Monday 6 April 2015

புற்றீசல்கள் போல் செய்தி சேனல்கள்; போர்க்களம் போன்ற விவாதங்கள்: மூத்த பத்திரிகையாளர் விமர்சனம்

புற்றீசல்கள் போல் படையெடுக்கும் செய்தி சேனல்களில் அன்றாடம் நடத்தப்படும் விவாத நிகழ்ச்சிகளால் செய்தியின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் ரமா பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.
ரமா பாண்டே, தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். தொகுப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 250-வது அத்தியாயத்தின் வெற்றி விழாவில், தற்போதைய செய்தி தொலைக்காட்சிகளின் தரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
விழாவில் அவர் கூறியதாவது, "நாட்டில் செய்தி சேனல்கள் புற்றீசல் போல் அதிகரித்த பின்னர் செய்தியின் தரம் தாழ்ந்துவிட்டது. சில செய்தி சேனல்கள் எல்லா செய்திகளையும் பரபரப்பு செய்தியாக மாற்றிவிடுகின்றன. செய்தியை எப்படி படைக்க வேண்டும் என்பது ஒரு கலை. அந்தக் கலையை சேனல்கள் சிதைத்துவிட்டன.பரபரப்புக்காக வதந்திகள், கவர்ச்சிகரமான செய்திகள்கூட ஒளிபரப்பாகின்றன.
இது தவிர விவாதம் என்ற பெயரில் எல்லா செய்திகளையும் விவாதப் பொருளாக்குகின்றனர். ஒரு செய்தியை அலசுகிறோம் என்ற போர்வையில் அந்த செய்தியின் சாராம்சத்தையே சிதைத்துவிடுகின்றனர்.
செய்தி விவாத நிகழ்ச்சியின் நெறியாளர் அமைதியாக, ஆரவாரமற்றவராக இருக்க வேண்டும். ஆனால் நெறியாளர்கள் அச்சுறுத்தும் வகையில் கூச்சலிடுகின்றனர். இப்போதெல்லாம் விவாத நிகழ்ச்சிகளை தொலைக்காட்சித் திரையில் பார்ப்பது ஏதோ போர்க்களத்தைப் பார்ப்பது போல் இருக்கிறது. கூச்சலும், குழப்பமும் விவாதங்களை ஆக்கிரமித்துள்ளன.
இத்தகைய சூழலில், மக்கள் இந்த கூச்சலில் இருந்து விடுபட விரும்புகின்றனர். மெல்ல, மெல்ல காலையில் ஒரு கோப்பை தேநீருடன் அமைதியாக செய்தித்தாளை வாசிக்க வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment