Tuesday, 3 March 2015

மைசூர் பாகு மற்றும் சுத்தியல்!


                         மைசூர் பாகு என்ற பெயரை உச்சரிக்கும்போதே கத்தி, சுத்தியல், கடப்பாறை இன்ன பிற கடின ரக வஸ்துகள் ஞாபகமும் கூடவே வருவது பழக்கமாகிவிட்டது. இதற்கான காரணம் நாமல்ல, பொறுப்பை இல்லத்தரசிகளும் பத்திரிகை தமாசு எழுத்தாளர்களுமே ஏற்க வேண்டும். விசேஷ நாட்களில் முறுக்கு, அதிரசம், பஜ்ஜி, சொஜ்ஜி, சுழியன் போன்ற பாரம்பரிய பலகாரங்களிலிருந்து விலகி, புதிதாக ஏதேனும் செய்துபார்க்க முனையும் பெரும்பாலான இல்லத்தரசிகளின் எளிய இலக்கு மைசூர் பாகு. இந்தப் பரிசோதனை முயற்சியில் களபலியாகும் எளிய இலக்கு கணவன்மார்கள். தமாசு எழுத்தாளர்களும் இதற்கு விதிவிலக்கு அல்லவே. ஆகையால், இல்லாளிடம் பட்டதை எங்கு கொண்டுபோய்க் கொட்டுவது என்று தேடி அலையும் அவர்களுக்கும் மைசூர் பாகு தமாசுகள் எளிய இலக்காகிவிடுகின்றன. 'மைசூர் பாகில் மைசூர் எங்கே?' என்பதில் தொடங்கி, 'வீட்டு விசேஷத்துக்கு வந்து ஒரேடியாகத் தங்கிவிட்ட மாப்பிளையைத் துரத்துவதற்கான அஸ்திரமாக மைசூர் பாகைப் பயன்படுத்துவது' வரை ஆயிரக் கணக்கான கடிகள், தமாசுகள் வந்துவிட்டன என்றாலும், விசேஷம் என்று வந்துவிட்டால், மைசூர்பாகும் வந்துவிடுகிறது; தமாசுகளும் வந்துவிடுகின்றன.

                         மைசூர் பாகின் பிறப்பிடம் கர்நாடகம். மைசூர் அரண்மனை சமையல்காரர் காகசுரா மாடப்பாவால் முதன்முதலில் தயாரிக்கப்பட்டதாகவும் அதனாலேயே மைசூர் பாகு என்ற பெயர் வந்ததாகவும் ஒரு கதை உண்டு. மைசூர் அரண்மனைக்கு வரும் ராஜ விருந்தாளிகள் அரண்மனையைக் கண்டு எத்தனை வியக்கிறார்களோ அதே அளவுக்கு அங்கு பரிமாறப்படும் மைசூர் பாகின் சுவையை ருசித்தும் வியப்பார்களாம். அத்தனை ருசியாக இருக்குமாம். மைசூர் பாகு செய்ய கடலை மாவு, ஜீனி, நெய் போதுமானவை என்பதால், சமையல்காரர்களிடம் பக்கு வம் கேட்டுக்கொண்டு செல்லும் விருந்தினர்கள் ஊருக்குப் போனவுடன் முதல் வேலையாக மைசூர் பாகு செய்வதில் இறங்கிடுவார்களாம். ஊருக்கு ஊர் மைசூர் பாகு இப்படிதான் பரவியது என்று அந்தக் கதை சொல்கிறது. தமிழகத்தில் அனேகமாக இனிப்பகங்கள் உள்ள எல்லா ஊர்களிலுமே மைசூர் பாகு கிடைக்கிறது. லேசுபாசான ஒரு மஞ்சள் நிறத்தில், சற்று நீள வாக்கில், சற்றேழத்தாழ செவ்வக வடிவில், சில இடங்களில் கல்லைப் போல, சில இடங்களில் கொஞ்சம் கொதகொதவென இப்படியான ஒரு வடிவில் அது கிடைக்கிறது. அதாவது, மைசூர் பாகு. மன்னிக்க வேண்டும். உண்மையை விளக்குவது என்றால், வேறு வழியில்லை; சில இனிப்பகக்காரர்கள் இல்லத்தரசிகளையே மிஞ்சிவிடுகிறார்கள் (தமாசு ஏழுத்தாளர்கள் கவனிக்க).

                         மைசூர் பாகு எப்படி இருக்க வேண்டும் என்றால், பார்க்க கட்டிப் பதத்தில், ருசிக்க பாகு பதத்தில் இருக்க வேண்டும். அதாவது, பற்களுக்கு வேலை இருக்கக் கூடாது. நாவில் கரைய வேண்டும். இது ஒரு ரகசியம். அரண்மனை ரகசியம். நம்மூரில்  'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்'காரர்கள் இந்த ரகசியத்தை அறிந்துவைத்திருக்கிறார்கள். நாவில் கரையும் அரண்மனை பதம் இவர்கள் கடை மைசூர் பாகில் கூடியிருக்கிறது. அது ஓர் அறுபதாண்டு கதை.

                         நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், ஏராளமான கடைகள் தொடங்கப்பட்டதால், 1950-களில் உணவகத் தொழிலில் கடும் போட்டி உருவானது. சுவை, தரம் மட்டுமன்றி தொழிலைத் தீர்மானிக்கும் காரணியாக விலையும் உருவெடுத்ததால், எல்லாப் பலகாரங்களையுமே நெய்க்குப் பதிலாக எண்ணெயில் செய்யும் கலாசாரம் இக்காலகட்டத்தில் உருவானது. எனவே, உயர் ரக  உணவகங்களில் மட்டுமே பலகாரங்கள் நெய்யில் தயாரிக்கப்பட்டன. ஆகையால், இக்காலகட்டத்தில் பெரும்பாலான உணவகங்களில், 'எங்கள் கடையில் தயாரிக்கப்படும் திண்பண்டங்கள் நெய்யினால் தயாரிக்கப்படுபவை அல்ல' என்ற அறிவிப்பு, விலைப்பட்டியல் பலகையில் எழுதப்பட்டிருக்கும். இந்தக் காலகட்டத்தில்தான், 1948-ல் கோயமுத்தூர் கடைவீதியில் ஒரு சின்ன இடத்தில் என்.கே. மஹாதேவ அய்யர் 'ஸ்ரீ கிருஷ்ண பவன்' என்ற உணவகத்தைத் தொடங்கினார். அந்த உணவகத்தின் ஒரு பகுதியாக இனிப்பகமும் நடத்தினார். எந்தக் காரியத்திலும் நேர்த்தியையும் ஒழுங்கையும் கடைப்பிடிக்கும் மஹாதேவ அய்யரின் கடையில் தயாரிக்கப்பட்ட அனைத்துப் பண்டங்களும் சுத்தமான நெய்யில் தயாரிக்கப்பட்டன. நியாயமான விலையிலும் விற்கப்பட்டன. மற்ற கடைகளிலிருந்து வித்தியாசமாக, 'இங்கு தயாரிக்கப்படும் பண்டங்கள் சுத்தமான நெய்யில் தயாரிக்கப்படுபவை' என்ற அறிவிப்பு அவருடைய கடையில் இருந்தது. கோவை மக்களுக்கு மஹாதேவ அய்யரின் வித்தியாசமான இந்த அணுகுமுறை பிடித்திருந்தது. கூடவே, அவருடைய இனிப்புகளும் பிடித்துப்போயின. குறிப்பாக, நெய்யைக் குலைத்துத் தயாரிக்கப்பட்ட மைசூர் பாகு ரொம்பவும் பிடித்துப்போனது. 1964-ல் ராஜா தெருவில் 'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' தனியே உதயமானது. இந்த 60 இண்டுகளில், 60-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு 'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' பரவிவிட்டது. நாடு முழுவதும் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் இவர்களுடைய மைசூர் பாகு பயணிக்கிறது. மைசூர் பாகு பெயரையே கோயமுத்தூர் பாகு ஏன்று மாற்றும் அளவுக்கு பிரசித்தி பெற்றுவிட்டார்கள். கடையை இப்போது மஹாதேவ அய்யரின் மகன்கள் கிருஷ்ணணும் முரளியும் நிர்வகிக்கிறார்கள். பேசினோம்.

                         ''எல்லாரும் கையாளும் அதே கடலை மாவு, ஜீனி, நெய்தான். பக்குவம் ரகசியம். தரத்தைக் கடைப்பிடிக்கிறோம், அவ்வளவே. ஆனால், இவற்றைத் தாண்டி ஒரு காரணம் இருக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம். எல்லோருக்கும் குரல் வளம் இருக்கிறது என்றாலும் எம்.எஸ். அம்மாவின் குரல் நம்மை வாரிச் சுருட்டிக்கொள்கிறதே அதற்கு என்ன காரணம்? எல்லோருக்கும் விரல்கள் இருக்கின்றன என்றாலும் ஒரு வீணைக் கலைஞனின் விரல்கள் மட்டும் நம்மை எங்கோ அழைத்துச் செல்ல முடிகிறதே அதற்கு என்ன காரணம்? இதில் வித்தை என்பது ஓரளவுக்கு மட்டுமே சாத்தியம். உண்மையான காரணத்தைக் கண்டறிய முடிவதில்லை. அதை அதீதமான அதிர்ஷ்டம் என்பதா அல்லது தெய்வத்தின் அனுக்கிரஹம் என்பதா என்று தெரியவில்லை. ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஓர் ஆசீர்வாதம் எல்லாக் கலைஞர்களையும் சூழ்ந்திருக்கிறது. அவர்களுடைய கலைப் படைப்புகளை அது தனித்துவப்படுத்துகிறது; மகத்துவம் ஆக்குகிறது. எங்கள் கடை மைசூர் பாகுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறோம்'' என்றனர் இருவரும்.

