Friday 24 April 2015

மனதில் உறுதி வேண்டும்.


03 -- SNSN (July 2014)

மனதில் உறுதி வேண்டும் / வாக்கினிலே இனிமை வேண்டும் / நினைவு நல்லது வேண்டும் / நெருங்கின பொருள் கைப்படவேண்டும்
என்று பாரதி மிகச்சரியாகப் பாடினார். முதலில் நமக்கு இருக்க வேண்டியது மனதில் உறுதி. வெற்றி பெறுபவர் விட்டுவிடுவதில்லை. விட்டுவிடுபவர் வெற்றி பெறுவதில்லை என்று ஒரு ஆங்கில முதுமொழி உள்ளது. ஆமாம். நமக்கு வெற்றி வேண்டுமானால் விட்டுவிடவே கூடாது. விட்டு விடாமல் இருக்கவேண்டுமானால் நம் மனதில் உறுதி வேண்டும்.
மன உறுதி என்றால் என்ன?
இது ஒரு கேள்வியா? இதுகூடவா தெரியாது என்று கேட்பீர்கள். நான் கேள்வி கேட்கவில்லை. மன உறுதி உங்களிடம் இருக்கிறதா என்று நீங்களே பரீட்சித்துப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.
  1. அவருடைய இமெயிலுக்கு பதிலனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்தீர்களே அனுப்பிவிட்டீர்களா?
  2. அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து தியானம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தீர்களே செய்தீர்களா?
  3. மெடாஸின் வாங்குவதற்காக மெடிகல் ஷாப்-புக்குப் போய் எல்லாம் ஒரே பாராஸெட்டிமால் குடும்பம்தான் என்று கடைக்காரர் சொன்னதை வைத்து க்ரோஸின் வாங்கிவந்தீர்களா இல்லையா? அப்போ மெட்டாஸின் வாங்கவேண்டுமென்ற உங்கள் முடிவு என்னானது?
  4. அடிக்கடி மறந்து போகும் ஒன்றைப்பற்றி, இனி மறக்கவே கூடாது என்று முடிவெடுத்தீர்களே, அதை நிறைவேற்றினீர்களா?
இப்படி நான் கேட்டுக்கொண்டே போகலாம். நீங்கள் மனசாட்சிப்படி பதில் சொன்னால், எந்தக் கேள்விக்கும் முடிவெடுத்தபடி செய்துவிட்டேன் என்று சொல்லமுடியாது. ஏன்? உங்களுக்கு மன உறுதி இல்லை. ஆனால் வாழ்க்கையில் சாதனை செய்தவர்கள், பெருவெற்றி அடைந்தவர்கள் – கவனிக்கவும், சாதாரண வெற்றியல்ல, பெருவெற்றி — யாரும் உங்களைப் போல இல்லை. அதனால்தான் அவர்கள் பெருவெற்றி அடைந்தார்கள்.
ஃபோர்டு கார்
ஹென்றி ஃபோர்டு தெரியுமில்லையா? அவர் முதன் முதலாக கார் ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்தார். அமெரிக்காவில் சைக்கிளில் போகிறவர்களெல்லாம் காரில் போக வேண்டும் என்பதுதான் அவரது பெரிய ஆசையாக இருந்தது. பேராசை அல்ல.
கவனிக்கவும். பெரிய ஆசை. மஹா ஆசை. மெகா ஆசை. இதற்கும் பேராசைக்கும் பெரிய வித்தியாசமுள்ளது.  தேவைக்கு அதிகமாக ஆசைப்படுவது பேராசை. ஆனால் வைக்கின்ற ஆசையை, லட்சியத்தை சின்னதாக வைக்காமல் பிரம்மாண்டமாக வைப்பது பெரிய ஆசை.  புரிகிறதா?
பேராசை பெருநஷ்டம் என்று சொல்வார்கள். அது சரிதான் ஆனால் பெரிய ஆசை அப்படிப்பட்டதல்ல. அது பற்றி எரியும் ஆசை. எப்படி ராக்கட்டின் பின்னால் நெருப்பு பற்றி எரிய எரிய அது மேலே மேலே போய்க்கொண்டிருக்குமோ அதே போல வாழ்க்கையில் உங்களை மேலே மேலே கொண்டுபோகக்கூடிய ஆசை.  பேராசை அழிவுப்பூர்வமானது. பெரிய ஆசை ஆக்கப்பூர்வமானது. பேராசை உங்களை அழிக்கும். பெரிய ஆசை உங்களை வாழவைக்கும். மற்றவர்களும்  வாழ வழிவகுக்கும். பேராசை ஒரு பள்ளத்தாக்கு. பெரிய ஆசை மலையின் உச்சி.
