிலும் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறாராம் டேவிட். அதற்கு பேடண்ட் வாங்கவே சென்னை வந்திருக்கிறார். இந்த கண்டுப்பிடிப்பு உலகின் மற்ற அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் அறிவியல் உலகின் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக டேவிட்டும் இடம்பெறுவார்.

“என் தோற்றத்தை கண்டு நிறைய பேர் ஆச்சரியப்படுகிறார்கள். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதால் இளமையான தோற்றம் வாய்த்திருக்கிறதா என்று கேட்கிறார்கள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா, சோகமாக இருக்கிறேனா என்பதைவிட இயற்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா என்பதே முக்கியம். அது மகிழ்ச்சியாக இருக்கும்பட்சத்தில் தன் குழந்தைகளான மனிதர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். நாம் முதலில் பழகவேண்டியது மனிதர்களிடமல்ல. இயற்கையிடம்!” என்று தத்துவம் பேசுகிறார்.
குடும்பம் பற்றி கேட்டால், “அது ஒரு பெரிய சோகக்கதை. நீங்க அவசியம் தெரிஞ்சுக்கணுமா?” என்று கேட்கிறார்.

உலகின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவர்களது சொந்தக்கதை எப்போதுமே சோகக்கதையாகவே அமைகிறது. டேவிட்டும் விதிவிலக்கல்ல.

(நன்றி : புதிய தலைமுறை)

ஒரு கிராமம். ஒரு மனிதர். ஓர் அதிசயம்!



ஒரு கிராமம் என்றால் என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?

வயல். பம்ப்செட். கால்நடைகள். பண்ணையார். ஆலமரம். நாட்டாமை. பஞ்சாயத்து. சொம்பு. அய்யனார் கோயில். பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

ஆனால் இந்த கிராமம் அப்படியல்ல.

இங்கு வசிக்கும் அனைவருமே வசதியான பங்களாவில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சொகுசு கார் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் டாலர் (நம் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலே) வங்கி கையிருப்பாக இருக்கிறது.

மருத்துவம், கல்வி, வீடு.. ஏன் சமைக்கும் எண்ணெய் கூட இந்த கிராமத்தாருக்கு கிராமக்குழுவால் இலவசமாகதான் வழங்கப்படுகிறது.

வாயைப் பிளக்காதீர்கள். இந்த ஊர் நம் நாட்டில் அல்ல. சீனாவில் இருக்கிறது. கிழக்கு சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் இந்த ஹூவாக்ஸி. 'உலகின் நெ.1 கிராமம்' என்று கூறி, உலகெங்கும் இருந்து இந்த ஊருக்கு பயணிகள் குவிகிறார்கள். சமூக ஆராய்ச்சியாளர்கள், இந்த கிராமத்தின் திடீர் வளர்ச்சியின் பின்னணி குறித்து ஆராய்ந்து கட்டுரைகளாக எழுதித் தள்ளுகிறார்கள். 1994ல் இருந்து சீனாவின் இரும்புத்திரை விலகிய பிறகு, உள்ளூர் மற்றும் அயல்நாட்டுப் பயணிகள் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் இந்த ஊருக்கு வந்து வேடிக்கை பார்த்து சென்றிருக்கிறார்கள்.

ஒரே இரவில் நடந்தது இல்லை இந்த அதிசயம். கிராமத்தில் வசிக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் தெரியும், அந்தக் காலத்தில் ஹூவாக்ஸி எப்ப்டி இருந்தது என்று.

சில வருடங்களுக்கு முன்பு 1500 பேர் மட்டுமே வாழ்ந்த மிகச்சிறிய குக்கிராமம் இந்த ஹூவாக்ஸி. மொத்த சுற்றளவே ஒரு சதுரகிலோ மீட்டர்தான். சீனாவின் பாரம்பரிய கிராம வாழ்க்கை. அளவில் சிறிய வீடுகள். விவசாயம்தான் பிரதானத் தொழில். சம்பாதிக்கும் சொற்பப்பணம் வயிற்றுக்கும், வாய்க்கும் சரியாகப் போகும் சராசரி கிராம வாழ்க்கை.

ஒரு மனிதர் இவை எல்லாவற்றையும் மாற்றிட நினைத்தார். எல்லாமே மாற வேண்டும். கனவு காணும் மாற்றங்கள் அனைத்தும் அமைந்திட வேண்டும். மக்கள் சுகமாய் வாழ வேண்டும். மண்ணில் சொர்க்கத்தை படைத்திட வேண்டும்.