                         ஒரு தட்டில் மைசூர் பாகை வைத்துத் தந்தார்கள். தந்த வேகத்தில் சாப்பிட்டு முடித்து தட்டைத் திருப்பிக் கொடுத்தோம். நம்முடைய பையிலிருந்து ஏதோ சத்தம் கேட்பதுபோல் இருந்தது. பையைப் பார்த்தோம். பையிலிருந்த சுத்தியல் ஏமாற்றத்துடன் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது!

'சாப்பாட்டுப் புராணம்' புத்தகத்திலிருந்து...

Sunday, 1 March 2015

உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா?

      
      கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை.

* உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா.

* இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.

* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.

* இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

      டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவி ஐந்து பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஆகட்டும், குவாஹாத்தியில் சாலையில் பலர் முன்னிலையில் ஓட ஓட ஓர் இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம் ஆகட்டும். முக்கியமான ஒரு செய்தியை நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன... இனியும் இந்த நாட்டில் அரசாங்க அமைப்புகளை நம்பிப் பயன் இல்லை. நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்; குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!
  சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?
      
முக்கியமான 5 கட்டளைகள்:
 

      *மார்பகம், பிறப்புறுப்பு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம்,  உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல், குழந்தைப் பிறப்பு... இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள். அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைப் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள்.

      * வீட்டில் அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள். கணவன் - மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள். குழந்தையின் முன் உடை மாற்றாதீர்கள். ஆபாசம் வரும் எனத் தெரிந்தால், டிவியோ, பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள். 
      
 * பாலியல் கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே, ஆண் - பெண் பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில் நிலவாத சூழலை உருவாக்குங்கள். சமையலில் தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விஷயங்களிலும் கணவன் - மனைவி  இருவருக்கும் சமமான பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுங்கள்; பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எல்லா வாய்ப்புகளையும் அளியுங்கள்.

      * சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள். அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள்பற்றிப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளிடம் பிறப்புறுப்புபற்றி சகஜமாகப் பேசுங்கள். கை, கால்களைப் போல அதுவும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத சூழலை உருவாக்குங்கள். புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் - ஆனால், சொல்ல முடியாதது என்று நினைக்கும் - விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.

      * குழந்தைகள் எந்த ஒரு சங்கடமான விஷயத்தை உங்கள் முன் கொண்டுவந்தாலும் ‘‘பயப்பட வேண்டாம், இது ஒரு பிரச்னையே இல்லை, நான் இருக்கிறேன்’’ என்கிற பக்கபல வார்த்தைகளோடு அவர்களை அணுகுங்கள்.

அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும்!

‘‘அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்றாம்மா...”
‘‘ஆஹா... அவனுக்கு உன்னைப் பிடிச்சுருக்குபோல இருக்குடா. உன்கூட ஃப்ரெண்டா இருக்க ஆசைப்பட்டு இருக்கான். அதை அவனுக்குச் சொல்லத் தெரியலை. டி.வி., சினிமாவைப் பார்த்து காதல்னு சொல்லி இருக்கான். தப்பில்லே. அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து படிப்போம்னு. ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வா. விளையாடு!’’

‘‘ஏம்மா, பெண்களுக்கு மட்டும் மார்பு வளருது... ஆண்களுக்கு வளரலை?”
‘‘பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தைங்களுக்குப் பால் கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருது.’’

‘‘பலாத்காரம்னா என்னப்பா?”
‘‘கண்ணா, நம்ம உடம்புல சில இடங்களை எல்லோரும் தொடலாம், சில இடங்களைத் தொடக் கூடாது. அப்படித் தொடக் கூடாத இடங்களை நம்மளை மீறித் தொட்டுடறதைத்தான் பலாத்காரம்னு சொல்றாங்க.’’

‘‘மாதவிடாய்னா என்னம்மா? அக்காவுக்கு நாப்கின் எதுக்கு  வாங்குறீங்க?”
‘‘உடம்புக்குத் தேவை இல்லாத தண்ணீர் எப்படி உச்சாவா வருதோ, அதேபோல, பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே தேவையில்லாத ரத்தம் வெளியே வரும். அதைத்தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த ரத்தம் டிரஸ்ல பட்டுடாம இருக்கத்தான் நாப்கின்.’’

‘‘குழந்தை எப்படிப்பா பிறக்குது?”
‘‘அப்பாக்கிட்ட ஒரு கெமிக்கல் இருக்கும். அது அம்மா வயித்துக்குள்ள இருக்குற கெமிக்கல்கிட்டே போய் சேர்ந்து, பாப்பாவாப் பிறக்கும். ஏரோப்ளேன் எப்படிப் பறக்குது? அதை முழுசாச் சொன்னா உனக்கு இப்போ புரியாதுல்ல... அதுபோல, நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்புல வரும். அப்போ உனக்கு எல்லாம் புரியும்.’’

அணுகச் சங்கடமான 3 விஷயங்கள்!

குட் டச் / பேட் டச் 
      
     குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, அதன் உடலில் பிறர் எங்கெல்லாம் தொடலாம், எங்கெல்லாம் தொடக் கூடாது என்று புரியவையுங்கள். கை குலுக்கலாம் - குட் டச். தலை மேல் கை வைக்கலாம், கன்னத்தில் கையால் கிள்ளி முத்தம் கொடுக்கலாம், தோளில் கை போடலாம் - குட் டச். தடவக் கூடாது - பேட் டச். மார்பில், வயிற்றில், இடுப்பில், பிறப்புறுப்பில், தொடையில் கை வைக்கக் கூடாது; தடவக் கூடாது. வாய் மீது வாய் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது. கட்டிப்பிடிக்கச் சொல்லக் கூடாது. மடியில் அமர்த்திக்கொண்டு அணைக்கக் கூடாது - பேட் டச். அப்படி யார் செய்தாலும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து சமர்த்தாய் நழுவி, தனியாக இருக்கும்போது அம்மாவிடம்/அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் . வீட்டின் அருகிலோ, பள்ளிக்கூடத்தின் அருகிலோ தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் யாரேனும் தங்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்களா, சைகை மூலம் அழைக்கிறார்களா, சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்களா என்று குழந்தைகள் கவனிக்கக் கற்றுக்கொடுங்கள். அப்படிக் குழந்தை தெரிவிக்கும் நபர்களைக் கண்காணியுங்கள்.


காதல்

      குழந்தை ஐந்து வயதில் காதல் வயப்படலாம். இயல்புதான். பதின்பருவத்தில் காதல் வருவதும் இயல்புதான். சூசகமாகச் சொல்லுங்கள்... ‘‘வெறும் நட்புதான்பா. ஆனா, இந்த வயசுல அப்படித்தான் தோணும், தப்பில்லை. இப்படித்தான் அப்பாவுக்கும் சின்னப் புள்ளையா இருக்கும்போது நடந்துச்சு. அப்புறம் பெரியவனானதும் இதெல்லாம் சும்மான்னு புரிஞ்சுச்சு. படிப்பைக் கவனிப்பா. எதுவா இருந்தாலும் அது முக்கியம்’’ என்பதுபோலப் பேசுங்கள்.

சுய இன்பம் 

      ஆணோ, பெண்ணோ... ஒரு குழந்தை தன் வாழ்வில் இரு முறை சுயஇன்பம் பழக்கத்துக்கு ஆட்படுகிறது. முதல் முறை 3-5 வயதில். இரண்டாவது முறை 10-13 வயதில். இது எல்லாக் குழந்தைகளுக்கும் சகஜமானது. பிறப்புறுப்பைத் தேய்த்துக்கொண்டே இருப்பதால் கிடைக்கும் சுகம் காரணமாக ஏற்படும் இந்தப் பழக்கத்தை விவரம் தெரியாத வயதில், குழந்தையின் கவனத்தைத் திசை மாற்றி நம்மால் தடுக்க முடியும். ஆனால், விவரம் தெரிந்த பின் பதின்பருவத்தில் ஏற்படும் பழக்கம் அப்படி அல்ல. அனுமதியுங்கள். அதேசமயம், டி.வி., ஆபாசப் புத்தகங்கள், இணையம் போன்ற திசை திருப்பும் விஷயங்களை வீட்டில் இருந்து அகற்றுங்கள். விளையாட்டு உள்ளிட்ட பிற விஷயங்களில் ஊக்குவியுங்கள். கவனம் சிதறும் அளவுக்குப் பழக்கம் அதிகமானால், அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூசகமாகத் தெரியப்படுத்துங்கள்.

