Friday 6 February 2015

சீரீஸ் என்றொரு குட்டிக் கிரகத்தை நோக்கி விண்கலம்



செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையில் இருக்க வேண்டிய ஒரு கிரகத்தைக் காணோம் என்று சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மன் வானவியல் விஞ்ஞானி   ஒருவர் கூறினார். உடனே பல விஞ்ஞானிகள் “ வான் போலீஸ்” என்ற குழுவை அமைத்து டெலஸ்கோப்புகள் மூலம் வானில் தேட ஆரம்பித்தனர்.

அச்சமயத்தில் இக்குழுவில் சேராத பியாஸி என்ற இத்தாலிய விஞ்ஞானி ஒரு ’குட்டிக் கிரக’ த்தைக் கண்டுபிடித்தார். அது தான் சீரீஸ்(Ceres)எனப்படும் அஸ்டிராய்ட்  ஆகும். “காணாமல் போன” கிரகம் அதுவாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தனர். பின்னர் தான் எண்ணற்ற அஸ்டிராய்டுகளில் அதுவும் ஒன்று என்பது தெரிய வந்தது.

  ஒரு கிரகம் இருந்திருக்குமானால் அதற்கென ஒரு சுற்றுப்பாதை இருந்திருக்கும். விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ந்த போது மேற்படி சுற்றுப்பாதையில் ஒன்றல்ல, பல லட்சம் துண்டுப் பாறைகள் பறந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் அஸ்டிராய்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.
புள்ளி புள்ளியாக உள்ளவை அஸ்டிராய்டுகள். இவை செவ்வாயின் (Mars) மற்றும் வியாழனின் (Jupiter) சுற்றுப்பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளன.
 கிரிப் பிரதட்சிணம் செய்யும் பக்தர்களைப் போல இவை அனைத்தும் ஒழுங்காக சூரியனை சுற்றி வருகின்றன. இவை செல்லும் பாதையானது அஸ்டிராய்ட் வட்டாரம் (Asteroid Belt)  என்று அழைக்கப்படுகின்றது.

 அஸ்டிராய்டுகளில் உள்ள பெரிய துண்டு தான் சீரீஸ். அதன் குறுக்களவு வெறும் 950 கிலோ மீட்டர். அது சந்திரனையும் விடச் சிறியது.
வலது புறம் பூமி. இடது மேல் சந்திரன். இடது கீழ் சீரீஸ்
இப்போது அந்த சீரீஸை நோக்கி அமெரிக்க விண்கலம் டான் (Dawn) சென்று கொண்டிருக்கிறது. அது வருகிற மார்ச் மாதம்  6 ஆம் தேதி சீரீஸ் குட்டிக் கிரகத்தை நெருங்கி அதைச் சுற்ற ஆரம்பிக்கும்.

முதலில் 5000 கிலோ மீட்டர் உய்ரத்தில் இருந்தபடி சுற்றும். பிறகு கீழாக 1300 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி சுற்றும். பிறகு மேலும் நெருங்கி 700 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பறந்து கொண்டிருக்கும்.
சீரீஸ் படம். டான் விண்கலம் 12 லட்சம் கிலோ மீட்டரிலிருந்து எடுத்தது
சீரீஸ் அஸ்டிராய்ட்  சூரியனிலிருந்து சுமார் 41 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.( இத்துடன் ஒப்பிட்டால் பூமியானது சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது)

டான் விண்கலம் கடந்த 2007 ஆம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்டது. அது முதலில் வெஸ்டா (Vesta) எனப்படும் வேறு ஒரு அஸ்டிராய்டை  நெருங்கிச் சென்று ஆராய்ந்தது. அதை முடித்துக் கொண்டு டான் இப்போது சீரீஸை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

சீரீஸில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதற்கு அடியில் ஒருவேளை தண்ணீர் இருக்கலாம் என்ற ஒரு கருத்து உள்ளது.
 நாஸாவின் டான் விண்கலம்
அஸ்டிராய்டுகளை ஆராய்வதன் மூலம் சூரிய மண்டலத் தோற்றம் பற்றி மேலும் தகவல்களை அறிய முடியலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- என்.ராமதுரை

No comments:

Post a Comment