Sunday 18 January 2015

அண்டார்டிகாவில் ஒரு பாரதி

பல கண்டங்களும் இணைந்திருந்த கோண்டுவானாலாந்து 

கன்னியாகுமரியிலிருந்து கிளம்பி நேர் தெற்கே போய்க்கொண்டே இருந்தால் அண்டார்டிகாவுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம். தூரம் சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர். எனினும் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவும் அண்டார்டிகா கண்டமும் இணைந்திருந்தன. அந்த அளவில் அண்டார்டிகாவுடன் இந்தியாவுக்கு ஒட்டு உறவு உண்டு. அக்டோபர் மாதக் கடைசியில் அண்டார்டிகாவுக்கு கிளம்பிச் சென்ற இந்திய ஆராய்ச்சிக் குழுவினர் இந்த ‘உறவு’ பற்றி ஆராய்ச்சி செய்வார்கள்.

அண்டார்டிகா கண்டம் பரப்பளவில் ஆஸ்திரேலியாவை விட இரண்டு மடங்கு பெரியது. தென் துருவம் மீது அமைந்த அது நிரந்தரமாக உறைந்த பனிக்கட்டியால் மூடப்பட்டதாகும். அண்டார்டிகாவில் உள்ள பெங்குவின் பறவைகள் தான் அதன் ‘குடிமக்கள்’.

பெங்குவின்கள்
அண்டார்டிகா கண்டத்தின் வெவ்வேறு பகுதிகள் மீது கடந்த காலத்தில் பல நாடுகள் உரிமை கொண்டாடின. ஆனால் அது யாருக்கும் சொந்தமானதல்ல என 1959 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச உடன்பாட்டின் மூலம் முடிவாகியது. ஆயினும் அண்டார்டிகாவில் எந்த நாடும் ஆராய்ச்சி நிலையத்தை அமைத்துக் கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டது. அண்டார்டிகாவில் ஆராய்ச்சி நடத்த எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.

1981 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் இந்திய மூவர்ணக் கொடி பறக்க விடப்பட்டு இந்தியாவின் முதலாவது ஆராய்ச்சி நிலையத்தை நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டது. தட்சிண கங்கோத்ரி(Dakshin Gangotri) என்று பெயரிடப்பட்ட இந்த ஆராய்ச்சி நிலையம் 1983 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது. அவ்வப்போது இந்திய நிபுணர்கள் அண்டார்டிகா சென்று அங்கு தங்கி ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டனர். உறைந்த பனிக்க்ட்டி மீது நிரந்தரக் கட்டடம் கட்ட இயலாது. அண்டார்டிகாவின் பனிக்கட்டிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே 1989 ஆம ஆண்டில் இந்த ஆராய்ச்சி நிலையம் கைவிடப்பட்டது.

இதற்குள்ளாக வேறிடத்தில் கட்டப்பட்ட புதிய ஆராய்ச்சி நிலையத்துக்கு மைத்ரி(Maitri) என்று பெயரிடப்பட்டது. இது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அண்டார்டிகாவில் ஆராய்ச்சியை மேலும் விரிவுபடுத்த விரும்பி இந்திய அரசு லார்ஸ்மான் ஹில் என்னுமிடத்தில் மேலும் ஓர் ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க முடிவு செய்தது.

இந்தியாவின் மைத்ரி ஆராய்ச்சி நிலையம்
அங்கு 2012 மார்ச் மாத வாக்கில் கட்டுமான வேலைகள் முடிவடைந்து ஆராய்ச்சிப் பணிகள் தொடங்கும். இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு பாரதி என்று பெயரிடப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவில் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் இருக்கும்.   அண்டார்டிகாவில் 26 நாடுகளின் ஆராய்ச்சி நிலையங்களில் பகலாக இருக்கின்ற காலத்தில் மொத்தம் 4000 ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுவர். இரவாக இருக்கின்ற காலத்தில் 1000 பேர் தான் இருப்பார்கள்.

சுமார் 18 கோடி ஆண்டுகளுக்கு முன்
கோண்டுவானாலாந்து
இந்தியாவின் பாரதி ஆராய்ச்சி நிலையத்தில் எல்லா வசதிகளும் இருக்கும். பகலாக உள்ள மாதங்களில் இங்கு 25 பேர் தங்கியிருப்பர். இரவாக உள்ள -அதாவது கடும் குளிர் - காலத்தில் 15 பேர் மட்டுமே இருப்பர். கடும் குளிர் காலத்தில் இங்கு குளிர் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம். பகலாக உள்ள காலத்தில் - இதை ‘கோடை’ என்று வருணிக்கின்றனர் - குளிர் பூஜ்ய டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.

 கோண்டுவானாலாந்து எனப்படும் சூப்பர் கண்டத்திலிருந்து இந்தியா, அண்டார்டிகா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவை எவ்விதமாகப் பிரிந்தன என்பது பற்றி இப்போது அண்டார்டிகா சென்றுள்ள இந்திய நிபுணர்கள் ஆராய்வர். கோண்டுவானாலாந்து பற்றிக் கடந்த காலத்தில் வெவ்வேறு கோணங்களில் ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.

உலகின் கண்டங்கள் அனைத்தும் ஒரே நிலப் பிண்டமாக ஒன்று சேருவதும் பின்னர் தனித்தனியே பிரிவதும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம், மத்தியப் பிரதேச மாநிலம் ஆகியவற்றில் வசிக்கும் ஆதிவாசிகளுக்கு கோண்டுகள் என்று பெயர். அவர்கள் வாழும் பகுதிக்கு கோண்டுவானா என்று பெயர். பல கண்டங்கள் இணைந்த சூப்பர் கண்டம் என்றோ இருந்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரிய விஞ்ஞானி எடுவர்ட் சுயெஸ் 1861 ஆம் ஆண்டில் கருத்து கூறினார். அவர் அந்த சூப்பர் கண்டத்துக்கு கோண்டுவானாலாந்து என்று பெயரிட்டார்.

இப்போதும் கண்டங்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு பூமியின் ஆழத்தில் நிகழும் சில்லுப் பெயர்ச்சி இயக்கமே காரணம்.

நன்றி என்.ராமதுரை

No comments:

Post a Comment