ஆப்த வாக்கியம் 


      ஒரு விஷயத்தைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள். ‘‘நீ மட்டுமே உலகம் இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ எவ்வளவோ பேருடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால், உன்னைப் போல் எல்லோரையும் நினை’’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளருங்கள். எல்லோருடைய எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தி வளருங்கள். வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நீங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள்; எதையும் மறைக்க வேண்டியது இல்லை என்று சொல்லி வளருங்கள். அதேசமயம், எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்!
டாக்டர் விகடன் 2014

(சமூக நலன் கருதி ஒரு வேண்டுகோள்: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து இதை உங்கள் நண்பர்களுக்குப் பகிர்ந்துகொள்ளுங்கள்...)


அழிவதற்கு ஒரு நகரம்!


ரு நகரத்தைப் பற்றி இப்படி ஒரு தலைப்புடன் எழுதலாமா என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. பிழைப்பதற்காகச் செத்துக்கொண்டிருப் பவர்கள் வாழும் ஒரு நகரத்தைப் பற்றி எழுதும்போது வேறு எப்படித் தலைப்பிட முடியும்? நீங்கள் அலாங்கைப் பார்க்க நேரில் வர வேண் டாம்; அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் கதைகளைக் கொஞ்ச நேரம் கேளுங்கள். இதைவிட மோசமான ஒரு தலைப்பையே தேடு வீர்கள். அலாங்கின் கதை நாம் அவசியம் பேச வேண்டியது. ஏனென்றால், அதன் அழிவு, வளர்ச்சி என்ற சொல்லிலிருந்தே தொடங்குகிறது.

காம்பே வளைகுடாவின் கரையோரத்தில் இருக்கும் அலாங் ஒரு சுமாரான ஊர். கப்பல் உடைப்பு எனும் தொழில் இங்கே அறிமுகம் ஆகாமல் இருந்திருந்தால், அங்குள்ளவர்கள் இன்றைக்கும் மீன் பிடிக்கவும், அருகில் உள்ள ஊர்களுக்கு விவசாய வேலைகளுக்கும் சென்றுகொண்டிருக்கலாம். அது ஒரு நகரமாகவே உருமாறாமல் இருந்திருக்கலாம். ஆனால், குஜராத் ஆட்சியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் வளர்ச்சி தேவைப்பட்டது. விளைவு, இன்றைக்கு ஆசியாவின் மிகப் பெரிய கப்பல் உடைக்கும் தளமாக - வளர்ந்த நாடுகளின் குப்பைத் தொட்டியாக - உருவெடுத்து நிற்கிறது அலாங்.

அலாங்கில் ஆண்டுக்கு ஐநூற்றுச் சொச்சக் கப்பல்கள் உடைக்கப்படுகின்றன. ரூ. 10 ஆயிரம் கோடிக்குத் தொழில் நடக்கிறது. சுங்கத் துறைக்கு மட்டும் சுமார் சில நூறு கோடிகள் போகின்றன. உள்ளூர்க்காரர்களைத் தவிர உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா என வெளி மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. குஜராத் அரசு சொல்லும் புள்ளிவிவரங்களை மட்டும் கொண்டு அணுகினால், அலாங்கின் கதை வளர்ச்சியின் ஒரு குறியீடுதான். ஆனால், அலாங்கில் மனித வாழ்க்கை எதிர்கொள்ளும் அவலங்களைச் சந்தித்தால் அது ஒரு பெரும் எச்சரிக்கை!

ஆசியாவின் மிகப் பெரிய நச்சுத்தொட்டி

ஊர்க்காரரான லோவால்கரே முதலில் பேசினார். “எண்பதுகளில்தான் இந்த ஊரை, கப்பல் கழிவு ஊராக மாற்றினார்கள். கப்பல் உடைப்பு என்பது வெளியே பெரிய தொழில் மாதிரி சொல்லப்பட்டாலும், அடிப்படையில் இது கழிவுகளை வைத்துக் காசுபார்க்கும் தொழில்தான். ஒரு கப்பலை உடைக்கும்போது அதில் உள்ள அலங்காரப் பொருட்கள், மரச் சாமான்கள், மின்பொருட்கள் எல்லாம் போக எஞ்சுவது உலோகங்களும் ரசாயனங்களும். இப்படி எஞ்சுவதில் பத்தில் ஒன்பது பங்குக்கு மேல் இரும்பு கிடைக்கும். இந்த இரும்புதான் இந்தத் தொழிலின் மூலாதாரம். அது போக மீதி எஞ்சுபவை எல்லாம் ஆஸ்பெஸ்டாஸ், பாலி க்ளோரினேட் பைபினைல்ஸ், பாதரசம், ஆர்சனிக் போன்ற நச்சுப் பொருட்கள். ஒரு சாதாரண ரோந்துப் படகின் எடையே பல நூறு டன்கள் இருக்கும். அப்படியென்றால், கப்பலின் எடை? சுமார் 10 ஆயிரம் டன் தொடங்கி 50 ஆயிரம் டன் வரைகூட இருக்கும். இதில் ஒரு சதவீதம் நச்சுப் பொருட்கள் இருந்தாலே எவ்வளவு எடை இருக்கும்; அது ஊரை எவ்வளவு நாசமாக்கும் என்பது புரியும். இங்கே, வருஷத்துக்கு ஐநூறு கப்பல்கள் உடைக்கப்படுகின்றன. அதுவும் எந்த வழிமுறையும் இல்லாமல். என்னவாகும்? யோசித்துப்பாருங்கள்” என்கிறார்.

அலாங் கடற்கரையில் மோதும் அலைகள் வெறும் நுரைகளைத் தள்ளுவதில்லை. கும்பிபோல பாசியோடு எண்ணெயையும், இனம்காண முடியாத கழிவுகளையும் சேர்த்துத் தள்ளுகின்றன. ஒரு லிட்டர் தண்ணீரில் கிட்டத்தட்ட 22 மில்லி கிராம் வரை எண்ணெய்க் கழிவுகள் மட்டும் கலந்திருப்பதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அலாங்கைச் சுற்றி எங்கும் நிலத்தடி நீராதாரம் நாசமாகிவிட்டது. ஏராளமானோர் தோல்நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். புற்றுநோய், சிறுநீரக நோய், தொழுநோய் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். தொழுநோயாளிகள் சர்வ சாதாரணமாக உலவுகிறார்கள். “பிச்சை எடுக்கும் இந்தத் தொழுநோயாளிகளை யார் என்று நினைக்கிறீர்கள்? இங்கு வேலை செய்த முன்னாள் தொழிலாளர்கள்தான். கதிர்வீச்சு அபாயம் மிக்க இந்த ரசாயனங்களைக் கையாள்வதற்கான எந்த வசதிகளும் தொழிலாளர்களுக்கு இங்கு செய்துகொடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம், தாங்கள் எவ்வளவு அபாயம் மிக்க பொருட்களைக் கையாள்கிறோம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. ஏனைய இடங்களைவிடவும் கூடுதலாகக் கிடைக்கும் நூறு இருநூறுக்காகத்தான் அவர்கள் இங்கு வேலைக்கு வருவது. ஆனால், இந்தத் தொகை அவர்களுடைய உழைப்புக்கு அல்ல; உயிருக்குக் கொடுக்கப்படுவது’’ என்கிறார் சூழலியலாளர் ராஜ் படேல்.

புதைக்கப்படும் மரணக் கணக்குகள்
பலேஷ்வர் சொல்லும் தகவல் இன்னும் அதிர்ச்சிகரமானது. “ஒவ்வொரு வாரமும் இங்கு பிணம் விழும். இரும்புத் தட்டுகள் சரிந்து விழுந்து நேரிடும் விபத்தோ அல்லது எதாவது ஒரு ரசாயனம் தீப்பற்றியோ. ஆனால், விஷயம் வெளியே போகாது. நாலைந்து பேருக்கு மேல் செத்தால்தான் காவல் துறை வழக்குப் பதிவுசெய்யும். 1997-ல் நடந்த விபத்து நாடு முழுவதும் செய்தியானது. ஆனால், அப்போதும்கூட செத்தவர்கள் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது 16 பேர். உண்மையில் செத்துப்போனவர்கள் 30 பேர்.

இங்கே உள்ள எல்லா முதலாளிகளும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். கோடிக் கோடியாக அள்ளுகிறார்கள். குறைந்தபட்சம் இந்தத் தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல மருத்துவமனையைக்கூட அவர்கள் அமைத்துக் கொடுக்கவில்லை. ஒரு தொழிலாளி அடிபட்டால், 50 கி.மீ. தொலைவில் இருக்கும் பவநகருக்குத்தான் கூட்டிக்கொண்டு ஓட வேண்டும். புற்றுநோய், சிறுநீரக நோய்களைப் போல அல்லாமல், தொழுநோய் பரவுவது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துவிட்ட சூழலில்கூட, இந்த முதலாளிகள் என்ன செய்தார்கள் தெரியுமா? மாதா மாதம் தொழுநோய்ப் பரிசோதனை முகாம்களை நடத்த உதவுகிறோம் என்று அறிவித்தார்கள். அதுவும்கூட எதற்காக? அப்படி நோய் அறிகுறி தெரியும் தொழிலாளர்களை முன்கூட்டியே வேலையிலிருந்து அனுப்பிவிடுவதற்காக” என்கிறார் பலேஷ்வர்.

