Friday 20 February 2015

கிறிஸ்தவர்களைத் துரத்தும் மத்தியக் கிழக்கு!

ஒரு காலத்தில் சகவாழ்வு வாழ்ந்த மத்தியக் கிழக்கு கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை என்ன?
எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேர் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதைப் படித்தபோது, எனக்கு ஓராண்டுக்கு முன் எகிப்துக்கு நான் மேற்கொண்ட பயணம் நினைவுக்கு வந்தது. நைல் நதிக்குக் கிழக்கே அமைந்துள்ள கெய்ரோ நகரத்தின் மிக அமைதியான பகுதியில் காப்டிக் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படும் எகிப்திய கிறிஸ்தவர்கள் வசிக்கும் இடம் இருக்கிறது.
அங்குள்ள தொங்கும் தேவாலயத்துக்கு நாங்கள் சென்றபோது, பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. ஒரு காலத்தில் கோட்டை வாயில் மேல் இருந்ததால் அப்படி அழைக்கப்பட்டதாம். இப்போது கோட்டை இல்லை. படிகள் இருக்கின்றன. மேலே ஏறிச் சென்றால் பழைய தேவாலயம் ஒன்று இருக்கிறது. பல முறை புதுப்பிக்கப்பட்டாலும் பழைமையின் தடங்களைக் கொண்டிருக்கிறது. குறைந்தது 1,400 ஆண்டுகள் இந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும். ஐகன் என அழைக்கப்படும் அழகான குறு ஓவியங்கள் சுவர்களுக்குப் புனிதத்தைத் தந்துகொண்டிருந்தன. கன்னி மேரியும் அவரது குடும்பமும் ஏரோது மன்னனிடமிருந்து தப்பித்து எகிப்துக்கு வந்தபோது இருந்த இடம் இது என்று சொல்லப்படுவதால் கிறிஸ்தவர்கள் உலகெங்கிலும் வருகிறார்கள்.
“என்ன, எகிப்தில் ஒரு லட்சம் கிறிஸ்தவர்கள் இருப்பார்களா?” எனது நண்பர் பாதிரியார் ஒருவரிடம் கேட்டார்.
“சுமார் 75 லட்சம் கிறிஸ்தவர்கள் இங்கு இருக்கிறார் கள்” என்று பதில் வந்தது. “எகிப்தின் கிறிஸ்தவம் 2,000 ஆண்டுகள் பழமையானது. ஏசுவின் 70 சீடர்களில் ஒருவரான மார்க் கொண்டுவந்தது. இன்று மக்கள் தொகையில் 10 %-க்கும் மேல் கிறிஸ்தவர்கள். இன்னும் அதிகம் இருந்தார்கள். நிலைமை சரியாக இல்லாததால் பலர் வெளியேறிவிட்டார்கள்.”
புனித காதரைன் மடாலயம்
கெய்ரோவிலிருந்து சூயஸ் கால்வாயைக் கடந்தால், சைனாய் பாலைவனம் பரந்து விரிகிறது. இந்தப் பாலைவனத்தின் நடுவே புனித காதரைனின் மடாலயம் இருக்கிறது. உலகின் மிகப் பழைய மடாலயங்களில் இது ஒன்று. ரோமப் பேரரசின் சக்ரவர்த்தி ஜஸ்டினியனால் கட்டப்பட்டது. நாங்கள் சென்ற வழியில் எந்த வாகனமும் செல்லவில்லை. 16 வயதுகூட நிரம்பாத பாலகன் ஒருவன் எகிப்திய ராணுவ உடை அணிந்து கையில் இயந்திரத் துப்பாக்கியுடன் எங்கள் வாகனத்தில் முன்னால் அமர்ந்திருந்தான். அவனால் பாதுகாப்புத் தர முடியும் என்று நாங்களும் நம்பவில்லை; அவனும் நம்பியதாகத் தெரியவில்லை. வாகன ஓட்டி வானத்தைக் காட்டிக் கடவுளை நம்புங்கள் என்றார். எனக்குக்கூடத் தற்காலிகமாக நம்பலாமா என்று தோன்றியது.
மடாலயத்தை அடைவதற்குள் நடு இரவாகிவிட்டது. நபிகள் நாயகம் இந்த மடாலயத்துக்கு வருகை தந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். மடாலயத்துக்கு எந்த ஊறும் செய்யக் கூடாது என்று அவர் கைப்பதிவு பெற்ற ஆவணம் ஒன்று அதன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து கிறிஸ்தவர்கள் அங்கு வருகிறார்கள். அதன் அருகில்தான் புகழ் பெற்ற சைனாய் மலை இருக்கிறது. மோசஸுக்குக் கடவுள் பத்துக் கட்டளைகள் அளித்த இடம் அது என்று நம்பப்படுகிறது. மடாலயத்துக்குள் கடவுள் மோசஸுக்குச் செடி வடிவில் தோற்றமளித்ததாகச் சொல்லப்படும் ‘எரியும் செடி’ இருக்கிறது. இப்போது எரியவில்லை. பசுமையாக இருக்கிறது. வெளியில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் பயங்கரவாதத்தின் காரணத்தால் கூட்டமே இல்லை. மேற்கத்திய உலகின் மிகப் பழைய ஓவியங்களில் சில இந்த மடாலயத்தில் இருக்கின்றன. ஆனால், என்னால் பார்க்க முடியவில்லை. சாவி வைத்துக்கொண்டிருப்பவர் அன்று வரவில்லை என்று சொன்னார்கள்.
பாலைவனத்தின் நடுவே அதிகப் பாதுகாப்பின்றி பயங்கரவாதத்தின் நிழலில் இருக்கும் மடாலயம் போன்றதே எகிப்தியக் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை.
