Friday 6 February 2015

தொல்லையான தொலைபேசி அழைப்புகள்.

இரவு நேரம் 7.45 இருக்கும். டெலிபோன் மணி கணீரிட்டது.


"டொக்டர் உங்களை அவசரமாகக் காண வேண்டும், இப்ப வந்தால் காணலாம் தானே?"

"இப்ப வந்தால் காணலாம், கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஏலாது. 8 மணிக்குப் பூட்டிப் போடுவோம்."

"உடனே வாறன்"

'எப்படி வருவார்?'

அவர் இருப்பது மூன்று மைல் தொலைவில், பத்து நிமிடத்தில் வர முடியுமா? விசாரித்தேன்.

"எப்படியும் வந்து விடுவேன். ஒரு ஐந்து பத்து நிமிடம் பிந்தினால் பூட்டிப் போடாதீர்கள். ப்ளீஸ் மிகவும் அவசரம்...." கடிவாளம் போட்டார். 

காரில் வந்து விடுவாராக்கும் என எண்ணிக் கொண்டேன்.

இத்தகைய டெலிபோன் அழைப்புக்கள் எனக்கு வழமையானதுதான்.

தினமும் 7.15 ல் இருந்து 7.30 மணிக்குள் இத்தகைய அழைப்புக்கள் ஒன்று இரண்டு நிச்சயம் வரும்.

கடைசி நிமிடத்தில் டொக்டரை இழுத்துப் பிடிக்கும் பிஸியானவர்களிடமிருந்துதான்.

"சரி வாங்கோ" என்றேன்.

நோயாளிகள் மேலும் பலர் காத்திருந்ததால் நேரம் போனது தெரிய வில்லை. மீண்டும் டெலிபோன் கிணுகிணுத்தது. நேரத்தைப் பார்த்தேன். 8.20 ஆகிவிட்டது. ரிசீவரைத் தூக்கினேன். மணி நின்றிடக் குரல் ஒலித்தது.

"டொக்டர் கொஞ்சம் பிந்தி விட்டது. வாகனம் பஞ்சர். இப்ப சரி. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கோ. உடனே வந்திடுவன்"


எஞ்சியிருந்த ஓரிரு நோயாளர்களையும் பார்த்து முடிக்க நேரம் 8.30 ஆகிவிட்டது. போன் பண்ணியவரை அப்போதும் காணவில்லை.

நேர்ஸ்களுக்கும் வீடு போகும் அவசரம்.
எனக்கும் அப்பிடித்தான்.
ஆயினும் என்ன அவசரத்திற்காக தேடி வருகிறாரோ என்று அனுதாபம் மேவியது.

இன்னமும் சிறிது நேரம் பொறுத்துப் பார்க்க தீர்மானித்தேன். மேலும் 10 நிமிடங்கள் காத்திருந்து பார்த்தேன். காணவில்லை. பொறுமை கடந்து விட்டது.

டிஸ்பென்சரியைப் பூட்டி, வெளி கேற்றையும் பூட்டிக் கொண்டு வீதியில் இறங்கினோம். நர்ஸ்களும் விடை பெற்றுக் கொண்டு பிரிந்தனர். அப்பொழுது ஓட்டமும் நடையுமாக பூனையாக குறுக்கே வந்தார்.

"பூட்டிப்போட்டியளோ? நான் தான் போன் பண்ணியது"

"நீங்கள் போன் பண்ணியபடியால்தான் எட்டு மணிக்குப் பூட்ட வேண்டிய நான் இதுவரை காத்திருந்தேன்"

"சொறி டொக்டர் வந்த மினிபஸ் பஞ்சராகி நின்றதால் வேறு பஸ் பிடித்துவர நேரமாகிவிட்டது."

ஓகோ! ஆடிப்பாடி பஸ்சில்தான் வந்திருக்கிறார்.

இவரது வீட்டிலிருந்து பஸ் ஸ்டான்டுக்கு வரவே பத்து நிமிடங்கள் வேண்டும். பிறகு காத்திருந்து பஸ் பிடித்து இங்கு வந்து சேர எப்படியும் குறைந்தது ஒரு மணித்தியால மாவது வேண்டும்.