சரி, ஹென்ரி ஃபோர்டுக்கு வருவோம். ஒரு கார் செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார் அல்லவா? அதுபற்றி கருத்து கேட்க அவர் ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்தார். அவர் தேர்ந்தெடுத்த ஆள் ரொம்பப் பெரிய மனிதர்.  அவரும் ஒரு சாதனையாளர். அதுவும் உலகமே வியக்கும் சாதனை மனிதர் அவர். இனம் இனத்தோடு சேரும் என்பது இதுதான். ஒத்த அதிர்வலைகளை உருவாக்கிக்கொண்டிருப்பவர்கள் இடையில்தான் நட்பும், உறவும் ஏற்படும். காதலர்களுக்கு இடையில் இருப்பது  மாதிரி. நல்ல கணவன் மனைவிக்கு இடையில் இருப்பது மாதிரி. நல்ல நண்பர்களுக்கு மத்தியில் இருப்பது மாதிரி. சரி, யார் அந்த சாதனை மனிதர்? அவர் வேறு யாருமல்ல, இறைவனுக்கு அடுத்த படியாக இந்த உலகத்துக்கே ஒளி கொடுத்த ’விஞ்ஞான மகான்’ தாமஸ் ஆல்வா எடிசன்தான்!
எடிசனும் ஃபோர்டும் நண்பர்கள். பின்னே, அப்படித்தானே இருக்க முடியும்? காந்தத்தோடு இரும்புதானே போய் ஒட்டும்?  வெறும் மண் ஒட்டுமா?
ஆனால் அந்த விஞ்ஞான மேதை என்ன சொன்னார்? அதுதான் ஆச்சரியமான உண்மை. ஃபோர்டின் கருத்தைக் கேட்டுவிட்டு, அது சாத்தியமில்லை, வேண்டாம், நீங்கள் பேசாமல் என் கம்பனியிலேயே வேலைக்கு வந்துவிடுங்கள் என்றார் எடிசன்!
நம்ப முடியவில்லை. ஃபோர்டின் புதிய சிந்தனை அவருக்குப் புலப்படவில்லையா? அல்லது பிடிக்கவில்லையா? ஆஹா, இந்த கருத்தை இவன் அமுல் படுத்திவிட்டால் பெரிய ஆளாகிவிடுவான் என்ற பொறாமை பல்பு அவருக்குள்ளும் எரிந்ததா? தெரியவில்லை.
ஆனால் சாத்தியமில்லை என்று அவர் சொன்னது மட்டும் சத்தியம். வரலாற்றில் இது இருக்கிறது. அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல் போனதுதான் ஹென்ரி ஃபோர்டு செய்த மிகப்பெரிய சாதனை என்று நான் சொல்வேன்! ஆமாம். அவ்வளவு பெரிய மனிதர்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட  முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்தவர்; அவர் எப்படி தவறாகச் சொல்லமுடியும் என்று ஃபோர்டு நினைக்கவில்லை. அவர் ஏற்கனவே தன் மனதுக்குள் அழுத்தமான கோடு, இல்லை இல்லை, ஃபோர்டு கார் செல்லத் தேவையான ரோடு போட்டு வைத்திருந்திருக்கிறார். ஆமாம். எடிசனே சொல்லிவிட்டார், இது நிச்சயம் நடக்காது என்று ஃபோர்டு நினைக்கவே இல்லை! அங்கேதான் அவரது மகத்துவம் இருக்கிறது. ”தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சி  தன்மெய் வருத்தக் கூலி தரும்” என்ற திருக்குறள் கருத்தை ஹென்ரி ஃபோர்டு பின்பற்றி இருக்கிறார்! அங்கேதான் அவர் நிற்கிறார்!
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப்போல ஃபோர்டு காரியமாற்ற ஆரம்பித்தார். முதல் அவர் உருவாக்கிய காரில் ரிவர்ஸ் கியர் இல்லை. அதைப் பின்புதான் அவர் வடிவமைத்தார். அதனால் என்ன? முன்னேறிச் செல்லும் கார்களை மட்டும் அவர் முதலில் உருவாக்கினார் என்று வைத்துக்கொள்ளலாம்! என் நண்பர் ஒருவர் சொன்ன அனுபவ நகைச்சுவை நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. முதன் முதலாகக் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள விரும்பிய அவர் தன் நண்பரின் காரை எடுத்துக்கொண்டு போனார். ஒரு சின்ன தெருவில் கார் சென்றபோது எதிரில் ஒரு கார் வந்துவிட்டது. இவர் ரிவர்ஸில் போனால்தான் அந்தக் காருக்கு வழி கிடைக்கும் என்ற சூழ்நிலை. இவர் யோசிக்கவே இல்லை. உடனே காரைவிட்டுக் கீழிறங்கி எதிரில் இருந்த கார் ஓட்டுனரிடம் சென்று, “நான் இப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு ரிவர்ஸ் எடுக்கத் தெரியாது. எனக்காக தயவு செய்து நீங்களே ரிவர்ஸ் எடுத்துவிடுங்கள்” என்று சொல்லித் தன் காரின் சாவியை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்! அவரைப் போன்றவர்களுக்காக ஹென்ரி ஃபோர்டு முதலில் கார்களை உருவாக்கியதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்!