அலாங்கின் பூர்வக்குடிகள் ஊரைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்க, வெளியிலிருந்து வந்தவர்கள் இந்த ஊரை வரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஊரின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் தொழிலாளர்கள்தான். மனைவியையும் வேலைக்குக் கூட்டிச் சென்றால், கூடுதலாக ஐம்பது நூறு கிடைக்கும் என்பதால், பெரும்பாலான வீடுகளில் இருவருமே இந்த வேலைக்குத்தான் செல்கிறார்கள். ஆகையால், ஊரையும் தொழிலையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. வீதிக்கு நான்கு நோயாளிகளைப் பார்க்க முடிகிறது. “இன்னும் இந்தத் தொழில் அடுத்தடுத்த தலைமுறைகளைப் பார்க்கவில்லை. அதற்குள்ளேயே ஊரை இவ்வளவு நாசமாக்கிவிட்டது.போகப்போக என்னாகுமோ தெரியவில்லை. எங்கள் ஊர் இப்போது ஒரு அழிவுசக்தி. தன்னையும் அழித்துக்கொண்டு எங்களையும் அழிக்கும் சக்தி” என்கிறார்கள்.

அரசாங்கம் இதையெல்லாம் தடுக்க ஒன்றுமே செய்யவில்லையா? கேட்டால், ஆவேசமாகிறார்கள் மக்கள். “இங்கே பணம்தான் ஒரே அரசாங்கம். எந்த ஆட்சி வந்தாலும் இதுதான் நிலை. அரசாங்கம் இன்னும் எங்களை வதைக்காமல் விட்டாலே போதும்” என்கிறார்கள். அலாங்கிலிருந்து கொஞ்சம் தொலைவில் இருக்கும் மிதிவிருதியில் அணு உலை அமைக்க, சில மாதங்களுக்கு முன்புதான் அனுமதி அளித்ததாம் குஜராத் அரசு. இந்த ஆலைக்காகக் கையகப்படுத்தப்படும் 777 ஏக்கர் நிலத்தில் 603 ஏக்கர் விவசாய நிலமாம். விவசாயிகளின் கடும் எதிர்ப்பை அரசாங்கம் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை என்கிறார்கள்.

அலாங் கடற்கரையின் அலைகளின் இரைச்சலுக்கும் ‘டங்… டங்’ என்று இடிபோல இறங்கும் கப்பல் உடைக்கும் சத்தத்துக்கும் இடையில் இந்தக் குரல்கள் யாவும் அமுங்கிப்போகின்றன. எங்கோ எரிக்கப்படும் கழிவுகளிலிருந்து வெளியேறும் புகை எதிர்க் காற்றில் கலந்து மூச்சை அடைக்கிறது.

அலாங் எழுப்பும் கேள்வி
இந்திய நகர்மயமாக்கலின், தொழில்மயமாக்கலின் மோசமான உதாரணம் என்று அலாங்கைச் சொல்லலாம். ஆனால், அலாங் குஜராத்தில் மட்டும் இல்லை. மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு ரூபங்களில் இருக்கிறது. அதன் உச்சபட்ச வடிவம் அலாங். தொலைநோக்கற்ற தொழில் கொள்கை, இயற்கையையும் சூழலையும் நாசமாக்கும் பேராசை நோக்கங்கள், உழைப்பைச் சுரண்டிக்கொண்டு ஈவிரக்கமற்ற வகையில் தொழிலாளர்களை வதைக்கும் கலாச்சாரம் எல்லாவற்றையும் வணிகம் - வருமானம் - வேலைவாய்ப்பு என்கிற காரணங்களால் மூடி மறைக்கிறோம். வளர்ச்சி என்று அதற்குப் பெயரிடுகிறோம். நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டு வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு இவை எதுவும் நமக்குத் தெரியாததுபோலச் சாமர்த்தியமாகக் கடந்துபோகிறோம். உண்மையில், வளர்ச்சி என்ற வார்த்தையின் பொருள்தான் என்ன? வளர்ச்சியை முன்னேற்றம் என்று நாம் சொல்ல முடியுமா? அலாங்கிலிருந்து இந்தக் கேள்வி துரத்திக்கொண்டேயிருக்கிறது.
‘தி இந்து’, ஏப்ரல், 2014

Monday, 23 February 2015

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள் இன்று 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரபூர்வமாக உள்ளன.
உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.
தாய்மொழிக்கான இடம் எது?
பல மொழிகளோடு பிறந்து வளர்ந்து, தன் தோழமை மொழிகள் எல்லாம் சிதைந்த போதிலும் இன்றளவும் தன் இளமைத் தன்மையை இழக்காமல் வாழ்ந்து வளர்ந்து நிற்கும் ஒற்றை மொழி வாழும் செம்மொழி நம் தமிழ் மொழிதான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியத்திலும் பேச்சுவழக்கிலும் இருந்த ஒரே மொழி இன்றளவும் இருக்கிறதென்றால் அது தமிழ்தான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
ஆனால், இந்த வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க தாய்மொழியைப் பேசுவதற்குத்தான் நாம் தயங்குகிறோம். தமிழில் பேசினால் தரம் குறைந்துவிடும் என்று தப்புக்கணக்கு போடுகிறோம்.
ஆங்கிலம்தான் அறிவா?
சிந்தனையின் தொடக்கப்புள்ளி தாய்மொழி என்று தெரிந்துகொண்ட நாம் நம் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைப்பதைத்தான் பெருமையாக கருதுகிறோம்.
ஆங்கிலம் மட்டும்தான் அறிவு. ஆங்கிலமொழியில் படித்தால்தான் அறிவு மேம்படும். வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல சம்பளம் வாங்க முடியும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆங்கிலம் கற்றால்தான் அகிலமே மதிக்கும் என்பது எந்த விதத்திலும் உண்மை இல்லை. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாததால்தான் இன்றைய பெற்றோர்களின் மனநிலை வேறு திசையில் பயணிக்கிறது.
'என்னாலதான் தஸ் புஸ்னு இங்கிலீஷ் பேசுற மாதிரி படிக்க முடியலை. என் குழந்தையாவது படிக்கட்டும்' என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்கிறார்கள். அதையே பெருமைக்கான அடையாளமாக கருதுகிறார்கள்.
உண்மையில், அப்படிப் படிக்கும் மாணவர்கள் இயல்பாக சிந்திக்க முடிகிறதா?
கல்வி என்பது அறிவை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டுமே அல்லால் ஒருவனின் மனப்பாட திறனை வெளிப்படுத்துவதாக அமையக்கூடாது. ஆனால், ஆங்கில மொழி நமக்குள் புரிந்துகொள்ளும் திறனை வளர்க்காமல் மனனம் செய்யும் முறையை மட்டும் கற்றுக்கொடுக்கிறது.
தாய்மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தை தெளிவாகவும் ,முழுமையாகவும் ,ஆழமாகவும் தெரிவிக்க முடியும் . ஒவ்வொருவரும் சிந்திப்பது தன் சொந்த தாய்மொழியில்தான். அதுதான் இயல்பான அடிப்படை புரிதலைக் கொடுக்கும். அதுவே அந்த குழந்தையின் படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும்.
ஆனால், அந்த சூழலை வளர்த்தெடுக்க வேண்டிய தமிக அரசு எந்த வித அக்கறையும் காட்டாததுதான் வருத்த்ததின் உச்சம். ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியை ஒரு பாடமாகக்கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலநிலை தமிழகத்தில் நிலவுவது எவ்வளவு பெரிய முரண்.
"தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை
தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை " என்பது உலகறிந்த உண்மை.
தேவை என்றால் ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் படிப்பதை ஊக்கப்படுத்துவதை விட ஆங்கில மொழி அறிவை மேம்பட செய்யலாம்.இந்த நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, எந்த ஒரு குழந்தைக்கும் தாய்மொழிக் கல்விதான் சிறந்தது என்பதை நாம் செயல்படுத்துவோம்.
இந்த தருணத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?
அனைத்து தனியார் அரசுப் பள்ளிகளுக்கும் தமிழ் வழிக் கல்வி கட்டாயம் என்பதை சட்டமாக்குதல் வேண்டும். ஆங்கிலம் மொழிப் பாடமாகவும் , தமிழ் பயிற்று மொழியாகவும் இருத்தல் வேண்டும் .
மம்மி, அங்கிள் என்று குழந்தைகளை அழைக்கச் சொல்லி பெருமைப்படுவதை கொஞ்சம் மாற்றி, அழகுத் தமிழில் அன்பை வளர்ப்போம். முடிந்தவரை தமிழை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம். தமிழில் பேச பயிற்சி தருவோம்.
தமிழில் பேசுவதே தகுதி என்பதை நம் அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவோம்.
ஏன் தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும்?
எந்த மொழிக்கும் இல்லாம மென்மையும், ஆழமும், அர்த்தமும் தமிழ் மொழிக்கு இருக்கிறது.
சித்தப்பா, மாமா என்ற இரண்டு உறவுகளும் வெவ்வேறு அர்த்தம் தருபவை. ஆனால், ஆங்கிலத்தில் இருவரையும் அங்கிள் என்றே அழைப்பது உறவின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது.
யானைக்கு தமிழில் வேழம், களிறு, பிடி என்று எத்தனையோ வார்த்தைகள் இருக்கின்றன. இங்கிலாந்திலே இல்லாத ஒரு உயிரினம் யானை. ஆனால், அந்நாட்டு மொழியில் எலிபேண்ட் (elephant) என்று அழைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?
மிகப்பெரிய ஆங்கில அறிஞர்கள் கூட தங்கள் படைப்புகளில் கண்ணுக்கு கண்: பல்லுக்குப் பல் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், திருவள்ளுவர் மட்டும்தான் உனக்கு தீமை செய்தவனுக்குக் கூட ,அவன் வெட்கப்படும் படி நல்லது செய் என்று சொல்கிறார்.
''நாம் பயிலும் கல்வி தாய்மொழியில் இருந்தால் மட்டுமே சிந்திக்கும் திறன் சிறப்பாக அமையும்'' என்றார் மகாத்மா காந்தி. இனியும் தமிழில் பேசுவது தகுதியா?தரக்குறைவா? நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே...