அப்படி இருக்க பத்து நிமிடங்களில் வந்து சேர்வேன் என என்னை முழுமடையனாக்கி விட்டார்.

"பிளீஸ் டொக்டர்" காரியக்காரன் அழுவது போலக் கெஞ்சினார்.

"என்ன வருத்தமோ!" குமுறிய என் நெஞ்சு இளகியது.

"சரி வாங்கோ" எனத் திரும்பி நடந்தேன். பின் தொடர்ந்தார்.

பூட்டிய கதவுகளைத் திறந்து டிஸ்பென்சரிக்குள் நுழைந்து எனது கதிரையில் அமர்ந்து கொண்டேன். உள்ளே வந்த அவர் சர்வ சாதாரணமாக ஆறஅமரக் கதிரையில் சாய்ந்து கொண்டார்.

தான் வரப் பிந்துவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக அடுக்கத் தொடங்கினார்.
தினசரி கடுமையான ஒபிஸ் வேலை, வேலையால் வர தாமதமாவது.
அடுத்த நாளைக்கான உடைகளைத் துவைத்தல்,
சமையலுக்கு மரக்கறி வாங்கப் போக வேண்டியமை,
இப்படிப் பல சோலிகள்.

"அதுதான் லேட். உங்கட குணம் எனக்குத் தெரியும் தானே டொக்டர். நோயாளிகளின் துன்பம் தெரிந்தவர். பாவம் பார்க்கிறவர். எப்படியும் காத்திருப்பியள் என்று தெரியும்"

ஐஸ் அடிப்பதுடன்
ஏமாந்த சோணாகிரிப் பட்டத்தையும்  சூட்டுகிறார்....

லேசாக கையைத் திருப்பி கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.

"டொக்டருக்கு நேரம் போட்டுதோ? இந்த நேரத்திலை வந்தால்தான் உங்களோடை ஆறுதலாகக் கதைக்கலாம். இல்லாவிட்டால் சனம் விடுமே? மற்ற நேரம் என்றால் சனமாயிருக்கும்.
எப்படிக் கதைக்கிறது?
உங்களுக்கும் எங்களைப் போலை சிலரோடை கதைச்சால் தானே மனம் ஆறும். எந்த நேரமும் நோயாளிகளின் குறைகளைக் கேட்டால் சலிப்புத்தானே வரும்"
மகாவலி கங்கை போல கருணை ஆறு பரவி வந்தது!

 கரிசனையான மனிதன்!

இந்த அரைச் சாமத்திலை வந்து கழுத்தறுக்கிறார். விட்டால் நடுச்சாமம் வரை இருப்பார். கேள்வியைப் போட்டு கதையை மாத்தினேன்.

"இப்ப உங்களுக்கு என்ன வருத்தம்"

"எனக்கோ வருத்தமோ? ஒன்றும் கிடையாது."

"அப்ப ஏன் இந்த நேரத்திலை?"

"இரண்டு நாட்களாக வேலைக்குப் போகவில்லை. வீட்டிலை வேலை இருந்தது. நாளைக்குப் போக வேணும். அதுதான் ஒரு மெடிக்கல்
சேர் ட்டிபிக்கற் வாங்க வந்தனான்."

எதையும் வாயடிச்சுச் சாதிக்கலாம் என நினைக்கும் கபடக்காரர்.

இன்றைய உலகில் டெலிபோன் என்பது மிகவும் அத்தியாவசிய மான சாதனம் ஆகிவிட்டது.

அது நடந்து பல வருடங்களாகிவிட்டன.


ஆனால் இன்றும் தொல்லைகள் தீரவில்லை. பண்டா போக சிறிமா வந்தார். அவர் போக ஜெயவர்த்தன, சந்தரிகா, மஹிந்த அந்தப் பக்கம்.
செல்வா, அமிர்தலிங்கம் பிரபா என மற்றொரு பக்கம்.

தீராத வியாதி. 

இலங்கைத் தமிழர் பிரச்சனை போல என்றுமே தீராத தொடர் பிரச்சனைதான்.