’ரைட்’ எப்படி ராங்காகும்?
ரைட் சகோதர்கள் விமானம் செய்ய எண்ணி, அதைப் பற்றிய தங்களுடைய கற்பனைகளை மற்றவர்களிடம் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள்.  மற்றவர்கள் என்ன, அவர்களுடைய அப்பாவே சிரித்தார். ”பணத்தை விரயம் செய்ய இவ்வளவு முட்டாள்தனமான ’ஐடியா’வா? வேண்டாம் மக்களே, காற்றில் பறக்கின்ற வேலையை தயவுசெய்து பறவைகளிடம் விட்டுவிடுங்கள்” என்று கிண்டலாகச் சொன்னார்! ஆனால் அவர்கள் விட்டார்களா?
”சாரி டாடி, எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. அதை நனவாக்காமல் நாங்கள் விடமாட்டோம்” என்று உறுதிபடக் கூறிவிட்டார்கள்.
முதல் விமானத்தைப் பறக்கவிட  வட கரோலினாவில் இருந்த கிட்டி ஹாக் (Kitty Hawk) என்ற இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அப்போதும் நம்பிக்கையில்லாமல், என்னதான் நடக்கிறது பார்க்கலாமே என்ற ஆர்வத்தில் சிலர் சென்றார்கள். ஆனால் இன்று நிலமை என்ன? பறவைகளைவிட அதிகமாக விமானங்கள் வானில் பறந்துகொண்டுள்ளன என்றே சொல்லலாம். ரைட் சகோதர்களின் “அபத்தமான கற்பனை” கொடுத்த விளைவு அது!
ரேடியம்
ரேடியமெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக கிடைக்காது என்றுதான் மேரி க்யூரியிடம் மற்ற விஞ்ஞானிகள் சொன்னார்கள். ஆனால் தூங்காமல் கொள்ளாமல் நடு இரவிலும் விழித்திருந்து விடாமல் பரிசோதனைகள் செய்துகொண்டே இருந்தார் மேரிக்யூரி என்ற சாதனைப்பெண். ரேடியம் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றபிறகு, போய் அதை வாங்கி வருவதற்குக்கூட அவரிடம் காசில்லாமல் இருந்தது என்பது ஒரு வரலாற்று சோகம்!
அற்புதப் பாலம்
ப்ரூக்லின் பாலம் என்று ஒன்று நியூயார்க் நகரத்தில் உள்ளது. உலகின் மிக அற்புதமான தொங்குபாலங்களில் ஒன்று அது. கிட்டத்தட்ட 1600 அடி நீளம் கொண்டது! வேறு வார்த்தைகளில் சொன்னால் 490 கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது! அதைக் கட்டியவர்கள் இரண்டு பேர். ஒரு அப்பா, ஒரு மகன். இருவரின் பெயரும் ரூப்லிங் (Roebling) என்று வரும். தந்தை ஜான் அகஸ்டஸ் ரூப்லிங். மகன் வாஷிங்டன் ரூப்லிங். இரண்டு பேருமே பொறியாளர்கள்தான். ஏற்கனவே சின்னச் சின்ன தொங்கு பாலங்களை இவர்கள் வடிவமைத்திருக்கின்றனர். ஆனால் கிட்டத்தட்ட 500 மைல் நீளப் பாலம் என்பது அசாத்தியமான கற்பனையாகவே இருந்தது.
திட்டமிட்டு, வடிவமைத்து வேலைகள் செய்த சில காலத்திலேயே ஒரு விபத்தில் சிக்கி தந்தை ரூப்லிங்-கின் பாதங்களின் இரு பெருவிரல்களும் நசுங்கி, பின் வெட்டியெடுக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட வேறு விளைவுகளால் அவர் இறந்தே போனார். பின்னர் எல்லாம் மகனின் தலையில் வந்துவிழுந்தது. ஆனால் மகனும் ஒரு விபத்தில் சிக்கி அப்பாவைவிட கடுமையாக பாதிக்கப்பட்டார். அவரால் அசையவோ பேசவோ முடியாது! மருத்துவமனையிலேயே பல ஆண்டுகள் கிடந்தார். அதோடு தொங்குபாலம் பற்றிய திட்டம் அந்தரத்தில் தொங்கிப் போய்விடும் என்றுதான் அனைவரும் நினைத்தனர்.
