Saturday 27 December 2014

விண்வெளியில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு

பூமி மாதிரியில் விண்வெளியில் எங்கோ இன்னொரு ‘பூமி’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   டிசம்பர் 5 ஆம் தேதி இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு கெப்ளர்-22b (Kepler-22b) என்று பெயரிட்டுள்ளனர். அந்தக் கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது (சூரியனும் ஒரு நட்சத்திரமே).

கீழே உள்ள படத்தில் சூரியனும், பூமி உட்பட சூரியனைச் சுற்றுகின்ற கிரகங்களும் காட்டப்பட்டுள்ளன. படத்தின் மேற்பகுதியில் கெப்ளர்-22b கிரகமும் அதன் சுற்றுப்பாதையின் நடுவே உள்ள நட்சத்திரமும் காட்டப்பட்டுள்ளன.

சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றும் கெப்ளர்-22b
எவ்விதம் அமைந்துள்ளது என்பதைக் காட்டும் வரைபட்ம்

கடந்த சில ஆண்டுகளில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் விண்வெளியில் எவ்வளவோ கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் இது ஒன்று தான் பூமி மாதிரி உள்ளது. அந்த வகையில் இது ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும். பூமி மாதிரியில் என்றால் எந்த விதத்தில் பூமி மாதிரி என்ற கேள்வி எழுகிறது. உயிரினத்துக்கு உகந்த மாதிரியில் என்பது அதற்கான பதிலாகும்.

சூரிய மண்டலத்தை எடுத்துக் கொண்டால் பூமி ஒன்றில் தான் உயிரினம் உள்ளது. மனிதன் வாழ முடிகிறது. மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது ஒரு காரணத்தால் மனித வாழ்க்கைக்கு லாயக்கற்றவை. ஆகவே ஒரு கிரகம் மனித வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்க வேண்டுமானால் அதற்கென தனித் தகுதிகள் இருக்க வேண்டும் என்பது புலனாகிற்து. பூமி பெற்றுள்ள தகுதிகளைக் கவனிப்போம்.

கெப்ளர்-22b கிரகம் இவ்விதமாக
இருக்கலாம் என ஓவியர் தீட்டிய படம்
1. சூரியனிலிருந்து பூமி அமைந்துள்ள தூரம்
பூமியானது சூரியனிலிருந்து தகுந்த தொலைவில் உள்ளது. மலைப் பகுதியில் காட்டில் குளிர் காய்வதற்கு மரக்கட்டைகளைப் போட்டு எரிப்பார்கள். அதற்கு மிக அருகில் இருந்தால் வெப்பம் அதிகமாகத் தாக்கும். மிகவும் தள்ளி உட்கார்ந்தால் வெப்பம் உறைக்காது.

புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அங்கு தாங்க முடியாத வெப்பம் நிலவுகிறது. அதற்கு அடுத்தாற் போல உள்ள் வெள்ளி (சுக்கிரன்) கிரகம் வேறு காரணங்களால் அக்கினிக் குண்டமாக உள்ளது.

பூமியைத் தாண்டி அமைந்துள்ள செவ்வாய் கிரகத்தில் கடும் குளிர். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை சூரியனிலிருந்து மிகவும் தள்ளி அமைந்த கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு கிடைக்கும் சூரிய வெப்பம் மிகவும் குறைவு. ஆகவே அவை உறைந்து போன பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன. பூமி மட்டுமே சூரியனிலிருந்து சரியான தூரத்தில் உள்ளது.

2. பூமியின் பருமன்
பூமியானது தனது காற்று மண்டலத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஈர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளது. இதற்கு அதன் பருமன் காரணம்.

செவ்வாய் கிரகம் வடிவில் சிறியது என்பதால் தனது காற்று மண்டலத்தில் பெரும் பகுதியை இழந்து விட்டது. இன்னமும் இழந்து வருகிறது.

சந்திரன் வடிவில் சிறியது என்பதால் அதற்கு காற்று மண்டலமே இல்லை. புதன் கிரகத்திலும் அப்படித்தான்.

3. காற்று மணடல அடர்த்தி
பூமியின் காற்று மண்டலம் அடர்த்தியாக இருப்பதால் அது சூரியனிலிருந்தும் மற்றும் நட்சத்திரங்களிலிருந்தும் வருகின்ற ஆபத்தான கதிர்களைத் தடுத்து விடுகிறது. தவிர, விண்வெளியிலிருந்து அவ்வப்போது வந்து விழுகின்ற விண்கற்கள் காற்று மண்டலம் வழியே வரும்போது தீப்பற்றி எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஆகவே விண்கற்கள் தாக்கும் ஆபத்து அனேகமாக இல்லை.

செவ்வாயில் காற்று மண்டல அடர்த்தி குறைவு. அங்கு திறந்த வெளியில் நின்றால் தலை மீது விண்கல் வந்து விழலாம்.

வெள்ளி கிரகத்தில் காற்று மண்டல அடர்த்தி பயங்கரமான அளவில் உள்ளது. விண்கலம் போய் இறங்கினால் அது அப்பளம் போல நொறுங்கி விடும்.

