Monday 6 April 2015

விவசாயப் போராளி நம்மாழ்வார்

சுயசார்பான வாழ்க்கை என்ற கனவை நோக்கித் தமிழக விவசாயிகளை அழைத்துச் சென்றவர்.
நம்மாழ்வாருடன் பழகிய பலரும் கூறியது, “எங்களால் நம்மாழ்வாரின் ஆழ, அகலங்களை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை” என்பதே. அது உண்மைதான். தனது ஆளுமைத் திறன்களை, அறிவாற்றலை, நுண் திறமைகளைத் தொடர்ந்து வெளிக்காட்ட அவர் மறுத்துவந்தார். தேவைப்பட்ட சூழலிலும் ஏதோ மிகச் சாதாரண ஒன்று போலவே காட்டினார். அடித்தட்டுக் கிராமத்து மனிதர்களின் வாழ்வை ஒரு படியாவது உயர்த்து வதையே முக்கியமான பணி என்றாக்கிக்கொண்ட அவருடைய வாழ்வில் அந்த அடித்தட்டு மக்களுடனான அனுபவங்களே அவரை ஆமை போலத் தன்னை உள்ளடக்கிக்கொள்ளச் செய்துவிட்டது.
தர்மபுரி அஞ்சட்டி மலைப் பகுதியில், விவசாயிகள் மத்தியில் தொண்டுநிறுவன ஊழியராகப் பணியாற்றிய காலத்தில் ஒரு அனுபவம் அவருக்கு. அந்த மலைப் பகுதியில் தடுப்பணைகள் கட்டி, நீர் தேக்கி விவசாயம் செய்ய உதவுதல் என்ற அடிப்படையில் பல தடுப்பணைகளை இவரும் நண்பர்களும் உள்ளூர் மக்களுமாகச் சேர்ந்து கட்டினார்கள். கட்டி முடித்த பின் விவசாயிகளிடம், “இனி இந்தத் தண்ணீர் கொண்டு விவசாயம் செய்யலாம் இல்லையா?” என்று கேட்டபோது அவர்களில் பலரும் இதனால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கூறினார்கள். “எங்கள் நிலம் மலையின் மேற்பகுதியில் இருக்கிறது. தடுப்பணையோ கீழே இருக்கிறது. கீழிருந்து மேலே எப்படித் தண்ணீர் எடுத்துச் செல்வது என்றார்கள். “நாம் எல்லோரும் சேர்ந்துதானே திட்டமிட்டுச் செயல்படுத்தினோம். இதை ஏன் அப்போது சொல்லவில்லை” என்று நம்மாழ்வார் கேட்டபோது, “நீங்கள் எல்லோரும் படித்தவர்கள். நீங்கள் செய்தால் சரியாகத்தானே இருக்கும் என்று இருந்தோம்” என்றார்கள். அப்போது அவர் எடுத்த முடிவுதான், தான் படித்தவன் என்று இனிமேல் கூறுவதில்லை என்பது. தன்னுடன் இணைந்து இயங்கும் அடித்தட்டு மனிதர்கள் எவ்வித மனத்தடையும் இல்லாமல், தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் இணைந்து இயங்கவும், தங்களின் கருத்துக்களைத் தயக்கமின்றி வெளிப்படுத்தவும் உதவும் வகையில், தன் ஆளுமைகளை மறைத்தும் சுருக்கியும் கொண்டார் நம்மாழ்வார்.
மக்களின் இயற்கை அறிவு
தன் ஆளுமைகளை மறைத்துக்கொண்டது போலவே அந்த மக்களுடன் சேர்ந்து இயங்குவதற்குத் தேவைப்படும் புதிய திறன்களை வளர்த்துக்கொண்டும் தன்னை மேம்படுத்திக்கொண்டார். “மக்களிடம் அறிவு ஆழமாகப் புதைந்துள்ளது. அதை வெளிக்கொணர உதவிசெய்து, அதை இன்றைய அறிவியல் கொண்டு புரிய வைத்தால் போதும், அதன் மூலம் அவர்கள் தங்களைத் தாங்களாகவே மேம்படுத்திக்கொள்வார்கள்” என்று அவர் கருதினார். அவர்களுக்குப் புதிதாக ஏதேனும் கொடுக்க வேண்டுமாயின் அது அவர்களின் அறிவு அறிவியல்பூர்வமானது என்பதை விளங்க வைப்பதுதான் என்று நம்பினார்.