ஆனால் அதுதான் நடக்கவில்லை. உடல் கிடந்தாலும் மனம் படு சுறுசுறுப்பாகவே இருந்தது ரூப்லிங்கிற்கு. ஒரு விரலை மட்டுமே அவரால் அசைக்க முடிந்தது. அதை வைத்துக்கொண்டு அவர் தன் மனைவியில் கையில் ஒரு தட்டு தட்டினார். ப்ரூக்லின் பாலம் அங்கே உருவாகத் தொடங்கியது என்று சொல்லலாம்.
ஆமாம். ஒவ்வொரு தட்டும் பொறியாளர்களுக்கு ஒரு உத்தரவு. அதை எப்படி அவர் மனைவி புரிந்துகொண்டார், அவர் புரிந்து கொள்வதற்கு எவ்வளவு காலம் ஆகியது, அவளுக்குப் புரிய வைப்பதற்கு ரூப்லிங் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டார் என்றெல்லாம் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகள் இவ்விதம் தட்டித்தட்டி, ஒரு சிற்பி சிலையை உருவாக்குவதுபோல, ரூப்லிங் தன் மனைவியின் கையில் தட்டி உத்தரவுகள் கொடுத்துக்கொண்டிருந்தார். ப்ரூக்லின் பாலம் மெல்ல மெல்ல உருவானது!
ஆஹா, இதுவல்லவா சாதனை! நான் ப்ரூக்லின் பாலத்தைச் சொல்லவில்லை. ரூப்லிங் செய்த காரியத்தைச் சொல்கிறேன். ஒரு மனிதனின் மனதில் எவ்வளவு உறுதி இருந்தால் இப்படி விடாமல் முயன்றிருக்க முடியும்!
அற்புத மனிதன்
மாரிஸ் குட்மேனின் (Morris E Goodman) கதையும் இப்படிப்பட்டதுதான். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு குட்டி விமானம் வாங்கினார். அதை ஓட்டிக்கொண்டு போனபோது ஒரு விபத்து ஏற்பட்டது. விமானத்தில் ஏதோ கோளாறு. இவர் ஏதேதோ செய்து ஓடுதளம்வரை வந்துவிட்டார். ஆனால் விமான எலக்ட்ரிக் கம்பிகளில் மோதி தலைகுப்புற விழுந்தது. குட்மேனுக்கு எலும்புகள், தலைப்பக்கம், முதுகுத்தண்டுப்பக்கமெல்லாம் சேதமாயின. ஸி-1, ஸி-2 ரக காயங்கள் என்று அவை மருத்துவ உலகில் சொல்லப்பட்டன. அவரசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எட்டு மாதங்கள் இருக்க நேரிட்டது.
இந்த காலகட்டத்தில் அவரது உதரவிதானமும் நிரந்தரமாகச் சேதமடைந்திருந்தது. அவரால் பேசவோ, தானாக மூச்சுவிடவோ, உடலை அசைக்கவோ முடியாது. கண்கள் மட்டும் இங்குமங்கும் அசையும். அவ்வளவுதான். இனி காலம்பூராவும் அவர் இப்படியே ஒரு சப்பிப்போடப்பட்ட மாங்கொட்டை மாதிரிதான் கிடக்கவேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
ஆனால் அடுத்த கிறிஸ்துமஸுக்குள் தான் எழுந்து நடந்து மருத்துவமனையை விட்டு வெளியே செல்லவேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். கவனிக்கவும், குட்மேன் முடிவெடுத்தார். அவர் கண்கள் அசைவதைப் பார்த்த அவரது சகோதரி அவருக்கு உதவினார். கண் அசைவுக்குத் தகுந்தமாதிரி  ஏ, பி, சி, டி எழுத்துக்களைப் புரிந்துகொண்டார். உதாரணமாக ஒருமுறை அசைத்தால் ஏ, இரண்டு முறை என்றால் பி – இப்படி. இப்படியே தான் சொல்ல நினைப்பதையெல்லாம் ’பேசி’ வந்தார் குட்மேன்.
செயற்கை உபகரணம் இல்லாமல் சொந்தமாக முயன்று அவர் மூச்சு விட்டபோது மருத்துவர்களுக்கு பெரிய ஆச்சரியம். அதேபோல பல ஆச்சரியங்கள் அவர்களுக்குக் காத்திருந்தது. அவர் நினைத்தபடி எழுந்து நின்றார். யாருடைய உதவியும் இன்றி நடந்தார்! எட்டு மாதங்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து ’டிஸ்சார்ஜ்’ ஆனார்! அந்த மன உறுதிக்காகத்தான் உலகம் அவரை அற்புத மனிதர் என்று அழைக்கிறது.
மன உறுதி என்ற அந்த அற்புத ஆற்றல் நம்மிடமும்தான் உள்ளது.
பயன்படுத்தினால் என்ன நண்பர்களே?

நாகூர் ரூமி.

No comments:

Post a Comment