அந்த மனிதர் ஹூ ரென்பாவ். அந்த கிராம கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர். கிட்டத்தட்ட நம்மூர் பஞ்சாயத்துத் தலைவர் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

உலகமயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை பல நாடுகளும், பொருளாதார வல்லுனர்களும் அச்சத்தோடு ஆராய்ந்துக் கொண்டிருந்த வேளையில் இவர், அதனால் விளையக்கூடிய நன்மைகளை மட்டும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். கம்யூனிஸத்தின் பொருளாதார அடிப்படைகள் வாயிலாக சந்தைப் பொருளாதாரத்தை அணுகினார்.

ஒரு தீவிர கம்யூனிஸ்ட்டும், விவசாயியுமான ஹூ இம்மாதிரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பாக சிந்தித்தார் என்பதை நம்புவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் இப்படித்தான் அவர் தனது கிராமத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்தார். முழுக்க விவசாயக் கிராமமாக இருந்த ஹூவாக்ஸியை நவீன விவசாயம் மற்றும் தொழில் பலம் மிக்க கிராமமாக மாற்றம் செய்வித்தார்.

நூற்றுக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மழைக்கால திடீர் காளான்களாய் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கியது. கிராமவாசிகள் விடுமுறையின்றி வாரத்தின் 7 நாட்களுக்கும் கடுமையான உழைப்பினைத்தர முன்வந்தனர். ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் பொதுவான வளர்ச்சி என்பதுதான் ஹூவின் திட்டம். இதுதான் உண்மையான 'சோஸலிஸம்' என்று அவர் சொன்னார்.

கடுமையாக உழைத்தவர்களுக்கு குறுகிய காலத்திலேயே பலன் கிடைக்கத் தொடங்கியது. கிராமத்தின் முகம் மாறியது. ஒரே மாதிரியான வீடுகள், வாகனங்கள் எல்லோருக்கும் கிராமக்குழு வழங்கியது. இதற்காக தொழிலாளர்கள் காசு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. ஒட்டுமொத்த லாபத்தை ஒட்டுமொத்தமாக பிரித்துக் கொண்டார்கள். இதில் ஏதாவது ஊழல், கீழல்? கொன்று போட்டுவிடுவார்கள்.

ஹூவாக்ஸி வாசிகள் கல்வியிலும் கில்லாடிகள். ஜியாங்சூ மாகாணத்திலேயே சிறந்த கல்விச்சாலைகள் இங்குதான் இருக்கின்றன.

இன்று ஹூவாக்ஸி கிராமத்தின் வருமானத்தில் ஐம்பது சதவிகிதம் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகளை சார்ந்திருக்கிறது. இக்கிராமத்தின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கும் உண்டு. இந்தியாவிலிருந்தும், பிரேஸிலில் இருந்தும்தான் பெரும்பாலான மூலப்பொருட்களை வாங்குகிறார்கள். இங்கு தயாராகும் பொருட்கள் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சுற்றுலா அடுத்தடுத்த நிலையில் இருக்கும் தொழில்கள்.

ஹூ ரென்பா, பழங்கால சீன பாரம்பரிய மதிப்பீடுகளின் மீது பெரும் மதிப்பு கொண்டவர். செல்வம் பெருகும் தேசங்களிலும், நகரங்களிலும் இரவுநேர கேளிக்கை வெறியாட்டம் ஆடும். ஹூவாக்ஸியில் அது அறவே கிடையாது. விடிகாலையில் எழுவார்கள். கடுமையாக பணிபுரிவார்கள். சீக்கிரமே தூங்கிவிடுவார்கள். "வசதியாக வாழ நினைப்பது அடிப்படையான ஆசைதான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை அல்ல. கூட்டுக் குடும்பம், நேர்மை, தைரியம், கடுமையான உழைப்பு – இவைதான் ஒரு சராசரி சீனனின் கலாச்சாரம். கலாச்சாரப் பின்னணியோடு கூடிய தரமான வாழ்க்கைதான் எங்களது கனவு" என்று ஒருமுறை சொன்னார் ஹூ ரென்பா.

ஹூ ரென்பா உருவாக்கியிருக்கு ஹூவாக்ஸி ஒரு சொர்க்கம்தான் என்கிறபோதிலும், உலகின் மற்றப் பகுதிகளில் வாழும் சராசரி கிராமத்தானுக்கு இருக்கும் குறைந்தபட்சம் சுதந்திரம் இங்கிருக்கிறவர்களுக்கு இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது.