மேலும், கிராமத்துப் பெண்களின் அறிவு மேன்மையை அவர்களுக்கே காட்டியதுடன் அவர்களின் அறிவு தாழ்ந்ததில்லை என்ற நம்பிக்கையை அவர்கள் அறியாமலேயே அவர்களிடம் ஊட்டினார். அது போலவே தன்னுடன் இணைந்து இயங்கியவர்களின் திறனை, அறிவை அவர்களே அறியாத வண்ணம் ஒரு படியாவது மேலே உயர்த்துவதைத் தொடர்ந்து அவர் செய்துகொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தன்னுடன் இணைந்து இயங்கியவர்கள் அனைவரும், எந்த வயதினராக இருப்பினும், தன்னை நம்மாழ்வார் என்று பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, எந்தவொரு காலத்திலும் தான் ஒரு படி உயர்ந்தவர் என்ற உணர்வு எழுவதைத் தடுத்துவந்தார்.
விவசாயிகளின், கிராம மக்களின் அழகான சுயசார்பான வாழ்வுதான் அவருடைய கனவு. மக்களின் நல்வாழ்வு என்ற அவருடைய கனவு இயற்கை விவசாயத்தை மட்டுமின்றி திறன் அழிக்காத கல்வி, ஆரோக்கியம், கலைகள், அனைவரும் இயைந்து இயங்குதல், பெண்களின் மேம்பாடு, சாதிகளுக்கு அப்பால் அனைவரும் இயங்குதல் போன்ற வற்றையும் உள்ளடக்கியதாகவே இருந்தது. தன்னுடன் இருந்தவர்களையெல்லாம் அந்தக் கனவை நோக்கியே இழுத்துக்கொண்டு சென்றார்.
உடல்நலன் என்பது நாம் உட்கொள்ளும் உணவின் வெளிப்பாடு. அது நல்ல உணவாக இருப்பின் அது ஆரோக்கியத்தைத் தானே தரும் என்பது அவரின் அழுத்தமான நம்பிக்கை. இந்த நம்பிக்கை அவருக்கு இயற்கை உணவு- இயற்கை வைத்தியம் ஆகியவற்றிலிருந்து வந்தது. தன் கருத்து சரியானதுதானா என்பதைத் தன் வாழ்வில் சோதித்தறிந்த பின்னரே வெளியே கூறினார். அவரைப் பொறுத்தவரை, கூறுவது என்பது அதைத் தன் வாழ்வில் கடைப்பிடித்துக் காட்டுவதே ஆகும். “நோயுற்றால் அதற்கான வைத்தியம் நம் சித்த வைத்தியமே. பல ஆயிரம் ஆண்டுகள் மக்களைக் காத்துவந்த சித்த வைத்தியம் எப்படி மட்ட மானதாகவோ, பிற்போக்குத்தனமானதாகவோ இருக்க முடியும்” என்றவர், முறையாக சித்த மருத்துவத்தை அறிந்துகொண்டு, மருந்துகளைச் செய்வதைக் கற்றுகொண்ட பின்னரே அப்படிக் கூறினார். பிற பாரம்பரிய மருத்துவ முறைகளையும் அவர் ஏற்றார். அவர் மேற்கொண்ட இயற்கை விவசாயத்திலும், இயற்கை வளக் காப்பு நடைப்பயணங்களிலும் அவருடன் பங்கேற்றவர்களுக்கு மட்டுமே தெரியும் மூலிகைச் செடிகளைப் பற்றி அவருக்கு இருந்த அறிவைப் பற்றி.