அடங்காத வெறி!

பெண்களை இழிவுப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. கலாச்சாரத்தில் சிக்குண்டு எல்லா வற்றுக்கும் பலியாவது பெண்கள் சமுதாயம்தான். தவறுகளை யார் செய்தாலும் எல்லாமும் அவர்கள் தலையிலேயே விழும்.
செய்தித்தாள்களில் நாள்தோறும் தவ றாமல் இடம்பெறும் ஒரே செய்தி பாலியல் குற்றங்களும், வன்முறைகளும்தான். படிக்கவே பதறுகிற செய்திகள், காதில் கேட்கவே பிடிக்காத அருவருப்பான செயல்பாடுகள். இவை எல்லாம் சமுதாயத்தை எதிர்காலத்தில் எங்கே போய் கொண்டுவிடும் எனத் தெரியவே இல்லை.
நகரம், கிராமம் என்றில்லாமல் தொட ரும் இந்தக் கொடுஞ்செயல்கள், ஒன்று மறியாத பிஞ்சுக் குழந்தைகளைப் பலி யாக்கிக் கொண்டேயிருக்கிறது. குழந்தைகளைக்கூட விட்டு வைக்காத இந்தக் குற்றங்களை செய்பவர்களின் மனம், எதனால் இப்படி மாறுகிறது? சமூ கத்தில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டவர்களாக எப்படி இவர்கள் மாறிப் போகிறார்கள்? பால் உணர்வு பற்றிய புரிதல் இல்லாமல் இவர்கள் தடம் மாறிப் போகக் காரணம் என்ன? பெருகி வரும் குற்றங்களைப் பட்டியலிடுவதும், கவலை கொள்வதும் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்படுபவர் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உதவிப் பணத்தைக் கொடுத்துவிட்டு அரசாங்கம் தன் கணக்கை முடித்துக் கொள்கிறது. எந்தெந்த சிக்கல்கள் உடனடியாகத் தீர்க் கப்பட வேண்டுமோ, அவை எல்லாம் கண்டுகொள்ளப்படாமல் போவதுதான் பொதுவிதியாக இருக்கிறது.
நான் மறக்க நினைத்தாலும் என் கண் முன்னே என் சிந்தனையை இடைஞ்சல் செய்து நிற்கின்ற இச்செய்தியை நீங் களும் அறிந்திருக்கலாம். மயிலாடு துறை அருகே ஒரு பள்ளி மாணவி சிறைக்கு அனுப்பப்பட்டதன் பின்னணி யைப் படித்தபின், என் மனம் அந்த மாணவியையும் அவ்வாறு சிக்குண்டு இருக்கும் இளம் பெண்கள் பற்றியுமே சுற்றுகிறது.
மதுக் குடிக்கு அடிமையாகிப் போன அப்பனிடம் இருந்து பருவமடைந்த தன் இரண்டு மகள்களையும் காப்பாற்ற, அந்த மாணவியின் தாய் ஒவ்வொரு நாளும் போராடியிருக்கிறார். குடித்துவிட்டு வருகிற கணவனைத்தான் அவரால் கண்டிக்க முடிந்திருக்கிறது. தெருவில் இருக்கும் அரசு மதுக் கடையை அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. அந்தத் தாயால் முடிந்ததெல்லாம் பகலும் இரவும் தன் மகள்களிடம் அவர்களின் அப்பனை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண் டதுதான்.
தொடர்ந்து வன்புணர்ச்சிக் கொடுமையை அனுபவித்து வந்த மூத்த மகள், யாரிடம் இதைப் பற்றி சொல்ல முடியும்? எந்த மன நிலையில் அவளால் பள்ளிக்குச் சென்று படித்திருக்க முடி யும்? தன் தந்தையிடம் இருந்து தங்கையையாவது காப்பாற்றிவிடலாம் என நினைத்தவள், ஒருநாள் நஞ்சு வாங்கி வந்து மதுவுடன் கலந்து வைத்து விட்டாள். அதனைக் குடித்த அப்பன் இறந்து போனான்.
அவளைத் தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்துவந்த தந்தையின் கூட்டாளிகள் இருவரும் மீதியிருந்த மதுவைக் குடித்ததினால் இறந்து போனார்கள். வழக்கம் போலவே பெயரை மாற்றி ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. ஒரு பெண் பிள்ளையாகப் பிறந்ததினா லேயே மனதையும், உடல் வதையை யும் அனுபவித்து வந்தவள் மூவரும் இறந்துபோன காரணத்துக்காக சிறையில் கிடக்கிறாள். இறந்துபோன குற்ற வாளிகள் மூவருக்கும்தான் அவளால் தண்டனை கொடுக்க முடிந்தது.
மதுவைக் கொடுத்து குடிகாரர்களாக ஆக்கி யவர்களைத் தண்டிக்க முடியவில்லை. கல்வி கற்று வாழ்க்கையை வாழவேண்டிய ஒரு குடிமகள், கொடுஞ்சிறையில் குற்றவாளியாகக் காலத்தைக் கழிக் கிறாள். இப்படி நாள்தோறும் நடக்கிற குற்றங்கள் ஒன்றா, இரண்டா? அந்தக் குடும்பத்தின் கதி என்ன? யாருக்காவது தெரியுமா? அது பற்றிய அக்கறை யாருக்குத் தேவை? மதுவின் விற்பனை எண்ணிக்கைக் கூட்டுத் தொகையைவிட பாதிப்புக்குள்ளாகும் சீரழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை, குழந்தை களின் எண்ணிக்கை, குடும்பங்களின் எண்ணிக்கைக் குறைவுதானே என நினைக்கிறார்களா?
புத்தகங்களையும், புத்தகப் பையை யும், மிதிவண்டிகளையும், மடிக்கணினி யையும் கொடுப்பவர்களுக்கு மதுவைக் கொடுப்பதால் ஏற்படும் சீரழிவுகளைப் பற்றித் தெரியாமலா இருக்கும்? என் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய வந்திருந்த ஏழைத் தாய் ஒருவரிடம் அவருக்கு உதவியாக வந்திருந்த மகளை, ‘ஏன் படிக்கிற பெண்ணை வேலைக்கு அழைத்து வந்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு இதையேதான் காரண மாகச் சொன்னார். பள்ளி விடுமுறை என்பதால் மகளை வேலைக்கு அழைத்து வந்துவிட்டதாகவும், கணவன் குடிகார னாக இருப்பதால் வீட்டில் விட்டுவிட்டு வர அச்சமாக இருப்பதாகவும் சொன்னபோது அதிர்ந்து போனேன்.
‘மதுக் கடைகளை மூடுங்கள். சமுதாயம் அழிந்து கொண்டிருக்கிறது எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால், கடைகளை மூட முடியாது. முடிந்தால் மதுவின் கேடுகளைச் சொல்லி பரப்புரை செய்யுங்கள்’ என அந்தத் துறையைச் சார்ந்த மாண்புமிகு அமைச்சர் சட்டமன்றத்தில் வாய் கூசாமல் சொல்கிறார். அதற்கும் மேசை உடைகிற மாதிரி தட்டி அரசுக்கு ஆதரவைத் தெரிவிக்கிறார்கள்.
பெண்களுக்கான பாதுகாப்பற்ற நிலையைப் பற்றி எவருக்குமே கவலை இல்லை. வீட்டில் இருந்து வெளியில் புறப்படும் பெண், தான் அணிந்து கொள் ளும் ஆடை முதற்கொண்டு, தான் பயணிக்கும் வாகனம், பணிபுரியும் பணிக் கூடம் என எல்லாவற்றையும் கருத்தில் கொண்டேதான் உயிரைக் கையில் பிடித் துக் கொண்டு வாழவேண்டியிருக்கிறது. ‘கண்காணிக்கும் கேமரா’ வைத்துவிட் டால் கடமை முடிந்துபோகும் என நினைக்கிறார்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தருவதோடு காவல் துறையின் கடமை முடிந்துபோகிறது. பாலியல் குற்றங்களும், வன்முறைகளும் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்திக்க இங்கே யாருக்கும் நேரம் இல்லை.
இணையதளங்கள், வலைதளங்கள் எல்லாம் மனிதர்களைத் தனிமைப்படுத்தி யது. உறவுகளைக் கொன்றொழித்தது. பாலுறவு பற்றிய புரிதல்களைக் கற் றுக் கொடுக்காமலேயே, ஒவ்வொரு பிள்ளையின் கையிலும் கைப்பேசி, மடிக்கணினி கொடுக்கப்பட்டுவிட்டன. அதை வைத்து பொழுது விடிந்து உறங்கும் வரைக்கும் அதனை நோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். அதில் பார்ப்பதை எல்லாம் அனுபவித்து விடத் துடிக்கிறார்கள். பெற்றோர்களுக் கும் அவர்களைக் கவனிக்க நேரம் இல்லை.
தந்தை, உடன் பிறந்தவர்கள், உறவி னர்கள், தெரிந்தவர்கள் என இவர் களால் மட்டுமா இந்தப் பாலியல் வன் முறை நிகழ்கிறது? ஆசானாக இருக்கிற ஆசிரியர்களின் மனதையும் நச்சாக்கி விட்டது. ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டிருக்கிற செய்திகளால் பெற் றோர்களும், குழந்தைகளும் கதிகலங் கிப் போய்தான் நிற்கிறார்கள்.
பணவெறிப் பிடித்த தொலைக்காட்சி களின் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பச்சிளம் குழந்தைகளுக்கு கவர்ச்சி உடை அணி வித்து, திரைப்பட நடிகர், நடிகைகள் செய்யும் அருவருப்பான அங்க அசைவுகளைக் கற்றுக் கொடுத்து ஆடவிட்டு, பாடவிட்டு மதிப்பெண்கள் அளித்து கலைஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் கொடுஞ்செயல்களை யார் தடுத்து நிறுத்துவது? தடுத்து நிறுத்த வேண்டிய நாமே பல் இளித்து கைத்தட்டிக் கொண்டிருக்கும்போது, பாவம் குழந்தைகள் என்ன செய்வார்கள்?
உறவுகளின் விழுமியங்களை, அதன் மதிப்பீடுகளை நம் குழந்தைகளுக்கு உணர்த்தத் தவறிவிட்டோம். அவர் களுக்கு எல்லாருமே அங்கிள், ஆண்ட்டி தான். சித்தப்பா, பெரியப்பாவுக்கும், மாமன், மச்சானுக்கும் அவர்களுக்கு வேறுபாடு தெரிவதே இல்லை. முறைப் பெண்ணுக்கும், அக்காள், தங்கை உறவுமுறைக்கும் வேறுபாடு தெரியாமல் எல்லாருமே ‘கசின்கள்தான்!’
பணத்தாசை, பணவெறி அனைத்து மதிப்பீடுகளையும் உடைத்தெரிந்துவிட் டது. இதை அனைவரும் உணர்ந்து ஒன்றுசேர்ந்து முடிவெடுத்தால் சமு தாயம் தப்பிப் பிழைக்கும். அதுவரை நம் உயிராகப் போற்றுகிற கலாச்சாரங்கள் காணாமல் போய்க் கொண்டேதான் இருக்கும். என்ன செய்யலாம்?