இங்கே சட்டம், ஒழுங்கு மிகக்கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. மீறுபவர்களுக்கு செமத்தியான தண்டனை. ஓய்வே இன்றி உழைத்துக் கொண்டிருப்பதுதான் ஹூவாக்ஸியில் பிறந்தவனின் விதி. கருத்துச் சுதந்திரமெல்லாம் நஹி. கிராமத்தைப் பற்றி ஒரு குடிமகன் கூட வெளியாட்கள் யாரிடமும் பேசிவிட முடியாது. கிராமக்குழுத் தலைவர்தான் பேசுவதற்குரிய அதிகாரம் பெற்றவர். இண்டர்நெட் கிண்டர்நெட் என்றால் உதைதான் கிடைக்கும். மதுவிடுதியோ, டீக்கடையோ கிடையவே கிடையாது. வெளியூரில் வேலை பார்க்கப் போகிறேன் என்று கிளம்பினால் ஊரில் உள்ள வீடு, வாகனம் போன்ற சொத்துகளை கிராமக்குழு எடுத்துக் கொள்ளும். இது மாதிரி நிறைய. மொத்தத்தில் ஹூவாக்ஸி கிராமத்தை ஒரு கறாரான இராணுவ முகாமோடு ஒப்பிடலாம்.

அதே நேரத்தில் இவர்களது அட்டகாசமான நிர்வாகத்திறனையும் மறுத்துவிட முடியாது. தினமும் காலையில் வேலையை தொடங்குவதற்கு முன்பாக (தணிக்கை படுத்தப்பட்ட) செய்திகளை  ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வாசிக்க/கேட்க வேண்டும். பின்னர் கிராமத்தலைவரின் அறிவுறுத்தல்கள் ஒரு பத்து நிமிடம். வாரம் ஒருமுறை மொத்த கிராமமும் ஒரு இடத்தில் சந்திக்கும். விவாதிக்கும்.

மொத்த சம்பளமும் யாருக்கும் வழங்கப்படாது. 50 சதவிகித சம்பளத்தை மட்டுமே சம்பளத் தேதியில் வழங்குகிறார்கள். அதிலும் கூட பணமாக 20 சதவிகிதம்தான் கைக்கு வரும். மீதி அந்தந்த தொழிலாளியின் பெயரில் ஏதாவது தொழிலில் முதலீடாக சேர்த்துக்கொள்ளப்படும். மீதி 50 சதவிகித சம்பளம் கிராம வளர்ச்சி சிறப்பு நிதியில் சேர்த்துக்கொள்ளப் படும். அடிப்படை சம்பளத்தில் இருந்து மூன்று மடங்குத் தொகை வருடம் ஒருமுறை போனஸாக வழங்கப்படும். முதலீட்டில் இருந்து வரும் லாபம், போனஸ் இத்யாதிகளையும் பெற இதுமாதிரி ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு. கிராமத்தை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு இந்த எல்லாமே அம்பேல். இங்கிருக்கும் வரை மட்டுமே அனுபவிக்கலாம்.

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊர் வளர்ச்சிக்கு உறக்கமின்றி பணியாற்றிய ஹூ ரென்பா சில வருடங்களுக்கு முன்பாக தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மகன்களில் ஒருவரான ஹூ க்ஸீன் கிராமத்தலைவராக, அப்பா வழியில் இப்போது பணிபுரிகிறார் (அங்கேயும் வாரிசு அரசியல்). இப்போது ஹூவாக்ஸி 35 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பெரிய ஊராகிவிட்டது. மக்கள் தொகை 35,000.

எவ்வளவுதான் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் சிக்கலானதாகவும், கறாராகவும் இருந்தாலும், கிராமத்தவர்கள் ஒவ்வொருவரும் 82 வயதான ஹூ ரென்பா மீது அளவுக்கடந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஹூவாக்ஸி வாசிகள் யாரும் மழையிலும், பனியிலும் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக ஊரின் நடைபாதை எங்கும் மேற்கூரை அமைத்தவர் ஆயிற்றே அவர். மக்கள் மீது வைக்கப்பட்ட அந்த நிஜமான அக்கறையை அவ்வளவு எளிதாக யாராவது புறக்கணித்துவிட முடியுமா என்ன?

(நன்றி : புதிய தலைமுறை)