செயல்தான் சிறந்த குரு
சொல்லை விடச் செயலே அதிகம் கற்றுக்கொடுக்கும் என்பதில் ஆழமான நம்பிக்கை அவருக்கு. எல்லோரையும் செய்ய வைப்பார். முறைசாரா முறையில் கற்பிப்பதே அவரின் பிரதான முறை. கேள்வி களுக்கு ஏன் கதையும் சம்பவங்களுமான பதில் அளிக்கும் முறையைக் கைக்கொள்கிறீர்கள் என்ற போது, “ஆமாம் ஐயா, நம் மக்களுக்கு ஏற்ற ஒன்று இதுதான். ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கதை களாகக் கூறித்தான் ஆன்மிகத்தைப் புரியும்படி செய்தார். நான் வாழ்வியலைப் புரியும்படி செய்கிறேன்” என்றார்.
விவசாயிகளையும் பிறரையும் குழுவாக, வட்டமாக அமரச் செய்து விவாதிப்பது அவரது பாணி. “வட்டமாக அமர்வதில் எவரும் உயந்தவர் தாழ்ந்தவர் கிடையாது. நாம் இன்னமும் ஜனநாயக முறையில் இயங்குவதற்குப் பழகவேயில்லை. அதைப் பழகிக்கொள்ளத்தான் வட்டமாக அமர்கிறோம்” என்பார். கடும் விவாதங்களின்போதும் அமைதியான பார்வை யாளர் போலவே இருப்பார். குழு எடுத்த முடிவு, தனக்கு உடன்பாடில்லாத முடிவாக இருப்பினும், அதனை ஏற்பார். குழுவின் முடிவு சரியானதல்ல எனில், விளக்கிச் சொல்லியிருக்கலாமே என்றால், “குழுவின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். அதுதான் ஜனநாயகம். மேலும், தன் முடிவு சரியல்ல என்று அனுபவத்தால் அந்தக் குழு உணரும்போதுதான் அறிவு பிறக்கும். இல்லாவிடில், அங்கு நம்மாழ்வாரின் கருத்தே திணிக்கப்பட்டதாக இருக்கும்” என்றும் “தவறு செய்வது ஒன்றும் கெட்ட காரியம் அல்லவே. தவறுகளிலிருந்து பாடம் கற்கும் மனப்பக்குவம்தான் நமக்குத் தேவை” என்பார்.
விவசாயிகளின் தந்தை
அவருடைய வாழ்க்கையின் கடைசி 25 ஆண்டுகளில் ஒவ்வோராண்டும் சராசரியாக 200-250 இரவுகள் பேருந்துகளிலும் பகல் பொழுதுகள் விவசாயிகளின் நிலத்திலும் வீட்டிலுமாகவே கழிந்தன. அவருடன் இணைந்து இயங்கி, விவசாயக் குடும்பங்கள் அவரைத் தங்களின் தந்தையாகச் சுவீகரித்துக்கொண்டன என்றால் அதற்குக் காரணம், மக்களிடம் அவர் தன்னைக் காட்டிக்கொண்ட விதம்தான். ஈரோடு மாவட்டத்தில் 2002-ல் 28 நாட்கள் நடந்த பிரச்சார நடைப்பயணத்துக்கான மொத்த செலவும் ரூ. 2,800-க்குள் என்றால், விவசாயிகள் இவரையும் இவருடன் சேர்ந்து நடந்தவர்களையும் தங்களுடையவர்களாகச் சுவீகரித்துக்கொண்டதுதான் காரணம். மக்கள் தங்களுக்காக தியாகத்துடன் உழைப்பவர்களை என்றும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்கான அண்மைக் கால உதாரணம் இவர்.
மாற்று வாழ்வியல் முறைகளை மாற்று விவசாயத்தின் அங்கமாக சமூகத்தில் நடைமுறைப்படுத்துவதே சரியான போராட்ட வடிமாக இருக்கும். அதன் மூலமே பன்னாட்டு நிறுவனங்களின் தாக்குதலை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் அவர். விவசாயிகளின், கிராமத்து மக்களின் வாழ்க்கையை வணிகமய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறச் செய்தல் என்ற இலக்குக்கான பாதையாகவே இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் பார்த்தார். பெருநிறுவனமயமாதலுக்கு எதிராக எவ்வித முழக்கங்களும் இல்லாமல், ஆயுதங்கள் இல்லாமல், கோஷங்கள் இல்லாமல் புரட்சி செய்த புரட்சிக்காரர் நம்மாழ்வார் என்பதே உண்மை.

No comments:

Post a Comment