நாங்களும் நிழலில் இருந்தோம் என்று எங்களுக்கு முழுவதும் உறைத்தது, திரும்பி வந்து 15 நாட்களுக்குப் பிறகு, சைனாய் பாலைவனத்தில் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியைக் கேட்ட பிறகுதான்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்கள்
மத்தியக் கிழக்கு நாடுகள் அனைத்திலும் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. எல்லா நாடுகளிலும் அவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துகொண்டேவருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்புகூட நிலைமை மோசமாக இல்லை. உதாரணமாக, வில்லியம் டால்ரிம்பில் எழுதிய ‘புனித மலையிலிருந்து’ (ஃபிரம் தி ஹோலி மவுன்டன்) என்ற புத்தகத்தில் சிரியாவில் கிறிஸ்தவர்கள் கண்ணியமாக நடத்தப்படுகிறார்கள், மிகுந்த பாதுகாப்போடு இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். ஒபாமாகூட, சிரியாவை ஆஸாத் ஆண்டுகொண்டிருந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் பத்திரமாக இருந்தார்கள் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இராக்கிலும் கிறிஸ்தவர்கள் பயமின்றி இருந்தார்கள். சதாம் உசேனின் முக்கியமான அமைச்சர்களில் ஒருவராக இருந்த (பின்னர் தூக்கு தண்டனை பெற்று இன்றுவரை சிறையில் இருப்பவர்) தாரிக் அஸிஸ் ஒரு கிறிஸ்தவர். இன்று இராக்கில் மூன்று லட்சம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் 14 லட்சம் இருந்தார்கள்.
யார் பணம் கொடுக்கிறார்கள்?
21 பேர்கள் கொல்லப்பட்டதற்காக ஐ.எஸ். இருப்பதாகக் கருதப்படும் இடங்களில் குண்டு வீச்சு நடைபெற்றிருக்கிறது. நாங்கள் கடுமையாகப் பழிவாங்குவோம் என்று பயங்கரவாதிகள் பயமுறுத்தியிருக்கிறார்கள். எனவே, கொலைகள் தொடர்வது நிச்சயம். இராக், சிரியா, எகிப்து (சைனாய் பாலைவனம்), லிபியா போன்ற நாடுகளில் ஐ.எஸ். இயங்குகிறது. இந்த இயக்கத்தின் சார்பில் சண்டையிட்டு, முடிந்தால் மரணமடைவதற்காக உலகின் முக்கியமான நாடுகளிலிருந்து பலர் முன்வந்திருக்கிறார்கள். இது அழிக்க முடியாத சக்தியாக மாறிவிடுமோ என்ற அச்சம் பல நாடுகளுக்கு இருந்தாலும், மேற்கத்திய நாடுகள் அழிக்க வேண்டும் என்று நினைத்தால், அதிக முயற்சி எடுக்காமல் அழித்துவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகள் தலையிடுவதோ அல்லது குண்டுவீசுவதோ எந்தத் தீர்வையும் தராது என்று கருதுபவர்கள் பலர் இருக்கிறார்கள். உதாரணமாக, இராக்கிய கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர் சொல்கிறார்: “இங்குள்ள கிறிஸ்தவர்கள் மேற்கத்திய நாடுகளை, பயங்கரவாதிகளுக்குப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை முதலில் கண்டுபிடிக்கச் சொல்ல வேண்டும். எண்ணெய் விற்பதன் மூலம் பணம் கிடைக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களால் எண்ணெயை எவ்வாறு விற்பனை செய்ய முடிகிறது? சாட்டிலைட்டுகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? இது கண்டுபிடிக்கப்படாதது, பெரிய தலைகள் ஐ.எஸ்ஸிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றன என்பதைத் தெளிவாக்குகிறது.”
ஒற்றுமையின் குரல்
கிறிஸ்தவர்கள் பாதுகாப்பின்றி இருந்தாலும், அவர்கள் சாதாரண மக்களைக் குற்றம் சொல்லவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிரியாவின் அல் நபெக் என்ற நகரம். மொத்தம் 50,000 பேரைக் கொண்டது. இந்த நகரத்தில் 500 கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். யாரும் நகரத்தை விட்டுப் போக விரும்பவில்லை. “பயங்கரவாதிகள் முஸ்லிம்களையும்தான் கொல்கிறார்கள். நாங்கள் இங்கு ஒற்றுமையாக இருக்கிறோம். வேலை இல்லை. வீடுகளை இழந்துவிட்டோம். இருந்தாலும், இங்குதான் இருக்க விரும்புகிறோம்” என்று சொல்கிறார்கள்.
இத்தகைய குரல்கள் எழுந்தாலும், ஐ.எஸ்ஸின் பயங்கரவாதம் தொடரும் வரை மத்தியக் கிழக்கு கிறிஸ்தவர்கள் அழித்தொழிக்கப்படும் அபாயம் அழியாமல் இருக்கும்.
- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்.

 

No comments:

Post a Comment