Friday, 20 February 2015

குழந்தை இப்போது வேண்டாமா?

கருமுட்டை வங்கிகளை மருத்துவ முன்னேற்றமாகப் பார்ப்பதா, மானுடச் சீரழிவாகப் பார்ப்பதா?
அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள ஆப்பிள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் சில வாரங்களுக்கு முன்னால் ஓர் அதிசய அறிவிப்பை வெளியிட்டன. அவற்றில் பணியாற்றும் இளம் பெண்கள் நிர்வாகத்தின் வசதிக்கேற்றபடி தமது பேறுகாலத்தைத் தள்ளி வைத்துக்கொள்ளும் வகையில், தமது கருமுட்டைகளை உறைகுளிர் பெட்டிகளில் சேமித்து வைத்துக்கொள்ளப் பண உதவி செய்யும் ஒரு திட்டத்தை அவை அறிவித்துள்ளன.
ஆண் பணியாளர்களுடன் பதவி மற்றும் ஊதிய உயர்வுகளுக்காகப் போட்டிபோட வேண்டியிருக்கிற பெண் பணியாளர்கள், பிரசவத்துக்காக விடுப்பு எடுத்துத் தமது சாதனை வாய்ப்புகளைத் தாமதப்படுத்தவோ இழக்கவோ விரும்புவதில்லை. கருவுற்றிருக்கும் காலங்களில் ஏற்படும் மனம் மற்றும் உடல்ரீதியான சிக்கல்களின் காரணமாகப் பதவிப் போட்டியில் பின்தங்க நேரிடுவதையும் அவர்கள் தவிர்க்க முனை கிறார்கள். கடந்த நான்காண்டுகளில் ஏராளமான இளம் பெண்கள் தமக்கு வசதியான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காகத் தமது கருமுட்டைகளை உறைகுளிர் பெட்டிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு பெண் முதன்முறை தன் கருமுட்டையை உறையவைக்க 10,000 டாலர்களும் அடுத்து ஒவ்வோராண்டும் 500 டாலர்களும் வழங்குவதாக, ஃபேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்துள்ளது. கூடுதலான மருத்துவ விடுப்புகளுடன், குழந்தையின்மைக் குறைபாடுகளுக்குச் சிகிச்சைபெற நிதியுதவியும் செய்வதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித் துள்ளது.
தமது பெண் ஊழியர்கள் எப்போது பேறுகால விடுப்பு எடுக்க வேண்டும், எப்போது பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக்கூடத் தாமே தீர்மானிக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் எண்ணுவதைப் போலத் தோன்றுகிறது. அவர்களுடைய விருப்பப்படி பிள்ளை பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு அவை 20,000 டாலர் வரை ஊக்கத்தொகையையும் அளிக்கின்றன.
வர்த்தகப் போட்டிகள் வலுவாக உள்ள இந்தக் காலத்தில், பெண் பணியாளர்களின் பிரசவ கால விடுப்புகளாலும், கர்ப்பகால உடல்நலக் குறைவு களாலும் தமது நிறுவனங்களின் உற்பத்தித்திறன் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற சுயநல நோக்கமே இத்தகைய தாராள நிதியுதவி வழங்கப்படக் காரணம் எனச் சில பெண்ணுரிமைவாத அமைப்புகள் கூறு கின்றன. கருமுட்டைகளை ஆய்வகங்களில் சோதித்து, தரமானவற்றை மட்டுமே பாதுகாப்பாகச் சேமித்து வைக்க உதவுவதன் மூலம் பிறக்கும் குழந்தைக்குப் பிறவிக் கோளாறுகளோ, மரபணுசார்ந்த பரம்பரை நோய்களோ இல்லாமல் தவிர்க்க இந்த உத்தி உதவும் என்று பல மருத்துவ ஆய்வாளர்கள் பாராட்டுகிறார்கள்.
வருங்காலவைப்பு
கருப்பைக்கு வெளியே கருத்தரிப்பு ஏற்படுத்தும் உத்திகளைப் பல ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகள் உருவாக்கிவிட்டார்கள். அவ்வாறு உருவாகும் சிசுக்கள் சோதனைக்குழாய் சிசுக்கள் என்று அழைக்கப்பட்டன.
பெண்ணின் கருவணுவகத்திலிருந்து ஒரு கரு முட்டையை எடுத்து, அவளுடைய கணவனின் விந்தணுவை நுண்அறுவை முறையில் அந்தக் கரு முட்டைக்குள் புகுத்தி அதைச் சினைப்படுத்தும் உத்தி பல ஆண்டுகளாகவே கையாளப்பட்டுவருகிறது. அந்தக் கருவை ஒரு சோதனைக் குழாயில் சில நாட்களுக்கு வளரவிட்ட பின், அதை அதே பெண்ணின் அல்லது மற்றொரு பெண்ணின் கருப்பைக்குள் பதித்துவிட்டால், பத்து மாதம் கழித்து அது முழுக் குழந்தையாக வெளிப்படும். கருப்பையில் கோளாறு அல்லது வேறு வகை உடல்நலக் குறைபாடு உள்ள பெண்கள் குழந்தைப் பேறு பெற்று மகிழ இந்த சோதனைக் குழாய் உத்தி உதவியிருக்கிறது.
கருத்தரித்த முட்டையை ஒரு பெண்ணின் கருப் பையில் உடனடியாக வைத்தாக வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அதைக் குளிர்பதனப் பெட்டியில் உறைய வைத்துவிடலாம். தம்பதிகள் விரும்புகிறபோது அதை மனைவியின் கருப்பையில் பதித்து வளர்க்கலாம்.
ஏதாவதொரு காரணத்தால், கருவைப் பத்து மாதங்களுக்குத் தன் வயிற்றில் சுமக்க முடியாத நிலை மனைவிக்கு ஏற்படுமானால், உறையவைக்கப்பட்ட கருவை வேறொரு பெண்ணின் கருப்பையில் பதித்து அவளைப் பத்து மாதங்களுக்குப் பிறகு அதை முழுக் குழந்தையாகப் பெற்றெடுக்க வைக்கலாம். அவ்வாறு மேலை நாடுகளில் பல தம்பதிகள், உடல்நலமுள்ள பெண்ணின் கருப்பையில் தமது குழந்தைகளை வளர்த்து, பெற்றுக்கொள்கிறார்கள். தாய்லாந்து போன்ற நாடுகளில் கருப்பையை வாடகைக்கு விடுவது ஒரு தொழிலாகவே நடக்கிறது.