ஒரு சின்னஞ்சிறு செய்தியைத் தெரிவிப்பதற்காக பருத்தித்துறையிலிருந்து 21 மைல் பிரயாணம் செய்து யாழ் செல்ல வேண்டிய காலம் 10-15 வருடங்களுக்கு முன் வரை இருந்ததை மறக்க முடியாது.

இன்று பருத்தித்துறையில் இருந்து கனடா, அவுஸ்திரேலியா, லண்டன் எல்லாம் கணப்பொழுதில் சாத்தியமாகிறது.

முகத்தோடு முகம் பார்த்துப் பேசுவது வசமாகிவிட்டது.

ஆனால் அதே நேரம் நவீன வசதிகளை துஸ்பிரயோகம் செய்பவர்களும் ஏராளம் என்பதையும் நாம் நினைக்கத்தான் வேண்டும்.
அன்று வந்த திடீர் தொலைபேசி அழைப்பு இது.

"டொக்டர் நான் டின்னர் ஒன்றிற்குப் போக ஆயத்தம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன்.
இவன் எனது மகன் திடீரென தனக்கு வயிற்றோட்டம் என்கிறான்.
இப்ப உங்களிட்டை வந்து காத்துக் கொண்டிருக்க எனக்கேலாது.
நேரமுமில்லை.
ஏதாவது மருந்து சொல்லுங்கோ.
மருந்தைப் போட்டிட்டுப் பேசாமல் படுத்துக் கிடக்கட்டும்.
நாளைக்கு நாளையின்றைக்கு கொண்டு வந்து காட்டிறன்"

அவ நாளைக்கும் வரமாட்டா,
நாளையின்றைக்கும் வரமாட்டா.
மகனுக்குக் குணமான பின் டாக்டரிடம் போக வேண்டிய அவ சியம் என்ன?

அம்மாவிற்கு டின்னருக்குப் பிந்தாமல் போவதற்கு நேரம் முக்கியம்.
மகனின் வருத்தம் இரண்டாம் பட்சம்.

டொக்டர் போனில் பேசும்போது,
ஏற்கனவே டாக்டருக்கு அருகில் காத்துக் கொண்டிருக்கும் அப்பாவி நோயாளியின் நேரம் மூன்றாம் பட்சம்!

டொக்டரின் நேரம் கணக்கிலேயே சேராது!

ஒரு டெலிபோன் பண்ணும் செலவில் அம்மாவின் கொன்ஸ்சல்டேசன் முடிந்து விட்டது.


மிக அவசரத்திற்கு மருத்துவர்களை டெலிபோனில் அழைப்பதில் தவறில்லை.

ஆனால் வேலையில் மருத்துவர்கள் மும்மரமாக இருக்கும்போது சிறு காரணங்களுக்காக தொல்லைப்படுத்துவது சரியாகாது.

இன்று ஒரு நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது  மூன்று அழையா விருந்தாளி அழைப்புகள்.

'மருந்தைச் சாப்பிடுவது எப்படி' என ஒன்று.

நோரடியாகவே மூன்று தடவைகள் விளங்கப்படுத்தும் போது ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளியே விட்டவர்தான் அழைந்திருந்தார்.
மற்றக் காதுக்கு பஞ்சு அடைத்துவிட்டுப் பேசுங்கள் என்று சொல்லத்தான் மனம் வந்தது.

'இப்ப வந்தால் காணலாமா' என மற்றொன்று.

ரிசப்சன் பெண்ணிடம் கேட்டும் சந்தேகம் அடங்காத பெண்ணிடமிருந்து.

'தலைவலிக்குப் பனடோல் போடலாமா' என மற்றொருவர்.

ஏற்கவே அருகிருந்த நோயாளி டெலிபோன் அழைப்புகளால் சலித்து, எழுந்து  ஓடாதது நான் செய்த புண்ணியம்.

மீண்டும் கிணுகிணுத்தது. இது பொக்கறிலிருந்த செல்போன்!

"ஹலோ.." எனது குரலில்  உயிரில்லை என்பது எனக்கே புரிந்தது.


"மச்சாங் கோமத......" புரியாத குரல்,

தெளிவாக விளங்காத பாசை.

ரோங் கோல்...

தொல்லை அழைப்புகள் தொடரும்.....

No comments:

Post a Comment