4பூமியின் காந்த மண்டலம்
பூமியின் மையத்தில் உள்ள இரும்புக் குழம்பின் இயக்கத்தால் பூமிக்கு காந்த மண்டலம் உள்ளது. இக்காந்த மண்டலம் சூரியனிலிருந்து வருகின்ற சூரியக் காற்று (Solar Wind) எனப்படும் ஆபத்தான துகள்கள் பூமியின் தரையை வந்து அடையாதபடி பாதுகாக்கிறது.

5. பூமியின் சுழற்சி வேகம்
வீட்டில் தாய்மார்கள் நெருப்பில் அப்பளம் சுடும் போது அதை அடிக்கடி திருப்பிப் போடுவார்கள். அப்பளத்தின் ஒரு புறத்தை வெப்பம் அதிகம் தாக்கினால் அது கருகி விடும். தக்கபடி திருப்பிப் போட்டால் தான் அப்பளம் சரியாகப் பொரியும். கருகிப் போகாது. அந்த மாதிரியில் பூமியானது தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்க 24 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ஆகவே பகலும் இரவும் வருகின்றன. பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பகல் 12 மணி நேரமாகவும் இரவு 12 மணி நேரமாகவும் உள்ளன.

இத்துடன் ஒப்பிட்டால் சந்திரனில் பகல் என்பது இரண்டு வாரம், இரவு இரண்டு வாரம். சந்திரனில் இரண்டு வார வெயிலில் வெப்பம் தாங்க முடியாது. இரண்டு வார இரவில் குளிர் கொன்று விடும். புதன் கிரகம் இதை விட மோசம்.

செவ்வாயில் ஒரு நாள் என்பது சுமார் 24 மணி நேரம். ஆனால் செவ்வாயில் வேறு பாதக நிலைமைகள் உள்ளன.

6. பூமியில் தண்ணீர்
பூமியின் மேற்பரப்பில் முக்கால் பகுதி கடல்களாக உள்ளது. பூமியின் காற்று அடர்த்தி காரணமாகவே பூமியில் தண்ணீரானது திரவ வடிவில் உள்ளது. உயிரின வாழ்க்கைக்குத் தண்ணீர் அவசியம். தண்ணீர் காரணமாக பூமியின் வரலாற்றில் ஒரு கட்டத்தில் செடிகொடிகள் தோன்றின. தாவரங்கள் மூலம் ஆக்சிஜன் தோன்றியது.

ஆகவே பூமி மாதிரி ஒரு கிரகம் இருக்க வேண்டுமென்றால் அக்கிரகத்தில் மேற்சொன்ன நிலைமைகள் இருந்தாக வேண்டும்.

விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ள கெப்ளர்-22b கிரகத்தின் அளவு பூமியைப் போல இரண்டரை மடங்கு உள்ளது. அக்கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது. நிலம் இருக்கிறது. இதமான குளிர் (22 டிகிரி செல்சியஸ்) உள்ளது. காற்று மண்டலம் இருக்கிறது. அது தனது நட்சத்திரத்தை ஒரு முறை சுற்றி முடிக்க 290 நாட்கள் ஆகின்றன. தவிர, அது தனது நட்சத்திரத்திலிருந்து தகுந்த தூரத்தில் அமைந்துள்ளது. எனினும் அக்கிரகத்தில் நிலப் பகுதி அதிகமா அல்லது நீரினால் மூடப்பட்ட பகுதி அதிகமா என்பது தெரியவில்லை.

கெப்ளர்-22b பூமி மாதிரியில் இருந்தாலும் அங்கு உயிரினம் உள்ளதா என்பதைக் கண்டறிய முடியவில்லை. ஒரு வேளை இருக்கலாம். நிச்சயமாகக் கூற இயலாது.

 கெப்ளர் டெலஸ்கோப் - ஓவியம்
அமெரிக்காவின் நாஸா (NASA) விண்வெளி அமைப்பு 2009 ஆம் ஆண்டில் விண்வெளியில் செலுத்திய கெப்ளர் எனப்படும் பறக்கும் டெலஸ்கோப் மேற்படி கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. விண்வெளியில் இருக்கக்கூடிய கிரகங்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் அது தொடர்ந்து விண்வெளியை ஆராய்ந்து வருகிறது. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல வானவியல் விஞ்ஞானி யொஹானஸ் கெப்ளரின் (Johannes Kepler) பெயர் இந்த டெலஸ்கோப்பிற்கு வைக்கப்பட்டுள்ளது.

கெப்ளர்-22b கிரகம் பூமி மாதிரியில் உள்ளது என்பதால் மனிதன் ராக்கெட் மூலம் அந்தக் கிரகத்துக்குப் போகலாமே என்று நினைக்க முடியாது. அது சுமார் 587 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. ஒரு ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 50 ஆயிரம் கோடி கிலோ மீட்டர். ஆகவே அந்த கிரகத்துக்குச் செல்வது என்பது நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒன்று.  நமது பூமி மாதிரியில் எங்கோ ஒரு கிரகம் இருக்கிறது என்று நினைத்து சந்தோஷப்படலாம்.   எங்கோ பூமி மாதிரி ஒரு கிரகம் இருப்பதை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்களே என்று பெருமைப் படலாம். அவ்வளவு தான்.

No comments:

Post a Comment