மாதம் ஒரு கருமுட்டைதான்…
பெண்ணின் கருவணுவகத்தில் மாதம் ஒரு கருமுட்டைதான் உருவாகும். எனவே, அவளுக்கு ஹார்மோன்களை ஊட்டி ஒரே சமயத்தில் நிறைய கருமுட்டைகள் உருவாகும்படி செய்கிறார்கள். பின்னர், அவற்றை வெளியில் எடுத்து அவை குறைகளின்றியும் நல்ல வளத்துடனும் உள்ளனவா என்று பரிசோதித்த பின்னர், நான்கைந்து கருமுட்டைகளைத் தேர்வு செய்வார்கள். அவற்றை ஆணின் விந்தணுக்களுடன் சேர்த்துக் கருத்தரிக்க வைப்பார்கள். பிறகு, பெண்ணின் விருப்பத்துக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு கரு முட்டைகளை அவளுடைய கருப்பையில் வைத்து வளர விடுவார்கள்.
1986-ம் ஆண்டில் கிறிஸ்டோபர் சென் என்ற ஆஸ்திரேலிய மருத்துவர், பெண்ணின் கருத்தரிக்காத முட்டைகளைக்கூட உறையவைத்துப் பாதுகாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். தேவைப்படும்போது விந்தணுவுடன் சேர்த்துவைத்துப் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியும்.
கருவுற்ற முட்டைகளை உறைய வைப்பதைவிடக் கருவுறாத முட்டைகளை உறையவைப்பது அதிக சிக்கலானது. கருமுட்டை என்பது மிக நுண்ணிய ஒற்றைச் செல். உறையவைக்கும்போது அல்லது உறைந்த நிலையிலிருந்து மீட்டெடுக்கும்போது அது சேதப்பட பல வாய்ப்புகள் உண்டு. கருமுட்டையைச் சரியான நேரத்துக்கு உறைய வைக்க வேண்டும். அதன் உள்ளே இருக்கும் திரவம் உறைந்து கட்டி யாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி ஆனால், செல் கட்டமைப்பு குலைந்துவிடும். கருமுட்டைக் குள்ளிருக்கும் திரவத்தின் நீர்க்கூறை எடுத்துவிட்டு, வேறு சில ரசாயனங்களை அதற்குப் பதிலாகப் புகுத்தி அந்தத் திரவம் கட்டியாகாமல் தடுக்கப்படுகிறது.
கருமுட்டைகளின் எண்ணிக்கையைக் கூட்ட ஹார் மோன் சிகிச்சையளிக்கும்போது தாயின் கருப்பை உட்புறச்சுவர் தடித்துவிடும். அதன் காரணமாகப் பெண்ணுக்குத் தாய்மை ஏற்படாமல் போகலாம். ஹார்மோன் சிகிச்சையால் ஏற்பட்ட விளைவுகள் மறையும்வரை சினைப்படுத்தப்பட்ட கருமுட்டையை உறையவைத்துப் பாதுகாத்து, அதற்குப் பிறகு அந்தக் கருமுட்டையை அவளுடைய கருப்பையில் பதித்து வளரச் செய்யலாம்.
கருமுட்டை வங்கிகள்
ஒரு பெண் தனது ஆரோக்கியமான இளம் வயதில் தனது கருமுட்டைகளை உறைய வைத்துவிட்டுச் சில ஆண்டுகள் கழித்துத் தனது உடல்நிலை மற்றும் குடும்பநிலை சாதகமாக அமையும்போது குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். வயதாக வயதாகப் பெண்களின் முட்டைகளில் குரோமோசோம்கள் குறை பட்டவையாக ஆகிவிடும். இதைத் தவிர்ப்பதற்காக இளம் பெண்கள் திருமணமானவுடன் தமது கரு முட்டைகளை எடுத்து முட்டை வங்கியில் டெபாசிட் செய்துவிடலாம். கணவருக்குப் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைத்து, குடும்பத்தின் பொருளாதார வசதி மேம்பட்ட பிறகு, அந்தக் கருமுட்டைகளைப் பயன் படுத்திப் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். வேலைக்குப் போகிற பெண்களுக்கு இது உதவியாக இருக்கும்.
பெண்களுக்குப் போட்டியாக, ஆண்களின் விந்தணுக் களைச் சேமிக்கும் வங்கிகளும் சில நாடுகளில் தோன்றியுள்ளன. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், ஆணழகர்கள் போன்றோரின் விந்தணுக்களைச் சேமித்து வைத்து, தேவைப்படுவோருக்கு விற்கும் வர்த்தகம்கூடச் சில நாடுகளில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவில் ஒரு கோடீஸ்வரத் தம்பதி தமது கருவுற்ற முட்டையை உறையவைத்துப் பாது காக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும் விமான விபத்தில் மரணமடைந்துவிட்டனர். அந்த உறைவு ஆய்வகத்தில் பணியாற்றிய ஒரு பெண், அந்தக் கருவுற்ற முட்டையைத் தன் கருப்பையில் பதித்துக் கொண்டு ஒரு குழந்தையையும் பெற்றாள். அந்தக் குழந்தைக்குக் கோடீஸ்வரத் தம்பதியரின் சொத்து முழுவதும் சேர வேண்டும் என்று வழக்கு தொடுத்தாள். மரபணுச் சோதனைகள் அவளுடைய வாதத்துக்குச் சாதகமாயிருந்தன. ஆஸ்திரேலியாவின் சட்ட மேதை களால்கூட எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. கடைசியில் கோடீஸ்வரத் தம்பதியின் உறவினர்கள் அந்தப் பெண்ணுக்கு நிறைய பணம் கொடுத்து, அந்தக் குழந்தையை வாங்கிக்கொண்டார்கள்.
- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

வழிப்போக்கர்களுக்குத்தான் சாகித்ய அகாடமி விருதா?

வழிப்போக்கர்களுக்குத்தான் சாகித்ய அகாடமி விருதா?


