Saturday 14 February 2015

மனம் எனும் எலிப்பொறி





ஏன் மனம் சிலவேளை சோர்வு கொள்கிறது என நண்பர் சர்வோத்தமனுடன் பேசிக் கொண்டிருந்தேன். சிலர் மனச்சோர்வு பருவத்தை பொறுத்து வரும் என கூற கேட்டிருக்கிறேன். அதாவது சிலருக்கு குளிர்காலத்தில் மனதை ஒரு பாறாங்கல் அழுத்துவது போல் தோன்றும். என்ன செய்தாலும் மகிழ்ச்சி தொடர்ச்சியாக கிடைக்காது. அந்த முயற்சியிலேயே மேலும் சோர்ந்து விடுவார்கள். சீதோஷ்ண நிலை மாறினதும் சரியாகி விடும்.

மனச்சோர்வு உடல்நிலையுடனும் சம்மந்தப்பட்டதாக இருக்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்தால் மனம் சரியாகி விடும்.
ஆனால் எப்போது நாம் ஏன் மகிழ்ச்சியாக அல்லது துக்கமாக இருக்கிறோம் என உறுதியாக கூறவியலாது. அதாவது புறக்காரணங்களோ பிரச்சனைகளோ நம் மனச்சோர்வுக்கு தூண்டுகோல் அல்ல.
சர்வோத்தமன் கூறினார் “மனதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது இல்லையா? என்னதான் தெரிந்தாலும் அது ஒரு புதிர் இல்லையா?”
எனக்கு அப்போது மகிழ்ச்சி பற்றி ஒரு விசயம் தோன்றியது. மகிழ்ச்சியாய் இருந்தோம் என நாம் நினைப்பது மகிழ்ச்சி பற்றியல்ல. மகிழ்ச்சியாய் இருக்கிறோம் என நாம் நினைக்க துவங்கும் போது மகிழ்ச்சி முடிந்து போயிருக்கும். மகிழ்ச்சியில் இருப்பது மகிழ்ச்சியை பற்றி யோசிப்பது அல்ல. பல சமயங்களில் நம்மையே அறியாது தான் மகிழ்ச்சியாய் இருக்கிறோம். அதன் இனிமையை கூற ஆற அமர சுவைக்க முடிவதில்லை. அதனால் தான் மகிழ்ச்சியான நினைவுகளை தேக்கி வைக்க அவ்வளவு எத்தனிக்கிறோம்.
வருத்தமும் அப்படித் தான். வருத்தத்தின் பிரச்சனை வருத்தமாக இருக்கிறோம் என்கிற பிரக்ஞை தான். வருத்தத்தை சரி செய்வதை விட அந்த பிரக்ஞையை கடப்பது தான் நம் நோக்கமாய் இருக்க வேண்டும். அதுவே உதவக் கூடும்.
பிடித்த வேலைகள் – எழுதுவது, படிப்பது, விளையாடுவது, பயணிப்பது என எதுவும் – சிறுக சிறுக நம்மை மகிழ்ச்சியாய் வைத்திருந்து வருத்தம் பற்றின பிரக்ஞையை கடக்க உதவலாம். பின்னர் இலையுதிர் காலம் போல் மனச்சோர்வும் அகன்று விடும். ஏன் இதை சொல்கிறேன் என்றால் சில நாட்களில் நமது எந்த முயற்சியும் இன்றி தானாகவே மகிழ்ச்சியாய் நிம்மதியாய் இருப்போம். வாழ்க்கையில் சதா உற்சாகமாய் இருப்பவர்கள் அதற்காய் விரதமெல்லாம் இருப்பதில்லை. மழை பெய்வது போல் வெயிலடிப்பது போல் மகிழ்ச்சி வந்து போகிறது. அதை தக்க வைக்க ஏன் சிரமப்பட வேண்டும்? நாம் இந்த “பருவ மாற்றங்களினூடே” பட்டும்படாமல் வாழலாம். ஒரு மூங்கில் போல் நாம் வளைந்து வளைந்து நிமிர்ந்தால் ஒருக்காலும் ஒடிய மாட்டோம்.
மனம் ஒரு எலிப்பொறி தான். ஆனால் நாம் அப்படி நினைக்காதவரை அது அப்படி இல்லை.

No comments:

Post a Comment