இப்போதெல்லாம் மூன்றாம் தர எழுத்தாளர்களையும் கடந்து வழிப்போக்கர்களின் கரங்களையும் விருதுகள் சென்றடைகின்றன. பொதுவாகவே, எழுத்தாளர்களைக் காட்டிலும் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களே இந்த அமைப்புகளை அணுகுவதில் திறமை கொண்டிருக்கிறார்கள்.
சாகித்ய அகாடமி சர்ச்சைகளில் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. அந்த அமைப்பின் மீது அவர் இரண்டு புகார்களை அவர் மிகக் கடுமையாக முன்வைத்தார். ஒன்று, சாகித்ய அகாடமியின் விருதுகள் வழங்கப்படும் பின்னணியின் வெளிப்படைத் தன்மைகுறித்தது. மற்றொன்று, குறைந்தபட்சம் இரண்டாம் தரமான எழுத்தாளர்களுக்கேனும் உரிய முறையில் அவ்விருது சென்றடைய வேண்டும் என்கிற அக்கறைகுறித்தது. மோசமான படைப்புகளை விருதுகள் சென்றடைவது, இந்திய மற்றும் உலக அரங்கில் தமிழுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் எனும் கருத்தை அவர் தொடர்ந்து முன்வைத்தார்.
படைப்பில் மோசம் என்பது, அதன் தன்மை மற்றும் தீவிரம் சார்ந்ததேயன்றி ஒருபோதும் நல்லொழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதன் வெளிப்படைத்தன்மை திறந்திருக்க வேண்டும் என்கிற சுந்தர ராமசாமியின் கவலை முக்கியமானது. இன்றைய தேதி வரையில் அது திறக்கப்படவும் இல்லை. ஒரு மோசமான படைப்பைத் தேர்ந்தெடுக்கும் பின்னணி வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில், தேர்ந்தெடுப்பவர்களின் முக, அக லட்சணங்களையும் சேர்த்து நாம் கண்டுணர்ந்துவிட முடியும். முன்றாம் தரமான எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகளும் பரிசுகளும் சென்றடையும்போது, தமிழ்நாட்டில் படைப்பாளிகள் சர்ச்சைகளில் ஈடுபடுவது ஒரு மரபு போலாகிவருகிறது. அவை குண மதிப்பில் சீர்கேடு அடைவதும் அப்போதுதான். இரண்டாம் தரமானவர்கள் அங்கீகாரம் பெறும்போது பெரிய அளவில் சலசலப்புகள் ஏற்படுவதில்லை. முதல் தரமானவர்களைப் பெரும்பாலும் இவை நெருங்குவதே இல்லை. முதல் தரமானவர்கள் பேரில் இத்தகைய அமைப்புகள் கொண்டுள்ள அச்சம் நிரந்தரமானதாக உள்ளது.
மணல் குவாரி மனோபாவம்
பொதுவாகவே, நோபல் பரிசு உட்பட உலகளாவிய பல பரிசுகளும்கூட இன்று சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயைக் காட்டிலும் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், இந்தியா முழுவதிலுமுள்ள பிராந்திய மொழிகளில் இரண்டு தலை முறைகளாக வாழ்ந்துவருகிறார்கள். எனவே, பரிசுகளை, விருதுகளை, அங்கீகாரங்களைப் பெறுவது மட்டும்தான் ஒரு கவிஞருக்குரிய, எழுத்தாளருக்குரிய தகுதிச் சான்றிதழ் என்று கருதுவதற்கில்லை. சார்த்தர் நோபல் பரிசையே நிராகரித்தார்.
இவையெல்லாம் ஒருபுறம் எப்போதுமே இருப்பவை என்றாலும்கூட, தற்போது சாகித்ய அகாடமி போன்ற நிறுவனங்கள் அடைந்திருப்பது சீரழிவுகளின் உச்ச நிலை. பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றை எவ்விதத் தகுதியுமின்றி பெற விழைபவர்களின் - கல்குவாரி, மணல் குவாரி மனோபாவத்துடன் அணுகுபவர்களின் - எண்ணிக்கை சமூகம், அரசியல், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் வேகம் பிடிக்கிறது.
பக்கத்து வீட்டுக்காரர்களின் திறமை
பலவீனமான எழுத்தாளர்கள் இவ்வகைப் பரிசுகளைப் பெற்றே தீருவது என்பதில் லட்சிய உறுதி கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்காக அவர்கள் வாழ்நாள் முழுவதும் பின்தொடரவும் உழைக்கவும் மரணிக்கவும் தயார். அதனால்தான் இப்போது மூன்றாம் தர எழுத்தாளர்களையும் கடந்து இவை சில சமயங்களில் வழிப்போக்கர்களின் கரங்களையும் சென்றடைகின்றன. கலை இலக்கியத்துக்குத் தொடர்பற்றவர்களுக்கு, குறைந்தபட்ச வைராக்கியத்தையும் இழந்து விருதுகள், அங்கீகாரங்கள் போய்ச்சேர்கின்றன. பொதுவாகவே, எழுத்தாளர்களைக் காட்டிலும் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களே இந்த அமைப்புகளை அணுகுவதில் திறமை கொண்டிருக்கிறார்கள். பெறுமதிகளை அவர் கள் பெற்ற பிறகு, சில சமயம் படைப்பாளிகள், கலைஞர்கள் மீது கழிவிரக்கம் காட்டி, “உங்களை இந்த அமைப்புகளிடம் அறிமுகப்படுத்தட்டுமா?” எனக் கேட்கிறார்கள்!
சுந்தர ராமசாமி போன்றவர்கள் இவ்வகை அமைப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி மேம்படுத்திவிட முடியும் என நம்பியவர்கள். இன்றைய நிலவரமோ நம்புவதற்கும் வாய்ப்பற்ற தொலைவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்குமானால்கூட முயற்சி எடுப்பதில் அர்த்தம் இருக்கிறது. சவக்கூடத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, காவல் காத்து என்ன செய்ய? இன்று கல்வியாளர்கள் தொடங்கி, சாதியவாதிகள் வரையில் உள்ளே சென்று அமர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
கல்வியாளர்களும் சாதியவாதிகளும்
தங்களிடம் உள்ள அதிகாரத்தைச் சாதியவாதிகளுக்குக் கடத்துபவர்கள் கல்வியாளர்கள்தான் என்பதில் சந்தேகமே வேண்டாம். சொந்த சாதி நலன்களுக்காக மட்டுமே உழைப்பவர்களையும், தன் சாதியில் பிறந்தவர்கள் என்கிற காரணத்துக்காக மட்டுமே பெருமக்களைக் குறியீடாக்கிக் கொண்டாடுபவர்களையும் சாதியவாதிகள் என்றுதான் குறிப்பிட வேண்டும். நமது அமைப்புகள் உள்ளடக்கக் குறைபாடுகளால் நிரப்பப்பட்டவை. அதுபற்றி யாருக்கும் ஒரு குறையும் இல்லை. தூரத்திலேனும் தென்படும் வாய்ப்புகளை, குறைகூறி ஏன் இழக்க வேண்டும்?
நம்முடைய ஜனநாயகத்தன்மை என்பது அளவற்ற சாதுர்யமும் மோசடியும் நிறைந்தது. இவற்றில் விலகி இவற்றைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்று எவரேனும் விரும்புவார்களேயானால், கலை இலக்கியத்தில் தொடர்புடையவர்களின் திசைவழியை நோக்கி முதலில் இவ்வமைப்புகள் திரும்ப வகை செய்ய வேண்டும். தயவு தாட்சண்யம் ஏதுமின்றித் தனிநபர்களிடம் முடங்காமல், அடிப்படையான ஜனநாயகப் பண்புகளைப் பேண நிர்ப்பந்திக்க வேண்டும். சமகால கலை இலக்கியத் தொடர்பற்ற கல்வியாளர்களின் கரங்களிலோ, தனிநபர்களின் அதிகாரத்திலோ இவற்றை வீழ்த்தக் கூடாது. தனிப்பட்ட நபர்களின் கரங்களில் இவை ஒப்படைக்கப்படும்போது, இவை குடும்பத்தன்மை அடைவதையும் சாதியப் பண்பு மெருகேறுவதையும் தவிர்க்கவே இயலாது.
முற்போக்கு முகவர்கள்
சாகித்ய அகாடமி என்றில்லை, அவற்றுக்கு ஆள் தேர்வு செய்து அனுப்பும் முற்போக்கு அமைப்புகளும் அரை நூற்றாண்டு காலமாகத் தகுதியற்றவர்களின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றன. முற்போக்கிகள் மாவட்டரீதியாகப் பண்பாட்டு அமைப்புகளின் பொறுப்பாளிகள் பட்டியலை ஒப்படைக்கத் தயார் எனில், கசப்பு நிரம்பிய உண்மை விளங்கிவிடும். உண்மைகளைக் கூறத் துணியும் படைப்பாளிகளைச் சூத்திரங்களாலும் முத்திரைகளாலும் கூடித் தாக்கப் பெரும் கோஷ்டியே தயார் நிலையில் இருக்கிறது. பொதுச் சூழ்நிலை அறிந்த அல்லது பொதுச் சூழ்நிலையோடு சிறிது உறவேனும்கொண்டிருந்த தொ.மு.சி. ரகுநாதன், தி.க.சி. போன்ற முன்னோர்களின் தகுதி பெற்றவர்கள்கூட இன்று பதவிகளில் இல்லை. அதனால்தான் பேசுகிற படைப்பாளிகளிடம் இவ்வமைப்புகள் பேரச்சம் கொள்கின்றன. உலகெங்கும் இல்லாத அவல நிலை இது.
ஊழல் என்பது இன்று அரசியலோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல. பண்பாட்டு நிறுவனங்கள் வரை அது ஊடுருவி யிருக்கிறது. ஆய்வுகளை விற்கும் கல்வியாளர்கள், சம்பள அடிப்படை மதிப்புரையாளர்கள் எல்லோருமே கூட்டாளிகள். செம்மொழி பயில்வான்கள் எல்லோரையும் மிஞ்சிவிடக் கூடியவர்கள். கல்வியாளர்கள் எல்லாவற்றிலும் சம்பந்தப்படுகிறார்கள். நாம் வாழும் காலத்தின் அறச் சீர்கேடு கல்வியாளர்களோடும் தொடர்புடையது. கேரளத்தில் இளங்கலைக்குச் செல்லும் ஒரு மாணவர், நவீன இலக்கியத்தில் இரண்டு பாடங்களில் கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றாக வேண்டும். நமது செம்மொழி ஆய்வுகள் சங்க இலக்கியத்தையே தாண்டவில்லை. நவீன இலக்கியம், கலை, அறிவு ஆகியவற்றின் ஆய்வுகளுக்கு அங்கே அனுமதி இல்லை. தமிழ்நாட்டில் கண்ணுக்கெட்டிய காலம் தொடங்கி, சொற்பொழிவாளர்களைத்தான் வெகு மக்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் பிரசங்கிகள் இல்லை என்பது பொதுமக்களிடம் தெளிய இன்னும் நூறு ஆண்டுகள் ஆகும் போலிருக்கிறது.